Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முக்கோண போட்டி தொடர்
அவுஸ்திரேலிய முக்கோண ஒருநாள் போட்டி தொடர் சூடுபிடித்துள்ள நிலையில் உள்ளது. மூன்று அணிகளும் இன்னும் தமக்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. முதல் சுற்று நிறைவடைய இன்னும் நான்கு போட்டிகள் மாத்திரமே உள்ளன. இதில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் தலா மூன்று போட்டிகளிலும், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் விளையாடவுள்ளன. கடந்த வாரத்தைப் பொறுத்த மட்டில் இலங்கை அணிக்கு நல்ல முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன. இரண்டு வெற்றிகள், ஒரு சமநிலையான முடிவு.
இந்திய அணிக்கு வெற்றி
கடந்த 12ஆம் திகதி அவுஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றது. மிக விறுவிறுப்பான போட்டி. கடைசி ஓவரில் வெற்றி பெற 13 ஓட்டங்கள் என்ற நிலையில் இந்திய அணி தலைவர் தோனியின் சிறந்த துடுப்பாட்டம் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டேவிட் ஹஸ்ஸி 72 ஓட்டங்களையும் தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய பீற்றர் பொரஸ்ட் 66 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களது நான்காவது விக்கெட் இணைப்பாட்டம் 97 ஓட்டங்களை தந்தது. மைக்கல் கிளார்க் 38 ஓட்டங்களையும், டானியல் கிறிஸ்டியன் 39 ஓட்டங்களையும் பெற்றனர். வலுவான நிலையில் இருந்த அவுஸ்திரேலிய அணியை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள், களத்தடுப்பாளர்கள் சிறப்பாக செயற்பட்டு இறுதி நேரத்தில் கட்டுப்படுத்தியமையால் 270 என்ற இலக்கு அவர்களுக்கு கிடைத்தது. பந்து வீச்சில் உமேஷ் யாதவ், வினைகுமார் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தடுமாறி வரும் இந்திய அணியின் துடுப்பாட்டம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. காம்பிர் நிலைத்து நின்று ஆட, மறுபுற விக்கெட்டுகள் தொடர்ச்சியான இடைவெளிகளில் வீழ்ந்தன. ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 52 ஓட்டங்களை தந்தது. ரோஹித் ஷர்மா (33 ), கம்பீர் ஆகியோருடைய மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டம் 76 ஓட்டங்களை தந்தது. கம்பீர் 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பின் சுரேஷ் ரெய்னா (38), டோனி ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்காக 61 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இறுதியில் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவை. அவுஸ்திரேலிய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய கிளின்ட் மக்கே பந்து வீச வெல்வது கஷ்டம் என்ற நிலையில் அதுவரை தனியே ஓட்டங்களை ஓடி எடுத்த டோனி அடித்த மிகப் பெரிய 6 ஓட்டம் இந்திய அணிக்கு வெற்றியை இலகுவாக்கியது. அடுத்த பந்து முறையற்ற பீமர் பந்து. பிடிக்கு இரண்டு ஓட்டங்கள். மொத்தமாக மூன்று ஓட்டங்கள். இரண்டு பந்துகள் மீதமிருக்க இந்திய அணி வெற்றி பெற்றது. பந்து வீச்சில் கிளின்ட் மக்கே 3 விக்கெட்டுகள். சேவியர் டோஹர்ட்டி 2 விக்கெட்கள். போட்டியின் நாயகனாக கம்பிர் தெரிவானார். மிக அபாரமான போட்டி. விறு விறுப்பான போட்டியாக இது அமைந்தது.
ஆச்சரிய சமநிலை முடிவு
அடுத்த போட்டி கடந்த போட்டியை தாண்டிய விறு விறுப்பு. இப்படி விறுவிறுப்பான போட்டிகள் அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக நடந்தால் எப்படி விறு விறுப்பை தாங்கி கொள்வது. அது மட்டுமல்லாமல் அபூர்வமாக சில பெறுதிகள் ஒரே மாதிரியாக அமைந்தது ஆச்சரியமாக மாறிப் போனது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 236 ஓட்டங்களைப் பெற்றது. தினேஷ் சந்திமால் 81 ஓட்டங்கள். குமார் சங்ககார 31 ஓட்டங்கள். தினேஷ் சந்திமால் இன்னிங்க்ஸை நிறைவு செய்ய பழகி கொள்ள வேண்டும். சிறந்த வீரர். ஓட்டங்களைப் பெறுகின்றார். சதம் நோக்கி போகக் கூடிய வாய்ப்புகளை தொடர்ந்து தவறவிடுகிறார். இந்திய அணியின் களத்தடுப்பு, பந்து வீச்சு நல்ல முறையில் அமைந்தது. பந்து வீச்சில் வினைகுமார் 3 விக்கெட்டுகளையும் அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பெறக் கூடிய இலக்கு. இந்திய அணியினர் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை பெற முடிந்ததே தவிர கூடுதலாக பெற முடியவில்லை. இந்த போட்டியிலும் முடித்து வைத்தவர் டோனி. இந்திய அணிக்கு தோல்வி என்ற நிலைதான் இருந்தது. கடைசி பந்தில் மூன்று ஓட்டங்கள் பெற்றால் சமநிலை என்ற நிலையில் அந்த ஓட்டங்களை ஓடி பெற்று சமநிலையான முடிவு பெறப்பட்டது. கடந்த போட்டி போன்றே ஒரு பக்க விக்கெட்கள் வீழ்த்தப்பட கம்பீர் நின்று நிலைத்து ஆடி 91 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். 6 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் என்ற நிலையில் கையில் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இறுதி ஓவர் ஆரம்பமானது. இந்த முறையும் டோனி முயற்சித்தார். பந்து வீசியவர் லசித் மாலிங்க. ஒருநாள் போட்டிகளின் தலை சிறந்த பந்து வீச்சாளர் என்ற நிலையில் உள்ளார். விடுவாரா? விறு விறுப்பான போட்டி. சமிலையான முடிவு. டோனி 58 ஓட்டங்கள் ஆட்டம் இழக்காமல். போட்டியின் நாயகனாக தெரிவானார். லசித் மாலிங்க, திசர பெரேரா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகள். நான்கு விக்கெட்டுகள் ரன் அவுட் முறையில் வீழ்ந்தன. போட்டி நிறைவடைந்ததும் இன்னும் ஒரு சர்ச்சை கிளம்பியது. போட்டியின் 30ஆவது ஓவரில் ஐந்து பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. இந்திய அணிக்கு ஒரு பந்து குறைவாகவே கிடைத்தது. அந்த பந்து கிடைத்து இருந்தால் போட்டியின் முடிவு எப்படி வேண்டும் என்றாலும் மாறி இருக்கலாம். வாய்ப்புக்கள் இந்திய அணி பக்கம் அதிகம் என்ற நிலை. ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலை.
இந்த போட்டியில் சமநிலையில் அமைந்த சில முக்கிய பெறுதிகள். ஓவர்கள் 50, ஓட்டங்கள் 236, விக்கெட்கள் 9, உதிரி ஓட்டங்கள் 8, சிக்சர்கள் 2, நான்கு ஓட்டங்கள் 15, விக்கெட் காப்பாளரிடம் பிடிகள் 2, பந்துகளை எதிர்கொள்ளாத வீரர்கள் 2 பேர், இரண்டு அணியிலும் பந்து வீசியவர்கள் 6 பேர், நூறு அல்லது அதற்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் கொண்டவர்கள் 2 பேர். எப்படி சமநிலை என்று பார்த்தீர்களா?
அவுஸ்திரேலியாவை இலகுவாக தோற்கடித்தது இலங்கை
17ஆம் திகதி அவுஸ்திரேலிய, இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது. மழை காரணமாக போட்டி 41 ஓவர்களாக மாற்றப்பட்டது. ஆரம்பம் முதல் இலங்கை அணி - அவுஸ்திரேலிய மீது பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியமையினால் ஓவர்கள் மாற்றமும் கூட எதையும் செய்யவில்லை. அவுஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் ஹஸ்ஸி 58 ஓட்டங்கள். பந்து வீச்சில் பார்வீஸ் மஹ்ரூப், திசர பெரேரா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகள். இலங்கை அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் இப்படி என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மஹேல ஜெயவர்தன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். நல்ல ஆரம்பம். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 74. டில்ஷான் 45. மஹேல ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்கள். குமார் சங்ககார 30 ஓட்டங்கள். ப்ரெட் லீ, கிளின்ட் மக்கே ஆகியோர் தல ஒவ்வொரு விக்கெட்டுகள். கிளார்க்கின் உபாதை காரணமாக பொன்டிங் தலைமை பொறுப்பை ஏற்றார். இப்போ எல்லாம் போய் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலக வேண்டிய நிலையும் வந்து விலகியும் விட்டார். போட்டியின் நாயகனாக திசர பெரேரா தெரிவானார்.
இந்தியாவை உருட்டிய அவுஸ்திரேலியா
அடுத்த போட்டி இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இந்திய அணிக்கு மிகப் பெரிய தோல்வி. இந்திய அணியை இப்போது கணிக்க முடியாத நிலையில் உள்ளது. இந்த ஏழாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 288 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மைக்கல் ஹஸ்ஸி 59, பீற்றர் போறேஸ்ட் 52 ஓட்டங்களைப் பெற்றனர். மத்தியூ வடே 45 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 43 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணியின் பந்து வீச்சில் இர்பான் பதான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பதிலளித்த இந்திய அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்தன. ஓர் இணைப்பாட்டம் தானும் 50 ஓட்டங்களைத் தாண்டவில்லை. அவ்வளவு மோசமான ஆடுகளங்கள் என்று சொல்லவதற்கு எதுவும் இல்லை. டோனி மாத்திரம் கடந்த போட்டிகள் போன்று போராடினர். 56 ஓட்டங்கள். டோனி இந்திய அணியை பொறுப்பெடுத்த வேளையில் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு மீண்டும் அணி சென்றுவிட்டது. மீளக் கட்டி எளுப்புவது கட்டாயம். அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் பெண் கில்பான்ஹோஸ் 5 விக்கெட்டுகள். இந்திய அணி அபார மீள் வருகையை கொடுத்த வீரர் என்றால் இவருக்கு தான். டெஸ்டில் விக்கெட்டுகளை அள்ளி எடுத்தவர் தற்போது ஒருநாள் போட்டிகளிலும் செய்து காட்டிவிட்டார். நிச்சயமான வாய்ப்பு இனி உண்டு. ப்ரெட் லீ 3 விக்கெட்டுகள். போட்டியின் நாயகனாக ஹில்பான்ஹோஸ் தெரிவானார். அவுஸ்திரேலிய அணிக்கு போனஸுடன் 5 புள்ளிகள்.
ரன் அவுட் சர்ச்சை - இலங்கை அணிக்கு வெற்றி
எட்டாவது போட்டி இலங்கை - இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலமாக இறுதிப் போட்டிக்கான வாய்ப்புக்களை இந்திய அணியிலும் பார்க்க அதிகமாக பெற்றுள்ளது என்று சொல்லலாம். இரண்டாம் இடத்துக்கு வந்து விட்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பம் நல்ல முறையில் உள்ளது. இனிமேல் மஹேல மத்திய வரிசைக்கு போவது பற்றி நினைத்து பார்க்கக்கூடாது. ஆனால் பாவம் உப்புல் தரங்க. டில்ஷானிலும் பார்க்க அண்மைக்காலமாக ஓட்டங்களை அதிகமாக பெற்றவர் அவரே. அவருடைய வாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டது. 95 ஓட்டங்கள் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம். மஹேல ஜெயவர்தன 45, டில்ஷான் 51 ஓட்டங்கள். மதிய வரிசையில் இலங்கையின் அபார கண்டு பிடிப்புக்கள் என்று சொல்லக் கூடிய அளவில் தினேஷ் சந்திமால், லஹிறு திரிமன்னே ஆகியோர் தம்மை நிரூபித்து காட்டி விட்டனர். சந்திமால் 38, திரிமன்னே 69. திரிமன்னேக்கு நல்ல வாய்ப்பு. ஆட்டம் இழப்பை இந்திய விட்டுக் கொடுக்க தொடர்ந்தும் ஓட்டங்களை குவித்தார். புதிய ரன் அவுட் விதி முறைப்படி அவர் ஆட்டம் இழந்தார். உண்மையில் இது இரு பக்க கருத்துக்களை உருவாக்கியுள்ளது. கனவான் தன்மை, விதிமுறைகளுக்கிடையிலான வாதமாக மாறிப் போனது. அஷ்வின் பந்து வீசிய வேளையில் திரிமன்னே எல்லைக் கோட்டை தாண்டி வெளியே சென்று விட்டார். விக்கெட்டை அஷ்வின் தகர்த்து ஆட்டம் இழந்ததாக கோர நடுவர் போல் ரைபிள் மற்றைய நடுவர் பில்லி பௌடன் உடன் கலந்து பேசிவிட்டு ஆட்டம் இழப்பு, ஆனால் கோரியது நீங்கள். என்ன செய்யப் போகிறீர்கள் என கோர, சச்சின் தலையிட்டு ரத்து செய்தார். திரிமன்னே தொடர்ந்து விளையாடினார். அண்மையில் இந்த விதி முறையை இறுக்கமாக்கியது சர்வதேச கிரிக்கெட் பேரவை. கனவான் தன்மை முக்கியமா, விதி முக்கியமா என அவர்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இப்படி சில ஆட்டமிழப்புக்கள் நடை பெற்றுள்ளன. எதேற்சையான சந்தர்ப்பங்கள் அல்லது விபத்து என்றால் அதை ஏற்கலாம். ஆனால் இது அந்த முறைக்குள் இல்லை. நடுவர்களும் நேரடியாக ஆட்டமிழப்பு வழங்காமல் கலந்தாலோசித்து, சேவாக்கிடம் கோரியது எந்தளவுக்கு ஏற்புடையது எனபது கேள்வியே? ஆனால் இந்திய வீரர்கள் பின் யோசித்திருப்பார்கள் ஏன் ஆட்டமிழப்பை பின் வாங்கினோம் என்று. திரிமன்னே சரி விட்டுத் தந்து விட்டார்கள் தானே, இனி சரியாக நடப்போம் என சிந்திக்கவில்லை. தொடர்ந்தும் அவ்வாறே செயற்பட்டார். ஒரு இளவயது வீரராக புதிய வீரராக இவற்றையும் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். இது அவசியமும் கூட. இந்திய அணியின் பந்து வீச்சில் இர்பான் பதான், அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள். பதிலளித்த இந்திய அணி போராடும் என்று பார்த்தால் தொடர்ச்சியான இடை வெளிகளில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. கோளி, ரெய்னா ஆகியோருடைய இணைப்பாட்டம் 92 ஓட்டங்களை தந்தது. இந்திய அணியின் அண்மைக் கால ரன் இயந்திரம் கோளி 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி உறுதியானது. பதான் போராடி 47 ஓட்டங்கைப் பெற்றார். இந்திய அணியில் அவருக்கு தொடர் வாய்ப்புக்கள் கிடைக்கும் போல் தென்படுகிறது. பிரவீன் குமாருக்கு ஏன் வாய்ப்பில்லை என்பது பெரிய கேள்வியே? சில நேரங்களில் இந்திய அணி கூடுதலாக முயற்சித்து கோட்டை விடுகிறதோ என என்ன தோன்றுகிறது. 238 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் 45.1 ஓவர்களில் இந்தியா இழந்தது. பந்து வீச்சு மாற்றம் எவ்வளவு முக்கியம் எனபதை அழகாக மஹேல இந்த போட்டியில் செய்து காட்டினார். பந்து வீச்சு மாற்றமும் வெற்றிக்கு முக்கியமாக இருந்தது. திசர பெரேரா 4 விக்கெட்டுகள். குலசேகர ஆரம்பத்தில் மிக அருமையாக பந்து வீசினார். இறுதி நேரத்தில் ஓட்டங்களை வழங்கியிருந்தாலும் அவரின் ஆரம்பமே போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. பிடிகளையும் எடுத்து கலக்கிய அவர் போட்டியின் நாயகனாக தெரிவானார். இலங்கை அணிக்கு நான்கு புள்ளிகள் கிடைத்தன.
இதுவரை நிறைவடைந்துள்ள போட்டிகளின் படி புள்ளி விபரங்கள்
அவுஸ்திரேலிய 5 3 2 0 14 +0.433
இலங்கை 5 2 2 1 11 +0.481
இந்தியா 6 2 3 1 10 -0.733
(போட்டிகள் , வெற்றி , தோல்வி , சமநிலை , புள்ளிகள் ஓட்ட நிகர சராசரி வேகம் )
பாகிஸ்தானுக்கு பதிலுக்கு வெள்ளையடித்து இங்கிலாந்து அணி
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடரில் இவ்வளவு மோசமாக பாகிஸ்தான் அணி பெறு பேறுகளை காட்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவு ஆதிக்கம் செலுத்திவிட்டு ஒருநாள் போட்டிகளில் இவ்வளவு மோசமான தோல்விகள். கிரிக்கெட்டில் எதிர்வு கூறல்கள் கஷ்டம்தான் போல் இருக்கிறது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் நான்கிலும் தோல்வி. அதிலும் மோசமான தோல்விகள். எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள். ஒருநாள் போட்டி என்றால் அவ்வளவு இல்லை. உலக கிண்ண போட்டி தொடருக்கு பின் பாகிஸ்தான் அணிக்கு முதல் தொடர் தோல்வி.
மோசமான முதல் தோல்வி
இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 13ஆம் திகதி நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தலைவர் அலிஸ்டர் குக்கின் சிறந்த துடுப்பாட்டத்துடன் 260 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குக் 137 ஓட்டங்கள். இது அவருடைய மூன்றாவது சதம் என்பதுடன் இதுதான் அவருடைய கூடிய ஓட்டமும் கூட. ரவி போபர 50 ஓட்டங்கள். இருவருடைய இணைப்பாட்டம் மட்டும் 129. மற்றவர்கள் பெரிதாக சாதிக்கவில்லை. பந்து வீச்சில் சைட் அஜ்மல் 5 விக்கெட்கள். சாஹிட் அப்ரிடி 2 விக்கெட்டுகள். பதிலளித்த பாகிஸ்தான் அணி 130 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. மிக மோசமான துடுப்பாட்டம். 30 ஓட்டங்களை கூட எவரும் தொடவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என புலம்பிக் கொண்டு இருந்த ஸ்டீபன் பின் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகள். சமிட் பட்டேல் 3 விக்கெட்கள். இவருக்கும் இனி ஒருநாள் அணியில் நிரந்தர இடம் உண்டு. அலிஸ்டர் குக் போட்டியின் நாயகன்.
தொடரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து அணி
இரண்டாவது போட்டி ஓரளவு விறுப்பான போட்டி என சொல்லலாம். 20 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் அணித் தலைவர் அலிஸ்டர் குக் சதம் அடித்தார். கடந்த போட்டி போன்றே அதே ஜோடி இணைப்பாட்டம் புரிந்தது. 78 ஓட்டங்களை ரவி போபர, குக் இருவரும் பகிர்ந்தனர். குக் 102 ஓட்டங்கள். ரவி போபர 58 ஓட்டங்கள். கடந்த போட்டி போல் அல்லாமல் இந்த போட்டியில் மற்றைய வீரர்களும் இணைப்பாட்டங்களைக் கொடுத்தனர். சகல இணைப்பாட்டங்களும் 50 ஓட்டங்களை தாண்டி இருந்தன. பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஐசாஸ் சீமா 2 விக்கெட்டுகள். பதிலளித்த பாகிஸ்தான் அணி 230 ஓட்டங்களைப் பெற்று 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இம்ரான் பாராட், மிஸ்பா உல் ஹாக் ஆகியோர் தலா 47 ஓட்டங்களைப் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஸ்ட்பின் பின் இந்த போட்டியிலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கான இடம் உறுதியாகி விட்டது. போட்டியின் நாயகன் சதம் அடித்த குக். தொடரை தன் கட்டுப் பாட்டுகள் இங்கிலாந்த்து கொண்டு வந்தது இந்த வெற்றியின் மூலமாக.
தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி
மூன்றாவது போட்டி பாகிஸ்தான் அணிக்கு இன்னுமொரு மோசமான தோல்வியை தந்து. கடந்த போட்டிகளில் பந்து வீச்சு ஓரளவு நன்றாக இருந்தது. இந்த போட்டியில் நிலைமை மாறிப்போனது. முதலில் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. 97 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த உமர் அக்மல் (50), சாஹிட் அப்ரிடி (51) ஆகியோர் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து கௌரவமான ஓட்ட எண்ணிக்கைக்கு வழி செய்தனர். ஸ்டீபன் பின், ஸ்டுவோர்ட் பரோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள். ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்கள். பதிலளித்த இங்கிலாந்து அணி இலகுவான 9 விக்கெட்டுகளிலான வெற்றியைப் பெற்றது. ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 170 ஓட்டங்கள். அலிஸ்டர் குக் ஹாட்ரிக் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடந்த இரண்டு போட்டியிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பீற்றர்சன் விட்டதை பெற்றது போல் சதம் அடித்தார். ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்கள். இது அவருடைய 8ஆவது சதமாகும். போட்டியின் நாயகனும் அவரே. இந்த வெற்றியின் மூலமாக தொடர் இங்கிலாந்து வசமானது.
வெள்ளையடித்து இங்கிலாந்து அணி
நான்காவதும் இறுதியுமான போட்டி. பாகிஸ்தான் அணி ஏதாவது செய்து காட்டும் என்று பார்த்தால் இதிலும் சொதப்பினார்கள். இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றது. நான்கு போட்டிகளிலும் அவர்களுடைய சகல விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டுள்ளன. ஆசட் சபிக் 65 ஓட்டங்களையும், ஆசர் அலி 58 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக டேர்ன்பக் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டீபன் பின் 2 விக்கெட்டுகள். பதிலளித்த இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 241 ஓட்டங்களைப் பெற்றது. மீண்டும் சதமடித்தார் கெவின் பீற்றர்சன். தனித்து அடித்து கொடுத்து போல் ஆனது சதம். 130 ஓட்டங்களைப் பெற்றார். கிறைக் குயிஸ்வெட்டார் 43 ஓட்டங்கள். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சைட் அஜ்மல் 3 விக்கெட்டுகள். போட்டியின் நாயகன் பீற்றர்சன்.
இந்த தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
அலிஸ்டர் குக் 4 323 137 80.75
கெவின் பீற்றர்சன் 4 281 130 93.66
ரவி போபர 3 108 58 54.00
மிஸ்பா உல் ஹாக் 4 108 47 27.00
சாஹிட் அப்ரிடி 4 106 51 26.50
இந்த தொடரில் கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
ஸ்டீபன் பின் 4 134/13 34/4 10.30
சைட் அஜ்மல் 4 199/10 43/5 19.90
ஸ்டுவோர்ட் பரோட் 3 117/5 42/3 23.40
சமிட் பட்டேல் 4 169/5 26/3 33.80
தென் ஆபிரிக்க அணி 20 - 20 தொடரில் வெற்றி
தென் ஆபிரிக்க - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று 20-20 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று தொடரை தென் ஆபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.
முதல் போட்டி நியூசிலாந்து வெலிங்கடனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜேபி டுமினி 41 ஓட்டங்களையும் ஜஸ்டின் ஒன்டோங் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ரிம் சௌதி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பதிலளித்த நியூசிலந்து அணி 4 பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்றது. இதில் மார்டின் கப்டில் ஆட்டம் இழக்காமல் 78 ஓட்டங்களைப் பெற்றார். தனித்து நின்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் மோர்னி மோர்கல், தெரோன், டுமினி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகன் மார்டின் கப்டில்.
அடுத்த போட்டி ஹமில்டனில் நடைபெற்றது. இதில் தென்ஆபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. மார்டின் கப்டில் 47 ஓட்டங்கள். பிரென்டன் மக்கலம் 35 ஓட்டங்கள். பந்து வீச்சில் ஜொஹன் போதா, மெர்ச்சன்ட் டி லங்கே, மோர்னி மோர்க்கல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகள். முதல் போட்டியில் அறிமுகமாகிய ரிச்சர்ட் லெவி மிக அபாரமாக துடுப்பெடுத்தாடி 51 பந்துகளில் 117 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றார். போட்டியின் நாயகனும் அவரே. ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்கள். 16 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தனர். இந்த போட்டியில் லெவி அடித்த 13 சிக்சர்கள் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட கூடுதலான சிக்சர்கள் ஆகும். இதற்கு முதல் க்றிஸ் கெயில் அடித்த 10 சிக்சர்களே சாதனையாக இருந்தது.
மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஒக்லாந்தில் நடைபெற்றது. ஜேபி டுமினி 38, ஹசிம் அம்லா 33 ஓட்டங்களைப் பெற 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை தென் ஆபிரிக்க அணி பெற்றது. பந்து வீச்சில் ரிம் சௌதி, ரோப் நிகோல் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பதிலளித்த நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. ஜெசி ரைடர் 52 ஓட்டங்களையும், ரோப் நிகோல் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மெர்ச்சன்ட் டி லங்கே, ஜோகன் போதா, மோர்னி மோர்க்கல் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுகள். வெற்றி பெறவேண்டிய போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைப் பெற்றுள்ளது. ஜெசி ரைடர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. தனது அரைச் சததுக்காக மெதுவாக விளையாடி போட்டி தோற்க காரணமா இருந்தார் என்ற சர்ச்சையே அது. ஒரு கட்டத்தில் கையில் 6 விக்கெட்டுகள் உள்ளன. 26 பந்துகளில் 24 ஓட்டங்கள் தேவை. இது பெற முடியாத இலக்கா? ரெய்டர் 13 பந்தலில் 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார். அரைச்சதம் பெற தேவையான ஒரு ஓட்டத்துக்கு 7. பந்துகளை அவர் சந்தித்துள்ளார். இந்த போட்டியின் நாயகனாக ஜொகான் போதா தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago