2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கடந்த வார களங்கள் (ஏப்ரல் 08 – 14)

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுமாறி வென்ற அவுஸ்திரேலிய அணி

கடந்த வாரத்தில் சர்வதேசப் போட்டிகளில் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி மட்டுமே இடம்பெற்றது. மற்றப்படி ஐபிஎல் போட்டிகளே விறு விறுப்பாக இடம்பெற்றன. ஆனால் ஐபிஎல் போட்டிகளின் விறு விறுப்புகளுக்கு மத்தியில் மிக அபாரமான ஒரு டெஸ்ட் போட்டியும் இடம்பெற்றது. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுக் கொண்டது. மேற்கிந்திய தீவுகளின் வழமையான பாணி. வாய்ப்பு இருந்தும் இரண்டாவது இன்னிங்ஸின் மோசமான துடுப்பாட்டம் காரணமாக வெற்றியை தவற விட்டார்கள். ஆனால் அவுஸ்திரேலிய அணி போராடியே வெற்றி பெற்றது. அவர்களாலும் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக துடுப்பெடுத்தாட முடியவில்லை. இவற்றையெல்லாம் விட பெரிய விடயம் போட்டி சமநிலையில் முடிவடையக்கூடிய வாய்ப்பும் இருந்தது. சீரற்ற காலநிலை இதற்க்கு காரணமாக அமைந்தது. மழையின் குறுக்கீட்டுக்கு மத்தியிலேயே இந்த வெற்றியை அவுஸ்திரேலிய அணியால் பெற முடிந்தது.


இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி நல்ல ஆரம்பத்தை உருவாக்கியது. 9 விக்கெட் இழப்பிற்கு 449 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சிவ்நறேயன் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்றார். கேர்க் எட்வேர்ட்ஸ் 61 ஓட்டங்களையும் கிறைக் பிரத்வைட் 57 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பரவலாக எல்லோரும் நல்ல முறையில் பந்து வீசினார்கள். 6 பேர் விக்கெட்களைக் கைப்பற்றினர். ரயன்ஹரிஸ், டேவிட் வோர்னர் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முதல் இன்னிங்சில் இப்படி ஒரு நல்ல ஓட்ட எண்ணிக்கையை பெற்று விட்டால் தோல்வியில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியால் அது முடியாமல் போனது. பதிலளித்த அவுஸ்திரேலிய அணி ஆரம்ப விக்கெட்களை ஓரளவு வேகமாக இழந்தாலும், கீழ் மத்திய வரிசை, பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான துடுப்பாடத்தின் மூலம் 400 ஓட்டங்களை தாண்டியது. 250/7 என்ற நிலையில் இருந்து 406 ஓட்டங்களைப் பெற்றமை பெரிய விடயமே. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் மைக்கல் கிளார்க் 73 ஓட்டங்கள். ரயன் ஹரிஸ் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்கள். மைக்கல் ஹஸ்ஸி 48 ஓட்டங்கள். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கிமர் ரோச் 3 விக்கெட்களையும், பிடல் எட்வேர்ட்ஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். மேற்கிந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை தொடாமலே அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்களுடன் துடுப்பாட்டத்தை நிறுத்தியது மேற்கிந்திய அணியை கட்டுப்படுத்தவே. அது அவர்களுக்கு கை கொடுத்தது. 

மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் இன்னும் கொஞ்சம் நிதானமாக துடுப்பெடுத்தாடி கொஞ்சம் கூடுதலான ஓட்டங்களைப் பெற்று இருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியும். அல்லாவிட்டால் சமநிலையிலாவது முடித்து இருக்க முடியும். மேற்கிந்திய தீவுகள் அணி 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. டரின் பிராவோ 32 ஓட்டங்கள். பந்து வீச்சில் பென் ஹில்பான்ஹோஸ் 4 விக்கெட்கள். ரயன் ஹரிஸ் 3 விக்கெட்கள். ஆரம்ப விக்கெட்கள் மிக வேகமாகவே விழுந்தன. அவுஸ்திரேலிய அணியின் யுக்தி சரியாக அமைந்தது. தேநீர் பான இடைவேளைக்கு முன் ஆட்டத்தை இடை நிறுத்தியவர்கள் அன்றைய நான்காம் நாள் நிறைவடையும் வேளையில் 5 விக்கெட்களைக் கைப்பற்றினர். மதிய போசன இடைவேளையின் போது மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்களையும் இழந்தது. அவுஸ்திரேலிய அணிக்கு 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு. வேகமாகவும் துடுப்பாட வேண்டும் என்ற நிலை அவர்களுக்கு. 54 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை. 47 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தார்கள். ஷேன் வொட்சன் 52 ஓட்டங்கள். எட் கோவன் 34 ஓட்டங்கள். பந்து வீச்சில் நரசிங் டினோரையின் 4 விக்கெட்கள். கிமர் ரோச் 2 விக்கெட்கள். போட்டியின் நாயகன் ரயன் ஹரிஸ். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணி 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.



ஐபிஎல் கடந்த வாரம்

ஐபிஎல் போட்டிகள் கடந்த வாரத்தில் ஆரம்பித்து இருந்தது. 6 போட்டிகள் நிறைவடைந்து இருந்த நிலையில் இந்த வாரத்தில் மேலும் 10 போட்டிகள் நடைபெற்றன. விறுவிறுப்பான போட்டிகள். சில மாற்றங்கள் என சுவாரசியமாகவே இருந்துள்ளன. அந்த வகையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற முதற்போட்டி ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில். இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பிரட் ஹொட்ஜ் 44 ஓட்டங்களையும் அசோக் மெனேறியா 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ப்ரெட் லீ 2 விக்கெட்கள். பதிலளித்த கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் மனோஜ் திவாரி 59 ஓட்டங்கள். ப்ரெட் லீ 25 ஓட்டங்கள். பந்து வீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக கேவோன் கூப்பர் 3 விக்கெட்கள். அங்கீத் சவான், அமித் சிங்க், சிதார்த் திரிவேதி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக பிரட் ஹொட்ஜ் தெரிவானார். இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடை பெற்றது.


அதே தினம் இரண்டாவது போட்டி பூனே வொரியேர்ஸ், கிங்க்ஸ்11 பஞ்சாப் அணிகளுக்கிடையில் பூனேயில்நடை பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பூனே வொரியேர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மார்லன் சாமுவேல்ஸ் 46 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கிங்க்ஸ்11 பஞ்சாப் அணி சார்பாக ஹர்மீத் சிங்க் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிங்க்ஸ்11 பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பிபுள் ஷர்மா 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ராகுல் ஷர்மா 2 விக்கிகள். பூனே வொரியேர்ஸ் அணி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. போட்டியின் நாயகன் மார்லன் சாமுவேல்ஸ்.


அடுத்த நாளான ஒன்பதாம் திகதி டெக்கன் சார்ஜஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விசாகப் பட்டணத்தில் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கன் சார்ஜஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஷிகார் தவான் 41 ஓட்டங்களையும், டானியல் கிறிஸ்டியன் 39  ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் முனாப் பட்டேல் 4 விக்கெட்கள், லசித் மாலிங்க 3 விக்கெட்கள், கிரான் போலர்ட் 2 விக்கெட்கள். பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா 73 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல். கிரான் போலர்ட் 24  ஓட்டங்கள். பந்து வீச்சில் டெக்கன் சார்ஜஸ் அணி சார்பாக டேல் ஸ்டெயின் 3 விக்கெட்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. போட்டியின் நாயகன் ரோஹித் ஷர்மா.


10ஆம் திகதி இரண்டு போட்டிகள் இடம்பெற்றன. முதற்ப் போட்டி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில், பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கெளதம் கம்பீர் ஓட்டங்களையும் மன்விந்தர் பிஸ்லா 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சகீர் கான், வினை குமார், முரளிதரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். பதிலளித்த பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் வினை குமார் 25 ஓட்டங்கள். பந்து வீச்சில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக லக்சுமிபதி பாலாஜி 18 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்கள். ஜாக்ஸ் கலிஸ், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். போட்டியின் நாயகனாக லக்சுமிபதி பாலாஜி தெரிவானார்.


அதே தினம் இரண்டாவது போட்டி டெல்லி டெயா டெவில்ஸ், சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணிகளுக்கிடையில் டெல்கியில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் டெல்லி டெயா டெவில்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுவைன் பிராவோ 22 ஓட்டங்கள். டெல்லி டெயா டெவில்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் மோர்னி மோர்க்கல் 19 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்கள். 4 விக்கெட்கள் ரன் அவுட் மூலம் வீழத்தப்பட்டன. பதிலளித்த டெல்லி டெயா டெவில்ஸ் அணி 13.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் கெவின் பீற்றர்சன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்கள். விரேந்தர் சேவாக் 33 ஓட்டங்கள். பந்து வீச்சில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி சார்பாக அஷ்வின் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக மோர்னி மோர்க்கல் தெரிவானார்.


ஏப்ரல் 11ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் மும்பையில் நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கிரான் போலர்ட் 33 பந்துகளில் 64 ஓட்டங்கள். அம்பாத்தி ராயுடு 47 ஓட்டங்கள். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் அமித் சிங்க், பிரட் ஹொக் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலழித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் உவைஸ் ஷா 74 ஓட்டங்கள், அஜின்க்ய ரகனே 40 ஓட்டங்கள். பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக முனாப் பட்டேல் 4 விக்கெட்கள், கிரான் போலர்ட் 4 விக்கெட்கள். போட்டியின் நாயகனாக கிரான் போலர்ட் தெரிவானார். மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


12ஆம் திகதி இடம்பெற்ற முதற்ப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 5 விக்கெட்களால் பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணியை வெற்றி பெற்றது.  நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றது. இதில் க்றிஸ் கேயில் 68 ஓட்டங்கள், விராத் கோளி 57 ஓட்டங்கள், மயன்க் அகர்வால் 45 ஓட்டங்கள். சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் டக் போலின்ஜர் 3 விக்கெட்கள். அல்பி மோர்க்கல், ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். பதிலளித்த சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி இறுதி இரண்டு ஓவர்களில் பெற்ற 45 ஓட்டங்கள் மூலமாக வெற்றி பெற்றது. இதில் ஒரு ஓவரில் அல்பி மோர்க்கல் 28 ஓட்டங்களைப் பெற்றார். அது விரத் கோளியின் 19ஆவது ஓவர். இறுதி ஓவரில் 17 ஓட்டங்கள் பெறப்பட்டு வெற்றி சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணிக்கு கிடைத்தது. அணியின் தலைவர் டானியல் வெட்டோரியின் பிழையான பந்து வீச்சு மாற்றமும் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பஅப் டு ப்லேசிஸ் 71 ஓட்டங்கள். டோனி 41 ஓட்டங்கள். பந்து வீச்சில் பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி சார்பாக முரளிதரன் 21 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்கள். போட்டியின் நாயகனாக பஅப் டு ப்லேசிஸ் தெரிவானார்.


அதே தினத்தில் இரண்டாவது போட்டியாக கிங்ஸ் 11 பஞ்சாப், பூனே வொரியேர்ஸ் அணிகளுக்கிடையில் மொஹாலியில்  நடைபெற்றது. இது இந்த இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற இரண்டாவது போட்டி. முதற்ப் போட்டியில் பூனே வொரியேர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. பூனே வொரியேர்ஸ் அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மிதுன் மன்ஹாஸ் 31 ஓட்டங்கள். பந்து வீச்சில் கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணி சார்பாக டிமிட்ரி மஸ்ஹரனாஸ் 25 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்கள். ஹர்மீத் சிங்க் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஷோன் மார்ஸ் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள். போட்டியின் நாயகன் டிமிட்ரி மஸ்ஹரனாஸ்.


ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி கொல்கொத்தாவில் 13ஆம் திகதி நடைபெற்றது. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உவைஸ் ஷா 31 ஓட்டங்களையும், ராகுல் டிராவிட் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சகிப் அல் ஹசன் 17 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்கள். பதிலளித்த கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி விக்கெட்களால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜக்ஸ் கலிஸ் 31 ஓட்டங்கள், மன்விந்தர் பிஸ்லா 29 ஓட்டங்கள். போட்டியின் நாயகனாக சகிப் அல் ஹசன்  தெரிவானார்.


சென்னை சுப்பர் கிங்க்ஸ், பூனே வொரியேர்ஸ் அணிகளுக்கிடையில் ஏப்ரல் 14ஆம் திகதி பூனேயில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரவீந்தர் ஜடேஜா 44 ஓட்டங்கள், பஅப் டு ப்லேசிஸ் 43 ஓட்டங்கள். பூனே வொரியேர்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் ராகுல் ஷர்மா 2 விக்கெட்கள். பதிலளித்த பூனே வொரியேர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜெசி ரெய்டர் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்கள். ஸ்டீபன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள். அணி 7 விக்கெட்களால் வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக ஜெசி ரெய்டர் தெரிவானார்.


ஏப்ரல் மாத உதைபந்தாட்ட தரப்படுத்தல்கள்

உலகக் கிண்ண போட்டிகளின் பின் தரப்படுத்தல்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்பெயின் அணி தொடர்ந்தும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. 1442 புள்ளிகளுடன் முதல் இடம் ஸ்பெயின் அணிக்கு. ஆனாலும் கடந்த மாதத்தில் இருந்து 119 புள்ளிகளை இழந்துள்ளனர். இரண்டாமிடத்தை நெதர்லாண்ட்ஸ் அணி இழந்துள்ளது. இரண்டு இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது. ஜெர்மனி அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 1345 புள்ளிகளை ஜெர்மனி அணி பெற்றுள்ளது. உருகுவே அணி மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது. 1309 புள்ளிகள். நெதர்லாண்ட்ஸ் அணி 1207 புள்ளிகளுடன் நான்காமிடம். நெதர்லாண்ட்ஸ் அணி இழந்த 172 புள்ளிகளே ஜெர்மனி, உருகுவே அணிகளின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தன. அடுத்த ஐந்தாமிடத்தில் போர்த்துக்கல் அணி உள்ளது. அவர்கள் இரண்டு இடம் முன்னோக்கி வந்துள்ளனர். 1190 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பிரேசில், இங்கிலாந்து அணிகள் தலா ஒவ்வொரு இடம் பின்னோக்கி சென்றுள்ளன. பிரேசில் அணி 1165 புள்ளிகளையும், இங்கிலாந்து அணி 1132 புள்ளிகளையும் பெற்றுள்ளது. குரேசிய, டென்மார்க் அணிகள் தலா இவ்விரு இடங்கள் முன்னோக்கி வந்துள்ளன. குரேசிய அணி 1114 புள்ளிகளுடன் 8ஆம் இடம். 9ஆம் இடம் டென்மார்க் அணி 1069 புள்ளிகள். அர்ஜென்டினா அணி இரண்டு இடங்கள் பின்னோக்கி சென்று 10ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 10 இடங்கள்
ரஷ்யா                  1049
இத்தாலி              1041
சிலி                          967
கிரீஸ்                     961
ஐவரி கோஸ்ட்   951
பிரான்ஸ்               938
சுவீடன்                   931
ஐயர்லாந்து           891
சுவிசர்லாந்து       891
மெக்ஸிகோ         868

இந்த தரப்படுத்ததில் அதிக முன்னேற்றம் கண்ட நாடு தென் கொரியா. 25 இடங்கள் முன்னோக்கி வந்து 86ஆம் இடத்தில் தரப்படுத்தப் பட்டுள்ளது. 377 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 78 புள்ளிகள் அதிகமாக பெற்றதன் மூலம் இந்த முன்னேற்றம் கிடைத்தது. இதேவேளை ஜோர்ஜிய அணி மிக பெரிய வீழ்ச்சி கண்ட அணி. 21 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளனர். 95ஆம் இடத்தில் அவர்கள் உள்ளனர் 360 புள்ளிகளுடன். 102 புள்ளிகளை இழந்ததன் மூலமே இந்த நிலை ஏற்பட்டது. இலங்கை அணியைப் பொறுத்தவரையில் 181ஆம் இடம். 6 இடங்கள் முன்னோக்கி வந்தே இந்த இடத்தைப் பெற்றுள்ளனர். பெற்றுள்ள புள்ளிகள் 82. 20 புள்ளிகளை கடந்த தரப் படுத்தலிலும் பார்க்க கூடுதலாக பெற்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .