2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கடந்தவார களங்கள்... (மே 27 - ஜூன் 03)

A.P.Mathan   / 2012 ஜூன் 06 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து - மேற்கிந்தியதீவுகள் டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து நோட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடயிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடந்த போட்டியிலும் பார்க்க மோசமான தோல்வியை மேற்கிந்திய தீவுகள் அணி சந்தித்தது. இந்த போட்டியின் ஆரம்பம் மிக நன்றாக அமைந்தது. முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை சிறப்பாகவே இருந்தது. நிச்சயமான சமநிலை முடிவு என எதிர்பார்க்க இரண்டாவது இன்னிங்க்ஸ் துடுப்பாட்டம் மகா சொதப்பல். ஒரு நாள் மீதமிருக்க இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு பலம் நல்ல முறையில் அமைந்தது. இதுவே அவர்களின் வெற்றிக்கான முக்கியமான காரணமாகவும் அமைந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் அணி 370 ஓட்டங்களைப் பெற்றது. மீண்டும் ஒருதடவை மிக மோசமான ஆரம்பம். மார்லன் சாமுவேல்ஸ், டரின் சமி ஆகியோருடைய எழாவது விக்கெட் இணைப்பாட்டம் 204 ஓட்டங்களைத் தர மேற்கிந்திய தீவுகள் அணி வலுவான ஒரு நிலைக்கு வந்தது. மார்லன் சாமுவேல் 117 ஓட்டங்கள். டரின் சமி 106 ஓட்டங்கள். இது அவருடைய கன்னிச் சதம். இணைப்பாட்டம் முறியடிக்கப்பட இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 370 ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகளின் இன்னிங்ஸ் நிறைவடைந்தது. சந்தர்போல் 46 ஓட்டங்கள். பந்து வீச்சில் டிம் ப்ரெஸ்னன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜேம்ஸ் அன்டர்சன், கிரேம் சுவான், ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலளித்த இங்கிலாந்து அணி நல்ல ஆரம்பத்தினூடாகவும், சராசரியான இணைப்பாட்டங்கள் மூலமாகவும் மேற்கிந்தியதீவுகளின் ஓட்ட எண்ணிக்கையை இலகுவாக கடந்தது. 428 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றது. இதில் அணித்தலைவர் அன்று ஸ்ட்ரோஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 141 ஓட்டங்களை பெற்றார். கெவின் பீற்றர்சன் 80 ஓட்டங்கள். இவர்கள் இருவரும் 144 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். பந்து வீச்சில் ரவி ரம்போல் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். கிமர் ரோச், டரின் சமி, மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார்.

தங்கள் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. மார்லன் சாமுவேல்ஸ் தனித்து நின்று 76 ஓட்டங்களைப் பெற்ற போதும் மற்றவர்கள் வேகமாக ஆட்டமிழக்க எதுவுமே செய்யமுடியாமல் போனது. ஜேம்ஸ் அன்டர்சன், டிம் பிரஸ்னன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். 108 ஓட்டங்கள் மாத்திரமே வெற்றி இலக்கு. இதற்க்கு பிறகும் வெற்றியை பற்றி மேற்கிந்திய தீவுகள் நினைக்க இயலுமா? சமநிலை கூட இயலாத நிலை. இங்கிலாந்து அணி இலகுவான 9 விக்கெட்களினால் வெற்றியை பெற்றது. அன்று ஸ்ட்ரோஸ் 45 ஓட்டங்களையும், அலிஸ்டயர் குக் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றார். போட்டியின் நாயகனாக டிம் பிரஸ்னன் தெரிவானார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. மூன்றாவது போட்டியிலாவது மேற்கிந்திய தீவுகள் அணி ஏதாவது செய்து காட்டுமா? நல்ல ஆரம்பம் இருந்தும் அவர்களால் நல்ல முறையில் முடிக்க முடியவில்லை என்பதே பெரிய குறையாக உள்ளது?


இலங்கை - பாகிஸ்தான் டுவென்டி டுவென்டி

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி தொடரின் ஆரம்பமாக 20 -20 போட்டி முதற்ப் போட்டியாக கடந்த வெள்ளிகிழமை (ஜூன் 01)  நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப் பட இறுதி நேரத்தில் லஹிறு திரிமன்னே, திசர பெரேரா ஆகியோருடைய துடுப்பாட்டம் கை கொடுக்க இந்த இலக்கை இலங்கை அணி பெற்றது. லஹிறு திரிமன்னே 32 ஓட்டங்களையும், திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆரம்ப விக்கெட்களை பதம் பார்த்த சொஹைல் தன்வீர் 12 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்கள். சைட் அஜ்மல் 2 விக்கெட்கள். பாகிஸ்தான் அணி பதிலுக்கு துப்பெடுத்தாட களமிறங்கியது. இலங்கை அணியின் பந்து வீச்சு மிக அபாரமாக அமைய 95 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. அஹமத் சேசாத் 36 ஓட்டங்களைப் பெற்றார். லசித் மாலிங்க, நுவான் குலசேகர, சசித்திர சேனநாயக ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். அஞ்சலோ மத்தியூஸ் 4 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள். போட்டியின் நாயகனாக திசர பெரேரா தெரிவானார். இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.


கெவின் பீற்றர்சன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஓய்வு
இவர் ஒரு வித்தியாசமான மனிதர். சர்ச்சைகளின் நாயகன் என்றும் சொல்லலாம். ஏன் இந்த அவசர முடிவு? உண்மையில் மிகப்பெரிய கேள்வியும் கூட. நல்ல போர்மில் உள்ளார். 20 -20 போட்டியில் கூட சதம் அடித்துள்ள நிலையில் ஏன் இந்த முடிவு என்பதற்கு அவர் சொல்லியுள்ள பதில் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டிய தருணம் இது. எனவே சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் இருந்து விலகுகிறேன் என கூறியுள்ளார். ஒருநாள் சர்வதேச போட்டிகளாகட்டும், 20 - 20 போட்டிகளாகட்டும் இவரின் துடுப்பாட்டம் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு மிகப் பெரிய கஷ்டத்தை தரும். அப்படிப்பட்ட ஒரு வீரர், உலக 20 - 20 போட்டி தொடர் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் விலகி இருப்பது இங்கிலாந்து அணிக்கு மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்களுக்குமே இது ஒரு பெரிய இழப்பாகவே இருக்கும்.

எல்லாவற்றிலும் முக்கியமாக இறுதியாக விளையாடிய இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி சதங்களை அடித்து இருந்தார். இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைத்து விட்டது என்ற நிலையில் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.  31 வயதில் நல்ல போர்மில் உள்ள நிலையில் எந்த ஒரு துடுப்பாட்ட வீரரும் இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டர்கள். இதுதான் ஆரம்பத்தில் அவர் பற்றி குறிப்பிட்டமைக்கு ஒரு காரணம்.

இந்த முடிவு எடுக்க காரணம் என ஊகிக்கக் கூடியது அவரின் கடந்த வருட பெறுபேறுகள் அல்லது கடைசி இரண்டு சதங்கள் தவிர அவரின் பெறுபேறுகளை பார்த்தால் சதம் எதுவுமே இல்லை. 3 அரைச்சதங்கள் மாத்திரமே. 21 போட்டிகளில் 611 ஓட்டங்கள். சராசரி 30.55. மிகமோசமான நிலை என்று சொள்ளவதற்கில்லை. சர்வதேச ரீதியில் உள்ள போட்டிகளின் அடிப்படையிலும், தன் உடல் நிலையை கருத்தில் கொண்டும் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதற்கு முக்கியமான காரணம் என குறிப்பிட்டுள்ளதோடு 2015ஆம் ஆண்டு உலக்ககிகிண்ண போட்டிகளிற்கு அணியை தயார்படுத்த இள வயது வீரர்களுக்கு அனுபவம் தேவை. எனவே அதை வழங்கவுமே நான் விலகுகிறேன் என கூறியுள்ளார். இதைத் தாண்டி வேற ஏதாவது இருக்குமா? இது அவருக்கு மட்டுமே தெரிந்து இருக்கும். ஆனால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவார். இங்கிலாந்து வீரர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளே முக்கியம். அதற்காக எதையும் விட, இழக்க தயாராக இருப்பார்கள். முதற்தர போட்டிகளில் விளையாட சர்வதேச போட்டிகளை துறந்த இங்கிலாந்து வீரர்கள் கூட இருக்கிறார்கள். எனவே கெவின் பீற்றர்சனின் இந்த ஓய்வு கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


கால்பந்தாட்ட உலகக்கிண்ண தெரிவுப் போட்டிகள்
உலகக்கிண்ண தெரிவுகான் போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றன. அதன் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன. ஒவ்வொரு வலயங்களுக்குமான போட்டிகள் நடைபெறும். அதன் அடிப்படையில் அந்தந்த வலயங்களின் கோட்டா அடிப்படையில் அணிகள் தெரிவு செய்யப்படும். 32 அணிகள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடரில் மோதவிருக்கின்றன.

தென் அமெரிக்க போட்டிகள்
உருகுவே 1 – வெனிசுலா 1
பொலிவியா 0 - சில்லி 2
ஆர்ஜென்டினா 4 - ஈகுடோர்  0
பேரு - கொலம்பியா

ஆசியா (குழு 1)
உஸ்பெஸ்கிஸ்தான்  0 - ஈரான் 1
லெபனான்  - கட்டார் 

ஆசியா (குழு 2)
ஜப்பான் 3 – ஓமான் 0
ஜோர்டான் - ஈராக்

ஆபிரிக்கா (குழு A)
மத்திய ஆபிரிக்க குடியரசு 2 - போஸ்ட்வானா 0
தென் ஆபிரிக்கா 1 - எத்தியோப்பியா  1

ஆபிரிக்கா (குழு B)
சியோர லியோனி குடியரசு 2 - கபு வர்டி  குடியரசு 1
டுனிசியா 3 - எக்குவடோரியல் கினி குடியரசு 1

ஆபிரிக்கா (குழு C)
கம்பியா 1 - மொரோகோ 1
ஐவரி கோஸ்ட் 2- டன்சானியா 0


ஆபிரிக்கா (குழு D)
கானா 7 - லெஸோதோ 0
சூடான் 2 - சம்பியா 0
 
ஆபிரிக்கா (குழு E)
பேர்கினோ பாஷோ 0 - கொங்கோ  0
நைஜர் - கபோன்
 
ஆபிரிக்கா (குழு F)
கென்யா  0 – மாலவி 0
நைஜீரியா - நமிபியா

ஆபிரிக்கா (குழு G)
எகிப்து 2 – மொசாம்பிக் 0
சிம்பாவே 0 - குனியா  1

ஆபிரிக்கா (குழு H)
அல்ஜீரியா 4 - ருவாண்டா 0
பெனின் 1 – மாலி 0

ஆபிரிக்கா (குழு I)
கமெரூன் 1 - கொங்கோ 0
டோகோ - லிபியா

ஆபிரிக்கா (குழு J)
செனகல் 3 - லிபிரியா 1
அங்கோலா - உகண்டா

ஓசியானா (குழு A)
ஸமொஆ 1 - தஹிதி 10
வனுடோ 2 - நியூ கலிடோனியா 5
தஹிதி 4 - நியூ கலிடோனியா 3
வனுடோ 5 – ஸமொஆ 0

ஓசியானா (குழு B)
பிஜி 0 - நியூசிலாந்து 1
சொலொமன் ஐஸ்லண்ட்ஸ் 1 - பபுவா நியூ கினியா 0
பிஜி 0 - சொலொமன் ஐஸ்லண்ட்ஸ் 0
பபுவா நியூ கினியா 1 - நியூ சிலாந்து 2

இந்த தெரிவுகான் போட்டிகள் கடந்த நவம்பர் மாதமளவில் ஆரம்பமாகியிருந்தன. தென் அமெரிக்க கண்ட அணிகள் தங்கள் போட்டிகளில் விளையாட ஆரம்பித்து இருந்தன. கடந்த சனி, ஞாயிறு தினங்களில் ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானிய வலைய அணிகள் தன்கள் போட்டிகளை ஆரம்பித்து இருந்தன.

டுவென்டி டுவென்டி தொடரை சமப்படுத்தியது பாகிஸ்தான்

இரண்டாவது 20 - 20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது பாகிஸ்தான் அணி. 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 123 ஓட்டங்களைப் பெற்றது ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும் சாஹிட் அப்ரிடியின் அரைச்சதம் வெற்றிக்கு கைகொடுத்தது. ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டமாக சொய்ப் மாலிக் (27), சாஹிட் அப்ரிடி (ஆட்டமிழக்காமல் 52) ஆகியோர் 68 ஓட்டங்களை இணைப்பாட்டமாக தம்முள் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் நுவான் குலசேகர 13 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்கள். கௌஷல் லொக்குஆராச்சி 2 விக்கெட்கள். பதிலளித்த இலங்கை அணி 99 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்களையும் இழந்தது. 4 பந்துகள் மீதமிருந்தன. சாமர கப்புகெதேற 19 ஓட்டங்கள். மோசமான துடுப்பாட்டம் இலங்கை அணியை தோல்விக்குள் தள்ளியது. பந்து வீச்சில் மொஹம்மத் சமி, யாசிர் அரபாத் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். சாஹிட் அப்ரிடி 2 விக்கெட்கள். போட்டியின் நாயகன் சாஹிட் அப்ரிடி, போட்டி தொடரின் நாயகன் சொஹைல் தன்வீர். இரண்டு போட்டிகள் அடங்கிய தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்று தொடரை சமப்படுத்தின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .