
32 நாடுகள், 32 நாட்கள் மோதிய உலகக்கிண்ணம் - திங்கள் அதிகாலை விறுவிறுப்பான 120 நிமிடப் போராட்டத்தின் பின்னர் உலகுக்கு புதிய சம்பியனைத் தந்துள்ளது.
.jpg)
24 ஆண்டுகளின் பின்னர் ஜேர்மனிக்கு உலகக்கிண்ணம். கிழக்கும் மேற்கும் சேர்ந்த பிறகு ஐக்கிய ஜேர்மனியாக முதலாவது உலகக்கிண்ணம்.
பிரேசில், இத்தாலி ஆகிய அணிகளுக்குப் பின், 4 தடவைகள் உலகக்கிண்ணத்தை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த அணிதான் வெல்லும் என்று குறி சொன்ன மாதிரி ஜேர்மனி உருவெடுக்க ஆரம்பித்தது காலிறுதிக்குப் பின்பு தான். ஆனால், பிரேசிலுக்கு எதிரான அரையிறுதியில் ஜேர்மனி ஆடிய அசுர ஆட்டம் இந்தக் கிண்ணம் ஜேர்மனிக்கே என்று அடித்துச் சொல்ல வைத்தது பலரை.
ஆனால் தென் அமெரிக்காவில் ஐரோப்பிய அணிகள் இதுவரை சாதிக்காத வரலாறும், ஆர்ஜென்டீனிய அணியின் மெஸ்ஸியும் ஜேர்மனியின் 4ஆவது உலகக்கிண்ணக் கனவுக்கு குறுக்கே நின்றிருந்தன.
மெஸ்ஸி
ஆனால், மற்ற அணிகளெல்லாம் சில நட்சத்திரங்களை நம்பியிருக்கின்றன, ஜேர்மனி மட்டும் ஓர் அணியாக விளையாடுகிறது என்று ஜேர்மனி ரசிகர்கள் சொன்னதை மெய்ப்பிப்பது போல ஜேர்மனியின் ஆட்டம் அமைந்திருந்தது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜேர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அதேசமயம் அர்ஜென்டீனாவும் மோதின.
கடந்த 4 உலகக்கிண்ணங்களில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜேர்மனி, மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4ஆவது முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம், உலகக் கிண்ணக் கால்பந்து வரலாறு ஒன்றை மாற்றி எழுதியுள்ளது ஜேர்மனி. தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த (உருகுவே இருமுறை, பிரேசில், அர்ஜென்டீனா தலா ஒரு முறை) அணிகளே வாகை சூடியுள்ளன.
ஆனால் இந்த முறை ஜேர்மனி கோப்பையை வென்று அமெரிக்க கண்டத்தில் ஐரோப்பாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. அமெரிக்க கண்டத்தில் அக்கண்ட அணிகள்தான் வெற்றி பெற முடியும் என்ற வரலாற்றை ஜேர்மனி மாற்றியிருக்கிறது.
பரபரப்பான 90 நிமிட நேர ஆட்டத்தில் கோல்கள் எதுவும் விழாததால், ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் மாறி மாறி செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
ஆர்ஜென்டீனாவின் ஹிகுவெய்ன், மெஸ்ஸி, பலாஷியோ ஆகிய மூவருக்கும் வாய்த்த இலகுவான கோல் பெறும் வாய்ப்புக்கள் தவறவிடப்பட்டன.
இவை மூன்றுமே மிக இலகுவான வாய்ப்புக்கள்.
மறுபக்கம் ஜேர்மனிக்கு கிடைத்த கோல் அடிக்கும் பந்துகள் ஆர்ஜென்டீன கோல் காப்பாளர் ரொமெரொவின் சாகச முயற்சியால் தடுக்கப்பட்டன.
90 நிமிடங்கள் முடிந்து மேலதிக நேரம்.
முதல் 15 நிமிடங்களில் பரபரப்பு... ஆனால் தேவையான கோல் இல்லை.
பிறகு, கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில், 113ஆவது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் சுயர்லி, இடப்புறமாக பாதி மைதானத்தில் இருந்து பந்தை படுவேகமாக கடத்தி வந்து, அங்கிருந்து கோல் கம்பம் அருகே நின்றிருந்த மாரியோ கோட்ஸே-க்கு சரியான முறையில் பரிமாற்ற, அவர் அதை அருமையாக தன் நெஞ்சில் தடுத்து, பந்து கீழே இறங்கியவுடன் இடது காலால் அற்புதமான கோலை அடித்தார்.
பதறாமல் பந்தை அவர் மிக நிதானமாகக் கையாண்டவிதம் பாராட்டுதற்குரியது.
ஜேர்மனி ரசிகர்களின் ஆரவாரம்.
அதிர்ச்சியடைந்தது அர்ஜென்டீனா.
அதன்பிறகு, மீதமிருந்த 7 நிமிட நேர ஆட்டத்தில், அர்ஜென்டீனா ஓரிரு முறை ஜேர்மனியின் கோல் பகுதிக்குச் சென்றது. ஆனால், ஜேர்மனியின் தடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, அரண் போல் நின்று அர்ஜென்டீனாவின் முயற்சிகளை முறியடித்தனர்.
கோட்ஸேவின் அபார கோலின் துணையுடன், மேலதிக நேர ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது ஜேர்மனி.
உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் மெஸ்ஸி, தனது தலைமையின் கீழ் உலகக் கோப்பையை வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த அர்ஜென்டீனா ரசிகர்களுக்கு, அவரது ஆட்டம் கூட திருப்தியளிப்பதாக இல்லை.
தனது கழகமான பார்சிலோனாவுக்காக பல வெற்றிகளையும் பல கிண்ணங்களையும் வென்று கொடுத்து, பலமுறை உலகின் சிறந்த வீரர் விருதைப் பெற்றுள்ள மெஸ்ஸி, இம்முறை உலகக்கிண்ணத்தை வென்று கொடுப்பார் என்று ஆர்ஜென்டீனிய ரசிகர்கள் நம்பியிருந்தனர்.
முதற்சுற்று ஆட்டங்களில் 4 கோல்களை பெற்ற மெஸ்ஸியினால் அதன் பின் வந்த knock out ஆட்டங்களில் எந்தவொரு கோலையும் பெற முடியவில்லை.
120 நிமிட நேர ஆட்டத்தை, நான்கைந்து முறை அவர் பந்தை எடுத்துச் சென்றார். கடைசியில், ஆட்டம் முடியும் தருவாயில் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. அந்த ஃப்ரீ கிக்கை கோலாலாக மாற்றி நிச்சயம் சமன் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அவரது உதை - கோல் கம்பத்துக்கு மேலே சென்று, அர்ஜென்டீனா ரசிகர்களின் கண்ணீருக்குக் காரணமானது.
மனமுடைந்தவராக மெஸ்ஸி காணப்பட்ட காட்சி யார் மனதையும் உருக்கவல்லது.
ஜேர்மனி அணியின் தற்போதைய வீரர்களில் பெரும்பாலானோர் தங்கள் அணி கடைசியாக (1990) உலகக்கிண்ணத்தை வென்றபோது குழந்தைகளாக இருந்துள்ளனர். மிரோஸ்லாவ் க்ளோஸ் (12 வயது) உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே உலகக்கிண்ணத்தை வென்றபோது ஓரளவுக்கு விவரம் தெரிந்தவர்கள். ஜேர்மனி இம்முறை உலகக்கிண்ணத்தை வெல்வதற்கான வெற்றி கோலை அடித்த கோட்ஸே அப்போது பிறக்கவே இல்லை.
கோட்ஸே
அதுவரை நேரமும் (அதற்கு முந்தையபோட்டிகளிலும் கூட) உணர்ச்சிகள் எதையும் காட்டாமல் இருந்த ஜேர்மானியப் பயிற்றுவிப்பாளர் ஜோக்கிம் லோ, 120 நிமிட போராட்டம் ஜேர்மனிக்கு வெற்றியாக முடித்தபின்னர் தான் சந்தோஷத்தை வெளிக்காட்டினார்.
உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் மிகச் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருது - லியோனல் மெஸ்ஸி - (ஆர்ஜென்டீனா )க்கு வழங்கப்பட்டது.
Golden Ball - Leo Messi
Silver ball - Thomas Müller
Bronze Ball - Arjen Robben
மெஸ்ஸிக்கு இவ்விருது வழங்கப்பட்டமை பற்றிய விமர்சனங்கள் குறிப்பாக முன்னாள் ஆர்ஜென்டீனிய தலைவர் டீகோ மரடோனாவே கூட, முன்வைக்கப்பட்டாலும் மெஸ்ஸி இந்த உலகக்கிண்ணம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி விளையாடிய வீரர் என்பதில் மறுபேச்சில்லை.
மிகச் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்கக் கையுறை விருது - ஜேர்மனி அணியின் மனுவல் நூயர்.
உலகக்கிண்ணத் தொடரில் கூடிய கோல்களைப் பெற்ற வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பாதணி விருது, 6 கோல்களைப் பெற்ற கொலொம்பிய வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகுவேசுக்கு வழங்கப்பட்டது.
ஜேம்ஸ் ரொட்ரிகுவேஸ்
Silver Boot - Thomas Müller
Bronze Boot - Neymar Jr.
இந்த உலகக்கிண்ணத்தின் தலைசிறந்த இளைய வீரருக்கான விருது - போல் பொக்பா (பிரான்ஸ்) வழங்கப்பட்டது.
கண்ணியமாக விளையாடிய அணி என்ற விருது FIFA Fair Play Award - கொலொம்பியா.
உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி அணி இன்று நாடு திரும்பிய வேளை மிகக் கோலாகலமான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
எந்த அணியின் ரசிகராக இருந்தாலும் ஜேர்மனி அணியின் ஒட்டுமொத்த விளையாட்டு, இந்தத் தொடர் முழுதும் எந்தவொரு போட்டியையும் தோற்காமல் விளையாடிய விதத்திலும் அனைவரது மனதிலும் பொருத்தமான புதிய சம்பியன் என்று ஜேர்மனியை வாழ்த்தச் செய்துள்ளது.
புதிய சம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்...