2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கடந்தவார களங்கள்... (ஜூன் 11-17)

A.P.Mathan   / 2012 ஜூன் 18 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மழையால் கழுவப்பட்ட இலங்கை - பாகிஸ்தான் போட்டி
இலங்கைக்கு கிரிக்கெட் அணிகள் வந்தால் எப்படித்தான் மழை தேடி வருகிறதோ தெரியவில்லை. அதுவும் கொழும்பு போட்டி. பார்வையாளர்களின் வரவு அதிகமாக இருக்கும். தொடர் சமநிலையில் இருக்கிறது என்ற நிலையில் மழை போட்டியை குழப்பியது தொடரின் சுவாரசிய தன்மையை இல்லாமல் செய்துள்ளது. மழை பெய்யும் வாய்ப்புக்களுடனேயே போட்டி ஆரம்பமானது. ஏழாவது ஓவரில் கரு முகில்கள் சூழ போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டது. பின் கடும் மழை தொடர இரவு 8.30 மணியளவில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் இதுவரை 488 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 40 போட்டிகள் முடிவு காணப்படாத போட்டிகள். நிச்சயம் அவை மழை அல்லது சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டவை. 8.19 வீதமான போட்டிகள் அவை. ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டிகள், டக் வேர்த் லூயிஸ் முறையில் முடிவு காணப்பட்ட போட்டிகள் இங்கே கணக்கெடுக்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால் மழையினால் பாதிக்கப்பட்ட போட்டிகள் அதிகமே. இதுவரையில் இலங்கையிலேயே கூடுதலான போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளன என்பது முக்கிய விடயம்.

போட்டி நிறுத்தப்படும் போது பாகிஸ்தான் அணி 6.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 12 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது. இலங்கை அணி நல்ல ஆரம்பத்தை எடுத்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. 

ஐரோப்பிய கிண்ண காற்ப்பந்தாட்டம்
ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் முக்கியமான வாரம். எல்லா போட்டிகளுமே நல்ல விறு விறுப்பாக நடைபெற்றன. குழு C இல் இருந்து அயர்லாந்து அணி முதலில் வெளியேறியது. அதாவது அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.  

குழு D போட்டிகள் 
11ஆம் திகதி இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றன. முதல் கோல் இங்கிலாந்தின் வீரர் லெஸ்கொட்டால் 30ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. பிரான்ஸ் அணி சார்பாக நஸ்ரி 39ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பின் போட்டி நல்ல உச்சக் கட்டத்தை அடைந்தாலும் கோல்கள் பெறப்பட முடியவில்லை.

அதே தினத்தில் உக்ரைன், ஸ்வீடன் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. போட்டியை நடத்தும் இரண்டு நாடுகளில் ஒன்றான உக்ரைன் அணி 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. ஒன்பது நிமிடங்களில் 3 கோல்கள் அடிக்கப்பட்டன என்பது இந்த போட்டியின் விசேடம். முதல் கோல் ஸ்வீடன் வீரர் இப்ரோமொவிச் இனால் 52ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. ஸ்வீடன் அணி முன்னிலை பெற்று மூன்றாவது நிமிடத்தில் செவெச்செங்கோ அடித்த கோல் மூலம் உக்ரைன் அணி சமநிலையை பெற்றது. 61ஆவது நிமிடத்தில் செவெச்செங்கோ அடித்த இரண்டாவது கோல் உக்ரைன் அணிக்கு வெற்றி கோலாக மாறியது.

குழு A போட்டிகள் - இரண்டாம் கட்டம்
12ஆம் திகதி செக் குடியரசு மற்றும் கிரீஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. 2 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது செக் அணி. முதற்ப் பாதியில் இரண்டு கோல்களை செக் குடியரசு அணி பெற்றது. ஜிரசெக் 3ஆவது நிமிடத்தில் முதல் கோலையும், பிலர் 6ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடிக்க முன்னிலை பெற்றது செக் அணி. 53ஆவது நிமிடத்தில் ஜிகாஸ் அடித்த கோல் கிரீஸ் அணிக்கு முதல் கோலை தந்தாலும் அதனை தொடர்ந்து செக் அணியும் விட்டுக் கொடுக்காமல் விளையாடவே மேலதிக கோல்கள் போட்டியில் பெறப்படவில்லை.

போலந்து, ரஷ்யா அணிகளுக்கிடையிலான போட்டி அன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இரு அணிகளும் ஒவ்வொரு கோல்களைப் பெற்றன. முதல் கோல் ரஷ்யா வீரர் சகோவ் இனால் 37ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. 20 நிமிடத்தில் போலந்து வீரர் பிலாசிகௌசகி அடித்த கோல் மூலமாக போட்டி சமநிலையை அடைந்தது.

குழு B போட்டிகள் - இரண்டாம் கட்டம்
டென்மார்க், போர்த்துக்கல் அணிகளுக்கிடையிலான போட்டி 13ஆம் திகதி, முதல் போட்டியாக நடைபெற்றது. போட்டி ஆரம்பித்து 24ஆம் நிமிடத்தில் பெப்பே அடித்த கோல் மூலமாக போர்த்துக்கல் அணி முன்னிலை பெற்றது. அடுத்த கோல் பொஸ்டிகா இனால் அடிக்கப்பட்டது. 2 கோல்களால் முன்னிலை பெற்றது. 41ஆவது நிமிடத்தில் பெந்தர் அடித்த கோல் மூலம் டென்மார்க் அணி தன் முதல் கோலை பெற்றது. முதற்ப்பாதி நிறைவடைய 2 - 1 என்ற கோல் அடிப்படையில் போர்த்துக்கல் அணி முன்னிலையில் இருந்தது. முதல் கோலை அடித்த பெந்தர் 80ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். போட்டி சமநிலை அடைந்து 7 நிமிடத்தில் வரெலா அடித்த கோல் மூலம் போர்த்துக்கல் அணி 3 - 2 என்ற முன்னிலை பெற்றது. வெற்றியையும் தனதாக்கிக் கொண்டது.

ஜேர்மனி, நெதர்லன்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இரண்டாவது போட்டியாக நடைபெற்றது. ஜேர்மனி அணி வெற்றி பெற்றது. ஜேர்மனி அணி சார்பாக மரியா கோமஸ் 24ஆம், 38ஆம் நிமிடங்களில் அடித்த கோல்கள் மூலமாக ஜேர்மனி அணி முன்னிலை பெற்றது. 73ஆம் நிமிடத்தில் பேர்சி அடித்த கோல் மூலம் நெதர்லன்ட்ஸ் அணி தன் முதல் கோலைப் பெற்றது. அதற்க்கு பின்னர் கோல்களை பெறமுடியவில்லை. நெதர்லன்ட்ஸ் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழு C போட்டிகள் - இரண்டாம் கட்டம்
14ஆம் திகதி குழு A இற்கான போட்டிகள் நடைபெற்றன. முதற்ப் போட்டி இத்தாலி, குரேசிய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்தன. பெர்லோ 39ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் இத்தாலி அணியின் முதல் கோல் பெறப்பட்டது. மன்ட்சுகி 72ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலமாக குரேசிய அணியின் முதல் கோல் பெறப்பட்டது. போட்டி சமநிலை அடைந்தது.

அதே தினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஸ்பெயின் அணி பெற்ற வெற்றி மூலமாக தனது காலிறுதி வாய்ப்பை அதிகரிக்கச் செய்தது. 4 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டொரஸ் 4ஆவது நிமிடத்திலும், 70ஆவது நிமிடத்திலும், கோல்களை அடித்தார். டாவிட் சில்வா 49ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். செக் பாப்ரிகாஸ் 83ஆவது நிமிடத்தில் நான்காவது கோலை அடித்தார். 

குழு D போட்டிகள் - இரண்டாம் கட்டம்
போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான உக்ரைன் அணிக்கும், பிரான்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி 2 - 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. மெனஸ் முதல் கோலை 53ஆவது நிமிடத்தில் அடித்தார். 56ஆவது நிமிடத்தில் கபேயி அடித்த கோல் மூலமாக 2 - 0 என்ற முன்னிலை கிடைத்தது. பிரான்ஸ் அணி வெற்றி பெற்று தன் வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்தது. உக்ரைன் அணி இன்னமும் வாய்ப்புக்களை இழக்கவில்லை. ஆனாலும் காலிறுதிப் போட்டி வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.

அடுத்த போட்டி இங்கிலாந்து ஸ்வீடன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நல்ல விறுவிறுப்பான போட்டி. இங்கிலாந்து அணி 3 - 2 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. கடந்த போட்டியின் சமநிலை முடிவை ஈடுசெய்யக் கூடிய வகையில் இந்த வெற்றி இங்கிலாந்து அணிக்கு அமைந்தது. முதல் கோல் இங்கிலாந்து வீரர் கரோல் இனால் 23ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. 49ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோன்சன் அடித்த கோல் மூலமாக (Own Gol) அல்லது தவறின் மூலம் முதல் கோல் ஸ்வீடன் அணிக்கு கிடைத்தது. 59ஆவது நிமிடத்தில் ஸ்வீடன் அணி சார்பாக மெல்பேர்க் அடித்த கோல் மூலம் ஸ்வீடன் அணி 2 - 1 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றது. 72ஆவது நிமிடத்தில் வோல்கோல்ட் அடித்த கோல் மூலம் இங்கிலாந்து அணி போட்டியை சமநிலை செய்தது. 78ஆவது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு அடுத்த கோல் கிடைத்தது. அது வெற்றி கோல் ஆக அமைந்தது. வெல்பெக் அந்த கோலை அடித்தார்.

குழு A போட்டிகள் - இறுதிக் கட்டம்
குழு A இன் இறுதிக் கட்ட போட்டிகள். அடுத்த சுற்றான கால் இறுதிப் போட்டி தொடருக்கு அணிகளை தெரிவு செய்யும் போட்டிகள். இதன் காரணமாக போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. செக் குடியரசு, போலந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் செக் அணி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தெரிவானது. 72 நிமிடங்கள் வரை கோல்கள் எதுவும் பெறப்படவில்லை. ஜிரசெக் அடித்த கோல் செக் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. போட்டியை நடத்தும் நாடான போலந்து அணி காலிறுதி வாய்ப்பை இழந்தது.

அடுத்த போட்டி ரஷ்யா அணியின் வாய்ப்பை இல்லாமல் செய்தது. குழு Aஇல் கடை நிலையில் இருந்த கிரீஸ் அணி முதல் நிலையில் இருந்த ரஷ்யா அணியை வீழ்த்தி இரண்டாம் இடத்தைப் பெற ரஷ்யா அணி மூன்றாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டது. கரகோனிகஸ் 45 நிமிடத்தில் அடித்த ஒரு கோல் அணிகளின் நிலைகளை தலை கீழாக மாற்றியது. இரண்டு அணிகளும் ஒரே புள்ளிகளைப் பெற்று இருந்தாலும் இரு அணிகளுக்கிடையிலான போட்டியில் கிரீஸ் அணி வெற்றி பெற்றதனால் கிரீஸ் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

செக் குடியரசு     3    2    0    1    -1    6
கிரீஸ்                    3    1    1    1      0    4
ரஷ்யா                   3    1    1    0      2    4
போலந்து             3    0    2    1     -1    2
(போட்டிகள், வெற்றி, சமநிலைமுடிவு, தோல்வி, கோல் வித்தியாசம், புள்ளிகள்)

ஐரோப்பிய கிண்ண காற்ப்பந்தாட்ட தொடரில் குழு Bஇல் இருந்து ஜெர்மனி, போர்த்துக்கல் அணிகள் காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன. ஜூன் 17ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இந்த அணிகள், டென்மார்க், நெதர்லன்ட்ஸ் அணிகளை இந்த குழுவில் இருந்து வெளியேற்றி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. ஜெர்மனி, டென்மார்க் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜேர்மனி அணி 2 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. ஜேர்மனி அணி சார்பாக லூகாஸ் பொடல்ஸ்கி 19ஆவது நிமிடத்தில் முதல் கோலையும், பெந்தர் 80ஆவது நிமிடத்தில் இரணடாவது கோலையும் அடித்தார். டென்மார்க் அணி சார்பாக ரோன் டேஹ்லி 24ஆவது நிமிடத்தி ஒரு கோலை அடித்தார். ஜேர்மனி அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டி போர்த்துக்கல், நெதர்லன்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போர்த்துக்கல் அணி 2 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. முதல் கோல் நெதர்லன்ட்ஸ் அணியின் வீரர் வார்டினால் அடிக்கப்பட்டது. போர்த்துக்கல் அணி சார்பாக அதன் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களையும் அடித்தார். முதல் கோல் 28ஆவது நிமிடத்திலும், இரண்டாவது கோல் 74ஆவது நிமிடத்திலும் அடிக்கப்பட்டன. 

ஜேர்மனி                3    3    0    0    3    9
போர்த்துக்கல்      3    2    0    1    1    6
டென்மார்க்            3    1    0    2    1    3
நெதர்லன்ட்ஸ்     3    0    0    3    -3    0
(போட்டிகள், வெற்றி, சமநிலைமுடிவு, தோல்வி, கோல் வித்தியாசம், புள்ளிகள் )


இலங்கை அணிக்கு இரண்டாவது வெற்றி
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடை பெற்றது. இலகுவாக இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. தொடர் நிச்சயமான தோல்வி இல்லை என்ற நிலை. அடுத்த போட்டியை வெற்றி பெற்றால் இலங்கை அணி, தொடர் அவர்களுக்கு. பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் தொடர் சமநிலையில் நிறைவடையும்.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி 100 ஓட்டங்களைப் பெற முதலில் 3 விக்கெட்களை இழந்தது. குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோரது நான்காவது விக்கெட் இணைப்பாட்டம் 110 ஓட்டங்களை தர இலங்கை அணி 200 ஓட்டங்களைப் பெற்றது. மஹேல ஜெயவர்தன 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நடுவரின் தவறு இவரின் ஆட்டமிளப்புக்கு காரணமாக அமைந்தது. சொஹைல் தன்வீர் வீசிய பந்து முறையற்ற பந்து. நடுவர் அதை கவனிக்கவில்லை. குமார் சங்ககார 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சதமடிக்கும் வாய்ப்பு இருந்தது. பொறுமையாக ஆடி இருக்கலாம். அவரின் ஆட்டமிழப்பு நிச்சயம் இன்னும் சிறிதளவு ஓட்டங்களை இலங்கை அணிக்கு இல்லாமல் செய்தது. பந்து வீச்சில் சொஹைல் தன்வீர், சைட் அஜ்மல், மொஹம்மத் ஹபீஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்களை கைப்பற்றினர். பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் ஓட்டம் எதுவும் இல்லாமல் விழுந்தது. அடுத்த இரண்டு இணைப்பாட்டங்கள் நல்ல முறையில் அமைந்தது. 166 ஓட்டங்களில் வைத்து மூன்றாவது விக்கெட் விழ விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. திசர பெரேரா ஹட்ரிக் மூலம் மூன்று விக்கெட்களை வீழ்த்த பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. 45 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. ஆசர் அலி ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்கள். மிஸ்பா உல் ஹக் 57 ஓட்டங்கள். பந்துவீச்சில் திசர பெரேரா 4 விக்கெட்கள். லசித் மாலிங்க 2 விக்கெட்கள். போட்டியின் நாயகன் திசர பெரேரா. இந்த தொடரில் இரண்டாவது போட்டி நாயகன் விருது அவருக்கு. இலங்கை அணியில் நிச்சய இடம் பிடித்த அவர் இந்த தொடருடன் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.


மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்த இங்கிலாந்து அணி

இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்களைப் பெற்றது. இதில் இயன் பெல் 126 ஓட்டங்களைப் பெற்று நல்ல ஆரம்பத்தை வழங்கினார். ஜொனதன் ட்ராட் 42 ஓட்டங்கள். கிரைக் கீஸ்சுவெட்டர் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள். பந்து வீச்சில் மார்லன் சாமுவேல்ஸ் 2 விக்கெட்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 33.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. டுவைன் ஸ்மித் 56 ஓட்டங்கள். மார்லன் சாமுவேல்ஸ் 30 ஓட்டங்கள். பந்து வீச்சில் டிம் பிரஸ்னன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜேம்ஸ் அன்டர்சன், கிரேம் சுவான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் மழை பெய்ததன் காரணமாக 48 ஓவர்களில் மேற்கிந்தியதீவுகள் 287 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டக் வேர்த் லூயிஸ் முறையில் 114 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக டிம் பிரஸ்னன் தெரிவு செய்யப்பட்டார். கெவின் பீற்றர்சன் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியதை அடுத்து இயன்பெல் அந்த இடத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கியவர். நல்ல முறையில் ஆரம்பித்துள்ளார். க்றிஸ் கெயில் ஆரம்ப ஒருநாள் போட்டிகளுக்காக அணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் உபாதை காரணமாக அவர் விளையாடவில்லை.


You May Also Like

  Comments - 0

  • maran Wednesday, 20 June 2012 04:56 PM

    இலங்கை அணிக்கு எனது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    uvais.m.s Wednesday, 20 June 2012 07:08 PM

    இலங்கை அணி டெஸ்ட் போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .