2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கடந்தவார களங்கள்... (ஜூன் 18 - 24)

A.P.Mathan   / 2012 ஜூன் 30 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்து, சௌதம்ப்டன், ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. முதலில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட் ஓட்டம் எதுவும் இல்லாமல் வீழ்த்தப்பட்ட போதும் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 108 ஓட்டங்கள் பகிரப்பட்டன. ஜோனதன் ட்ராட் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இயன்பெல் தொடர்ந்தும் மத்திய வரிசை வீரகளுடன் இணைப்பாடத்தை ஏற்படுத்தி சதத்தைப் பூர்த்தி செய்தார். 126 ஓட்டங்கள். இயன் பெல்லின் இரண்டாவது சதம் இது. கிரெய்க் கீஸ்வீட்டர் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள். மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சில் மார்லன் சாமுவேல்ஸ் 2 விக்கெட்கள். ரவி ராம்போல், சுனில் நரையன், டுவைன் பிராவோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள்.

மேற்கிந்திய தீவுகள் அணி துடுபெடுத்தாடிய வேளையில் சராசரி இடைவெளிகளில் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. பின் வரிசை வீரர்களின் விக்கெட்கள் வேகமாகவே வீழ்த்தப்பட்டன. மேற்கிந்திய தீவுகள் அணி 33.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுவைன் ஸ்மித் 56 ஓட்டங்களைப் பெற்றார். மார்லன் சாமுவேல்ஸ் 30 ஓட்டங்கள். பந்து வீச்சில் டிம் பிரஸ்னன் 4 விக்கெட்கள். ஜேம்ஸ் அன்டர்சன், கிரேம் சுவான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். ஸ்டுவோர்ட் ப்ரோட், ஸ்டீவன் பின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள். போட்டியின் நாயகனாக இயன்பெல் தெரிவானார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை தனதாக்கியது
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கிறிஸ் கெயில் விளையாடினார். மீள் சர்வதேசப் போட்டி பிரவேசம். அதிகமாக எதிர்பார்ப்புக்க இருந்தன. இங்கிலாந்து அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 238 ஓட்டங்களைப் பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி. கிறிஸ் கெயில் 52 ஓட்டங்களையும் டுவைன் பிராவோ 77 ஓட்டங்களையும், கெரன் பொலார்ட் 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். டிம் பிரஸ்னன், கிரேம் சுவான், ஸ்டீபான் பின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள்.

பதிலளித்த இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் மீதமிருக்க 8 விக்கெட்களால் வெற்றி பெற்றது. அணித் தலைவர் அலஸ்டயர் குக் சதமடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப விக்கெட் இணைப்பாடம் 122 ஓட்டங்கள். இயன் பெல் 52. அலஸ்டயர் குக் 112. ஜொனதன் ட்ராட் ஆட்டமிழக்காமல் 43. டரின் சமி 2 விக்கெட்கள். 8 பந்து வீச்சாளர்கள் பந்து வீசியிருந்தார்கள். சமிக்கு பந்து வீச்சாளர்களை கையாளும் விதம் கொஞ்சம் பிரச்சினையாகவுள்ளது. இந்த போட்டியில் அது நன்றாகவே தெரிந்தது.

ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர் 

குழு C இறுதிக் கட்ட போட்டிகள்
ஐரோப்பிய கிண்ண காற்ப்பந்தாட்டப் போட்டிகளின் முக்கியமான வாரம் கடந்த வாரம். முதல் சுற்றில் 8 அணிகள் வெளியேற 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகின. அதிலும் நான்கு அணிகள் வெளியேற 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.  

கடந்த 18ஆம் திகதி குழு C போட்டியில் ஸ்பெயின், குரேசிய அணிகள் மோதின. ஸ்பெயின் அணி 1 - ௦ என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. 88ஆவது நிமிடத்தில் நவாஸ் அடித்த கோல் மூலமாக ஸ்பெயின் அணிக்கு வெற்றி கிடைத்தது. அது மட்டுமல்லாமல் குரேசிய அணி இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. அடுத்த போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்றமையாலே குரேசிய அணி வெளியேறியது. ஸ்பெயின் அணி இந்த வெற்றியின் மூலம் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

அதே தினத்தில் அதே குழுவைச் சேர்ந்த இத்தாலி, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. அயர்லாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையிலேயே இந்தப் போட்டியில் விளையாடியது. இத்தாலி அணி 2 - 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. குழு C இல் இரண்டாம் இடத்தைப் பெற்று காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. இத்தாலி அணி சார்பாக கசொனா முதல் கோலை 35ஆவது நிமிடத்தில் அடித்தார். இரண்டாவது கோல் பலோடேலியினால் 90ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.

ஸ்பெயின்             3    2    1    0    5    7
இத்தாலி                 3    1    2    0    2    5
குரேசியா                3    1    1    1    1    4   
அயர்லாந்து          3    0    0    3    -8    0

குழு D இறுதிக் கட்ட போட்டிகள்
குழு D இல் இங்கிலாந்து யுக்ரைன் அணிகளும், ஸ்வீடன் பிரான்ஸ் அணிகளும் மோதின. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அதேவேளை பிரான்ஸ் அணி தோல்வியடைந்த போதும் அடுத்த சுற்றான காலிறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இங்கிலாந்து அணி சார்பாக வெய்னி ரூனி 48ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது இங்கிலாந்து அணியின்  இரண்டாவது வெற்றி. எனவே அடுத்த சுற்றுக்கு குழு D இல் முதல் இடத்தைப் பெற்று தெரிவானது.

பிரான்ஸ் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் ஸ்வீடன் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இருப்பினும் இரண்டாம் இடத்தில் பிரான்ஸ் அணி இருந்தமையினால் குழு D இல் இருந்து இரண்டாவது அணியாக தெரிவானது. இப்ரமொவிச் 54ஆவது நிமிடத்தில் அடித்த கோல் முதல் கோலாக ஸ்வீடன் அணிக்கு அமைந்தது. இரண்டாவது கோல் 90ஆவது நிமிடத்தில் லார்சனால் அடிக்கப்பட்டது.

இங்கிலாந்து        3    2    1    0    2    7
பிரான்ஸ்               3    1    1    1    0    4
உக்ரெய்ன்             3    1    0    2    -2    3
ஸ்வீடன்               3    1    0    2    0    3

காலிறுதிப் போட்டி 01
21ஆம் திகதி முதல் காலிறுதிப் போட்டி நடைபெற்றது. செக் குடியரசு, போர்த்துக்கல் அணிகள் மோதின. போர்த்துக்கல் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. விறுவிறுப்பான போட்டி. சமநிலையிலேயே சென்றது. 79ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல் மூலமாக இந்த வெற்றி போர்த்துகல் அணி வசமானது. போர்த்துக்கல் அணி பக்கமாக 56% பந்து இருந்தது. 

காலிறுதிப் போட்டி 02
ஜேர்மனி, கிரீஸ் அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி இரண்டாவது காலிறுதிப் போட்டி போலந்து டன்செக் அரீனா மைதானத்தில் நடைபெற்றது. இலகுவாக ஜேர்மனி அணி 4 - 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றுக் கொண்டது. இப்போதுள்ள அணிகளில் அதிக வெற்றி வாய்ப்புக் கொண்ட அணியாகவும் ஜேர்மனி அணியே தென்படுகிறது. 61 நிமிடங்களுக்கு பின்னர்தான் மிக இலகுவாக போட்டி ஜேர்மனி பக்கமாக சென்றது. 31ஆவது நிமிடத்தில் லாம் அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றாலும் கிரீஸ் அணியின் சமராஸ் 55ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலமாக போட்டி சமநிலை அடைந்தது. அடுத்த கோல் ஜேர்மனி வீரர் கெதெரியா இனால் அடிக்கப்பட முன்னிலை பெற்றது ஜேர்மனி அணி. அடுத்த கோல் 68ஆவது நிமிடத்தில் மிர்லவ் க்ளோஸ் இனால் அடிக்கப்பட்டது. ரியுஸ் இறுதி கோலை 74ஆவது நிமிடத்தில் அடித்தார். கிரீஸ் அணி போட்டி முடிவடையும் தருவாயில் ஒரு கோலை அடித்தது. சல்பிங்கிடிஸ் பெனால்டி உதை மூலமாக ஒரு கோலை 90ஆவது நிமிடத்தில் அடித்தார். ஜேர்மனி அணி விளையாடிய நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலிறுதிப் போட்டி 03
ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி கடந்த 22ஆம் திகதி நடைபெற்றது. ஸ்பெயின் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பொதுவாக காலிறுதிப் போட்டிகள் மிக சுவார்சயமாக இருக்கும். ஆனால் இந்தமுறை முதல் சுற்றுப் போட்டிகள் காலிறுதிப் போட்டியிலும் பார்க்க விறுவிறுப்பாக இருந்தன. சபி அலன்சோ 19ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். போட்டி அதேநிலையில் தொடர்ந்தது. 90ஆவது நிமிடத்தில் கிடைத்த பனால்டி உதையை அலன்சோ கோல் ஆக்கினார். ஸ்பெயின் அணி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவானது. போர்த்துக்கல் அணியை அரை இறுதிப் போட்டியில் உலக சாம்பியன் ஸ்பியன் சந்திக்கவுள்ளது.

காலிறுதிப் போட்டி 04
இங்கிலாந்து - இத்தாலி அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி, சமநிலை முறியடிப்பு முறை மூலமாக தீர்மானிக்கப்பட்டது. இத்தாலி அணி 4 - 2 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. இத்தாலி அணி மிகப் பலமாகவும், சிறப்பாகவும் விளையாடிய போதும் கோல்கள் அடிக்க இயலாமல் போனது. இரு அணிகளும் வழங்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல்கள் அடிக்கத் தவறியமையினால் மேலதிக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போதும் கோல்கள் பெறப்படவில்லை. ஒவ்வொரு அணிக்கும் 5 சமநிலை முறியடிப்பு உதைகள் வழங்கப்பட்டன. அப்போது இரண்டாவது உதையை இத்தாலி அணி தவற விட்டது. அதற்கு பிறகு பார்த்தால் இத்தாலி அணி கோல்களை அடிக்க இங்கிலாந்து அணி தவறவிட்டது. தோல்வி இங்கிலாந்து பக்கமாக மாறியது. இத்தாலி அணி வெற்றி பெற்று ஜேர்மனி அணியை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

டுவென்டி டுவென்டி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது
இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டுவென்டி டுவென்டி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முழுமையாக தொடர் தன் வசமாக்கியது. டெஸ்ட் போட்டிகளில் தோல்வி இன்றி தொடர் வெற்றி. ஒருநாள் போட்டிகளிலும் அதே நிலை. இந்த ஒரு போட்டியிலும் வெற்றி.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகளின் ஆரம்பம் சிறப்பாக அமையாவிட்டாலும், மத்திய வரிசை சிறப்பாக செயற்பட வெற்றி பெறக்கூடிய இலக்கான 172 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டுவைன் ஸ்மித் 70 ஓட்டங்களைப் பெற்றார். டுவைன் பிராவோ ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும், கெரன் பொலர்ட் 23 ஓட்டங்களையும் பெற்றனர். ஸ்டீபான் பின் இரண்டு விக்கெட்கள்.

பதிலளித்த இங்கிலாந்து அணி நல்ல ஆரம்பத்தின் மூலம் வெற்றியை தனதாக்கியது. குறிப்பாக அலெக்ஸ் ஹலஸ் மிக அபாரமாக துடுப்பெடுத்தாடி 99 ஓட்டங்களைப் பெற்றார். ரவி போபரா 51 ஓட்டங்கள். இருவரது இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமும் 159 ஓட்டங்கள். இரண்டு பந்துகள் மீதமிருக்க வெற்றி இங்கிலாந்துக்கு சொந்தமானது. மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி பெறக் கூடிய இலக்கு இருந்தும் மோசமான பந்து வீச்சு தோல்வியை அவர்களுக்கு தந்தது. இந்தப் போட்டியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நல்ல அணி. அணித் தலைமை அல்லது பந்து வீச்சு மாற்றங்கள் இன்னும் சிறப்பாக தேவை. இல்லாவிட்டால் கஷ்டப் பட வேண்டி இருக்கும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .