2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கடந்தவார களங்கள்... (மே 04 - மே 10)

A.P.Mathan   / 2012 ஜூன் 12 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - பாகிஸ்தான் முதல் ஒருநாள் சரவதேசப் போட்டி
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பமாகி இருந்தது. கடந்த 07ஆம் திகதி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. மழை குறுக்கிட்ட ஒரு போட்டியாகவும், இலங்கை அணி மோசமாக சொதப்பிய ஒரு போட்டியாகவும் அமைந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப விக்கெட்கள் மிக வேகமாக வீழ்ந்தன. இலங்கை அணி 100 ஓட்டங்களை தானும் தாண்டுமா என்ற நிலையில் லஹிறு திரிமன்ன, நுவான் குலசேகர ஆகியோருடைய 8ஆவது விக்கெட் இணைப்பாட்டம் 50 ஓட்டங்களை தர 42 ஓவர்களாக மாற்றப்பட்ட போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. லஹிறு திரிமன்னே ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். உதிரிகள் 31 ஓட்டங்கள். நுவான் குலசேகர 18 ஓட்டங்கள். திசர பெரேரா 17 ஓட்டங்கள். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு மிக அபாரமாக இருந்தது. உமர் குல் 24 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்கள். மொஹமட் சாமி 19 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்கள்.மொஹமட் ஹபீஸ் 20 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்கள்.

பதிலளித்த பாகிஸ்தான் அணி 34.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. மொஹமட் ஹபீஸ் 37 ஓட்டங்களை பெற்ற அதேவேளை  உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்கள். மிஸ்பா உல் ஹக் 30 ஓட்டங்கள். நுவான் குலசேகர, லசித் மலிங்க, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக உமர் குல் தெரிவானார்.

இந்த போட்டியை பார்வையிட மிக சொற்ப அளவானவர்களே வருகை தந்து இருந்தனர். சீரற்ற காலநிலை, போக்கு வரத்து வசதிகள் குறைவு என்பதுடன் அதிகரித்த டிக்கெட் விலையும் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இருக்கைகள் அற்ற நின்று பார்க்கும் அல்லது புற் தரையில் அமர்ந்து பார்க்கும் இடத்திற்கு ரூபா 300 உம், அடுத்தபடியாக கீழ் மட்டத்தில் இருக்கைகளில் அமர்ந்து பார்க்கும் இடத்திற்கு ரூபா 1000 உம், இரண்டாம் தட்டில் அமர்ந்து பார்க்கும் இடத்திற்கு ரூபா 3500 உம், மூன்றாம் தட்டில் அமர்ந்து பார்க்கும் இடத்திற்கு ரூபா 2000 உம் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கண்டி போன்ற இடங்களிற்கு இந்த தொகை அதிகமே.


ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர்
ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர் கடந்த 08ஆம் திகதி ஆரம்பமாகி இருந்தது. 14ஆவது ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடரை போலாந்து - உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 16 நாடுகள் பங்கு பற்றும் இந்த போட்டி தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது. குழு நிலைப் போட்டிகள் 24 நடைபெறவுள்ளன. அவை நான்கு பிரிவுகளாக உள்ள அணிகளுக்கிடையில் நடைபெறும். அவற்றில் முதல் 8 இடங்களைப் பெறும் அணிகள் கால் இறுதிப் போட்டிகளில் விளையாடும். வெற்றி பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டியிலும், அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியிலும் விளையாடும். மொத்தமாக 32 போட்டிகள் நடைபெறவுள்ளன.

குழு நிலைவரம்

குழு A                   
செக் குடியரசு
போலாந்து
கிறீஸ்
ரஷ்யா

குழு B
டென்மார்க்
ஜேர்மனி
நெதர்லாந்து
போர்த்துக்கல்

குழு C
குரேசியா
இத்தாலி
அயர்லாந்து
ஸ்பெயின்

குழு D
இங்கிலாந்து
பிரான்ஸ்
ஸ்வீடன்
உக்ரெய்ன்

இதுவரை நிறைவடைந்த போட்டிகள்
போட்டி ஆரம்பித்த நாள் முதற்ப் போட்டி. போட்டியை நடத்தும் போலாந்து, கிரீஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டி 1 - 1 என்ற நிலையில் சமநிலையில் நிறைவடைந்தது. போலாந்து அணிக்கு 17ஆவது நிமிடத்தில் கோல் கிடைத்தது. லேவேண்டோஸ்கி அந்த கோலை அடித்தார். கிரீஸ் வீரர் சல்பிங்கிடிஸ் அடித்த கோலின் மூலம் போட்டி 51ஆவது நிமிடத்தில் சமநிலை பெற்றது. கிரீஸ் அணிக்கு 71ஆவது நிமிடத்தில் பெனால்டி உதை கிடைத்தும் அதை தவற விட்டார்கள். போலந்து கோல் காப்பாளர் தடுத்து தனது அணியை காப்பாற்றினார். இரண்டு அணிகளிலும் ஒவ்வொருத்தருக்கு சிவப்பு நிற அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர். கிரீஸ் அணியின் ப்பஸ்டாதௌப்லஸ் 44ஆவது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார் (இரண்டு மஞ்சள் அட்டைகள்). போலந்து அணியின் சைஸ்னி 69ஆவது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார் (கோல் வாய்ப்பை இல்லாமல் செய்த பௌல்). இந்த போட்டி போலந்து வார்சாவ் தேய மைதானதில் நடைபெற்றது.

இரண்டாவது போட்டி ரஷ்யா, செக் குடியரசு அணிகளுக்கிடையில் நடைபெற்றது. ரஷ்யா அணி ஐரோப்பிய கிண்ண போட்டி தொடரின் ஆரம்ப காலங்களில் சோவியத் ஒன்றியமாக பலமான அணியாக இருந்தது. இம்முறை அவர்களின் ஆரம்பம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. 4 -1 என்ற கோல் அடிப்படையில் செக் குடியரசு அணியை வெற்றி பெற்றது. 15ஆவது நிமிடத்திலும், 79ஆவது நிமிடத்திலும் சகூவ் 2 கோல்களை அடித்தார். ஷிரகூவ் 24ஆவது நிமிடத்திலும் பவிலுசெங்கோ 82ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். செக் அணி சார்பாக பிலர் 52ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த போட்டியில் ஒரு மஞ்சள் அட்டைதானும் காட்டப்படவில்லை என்பது வீரர்கள் ஒழுக்கமாக, சிறப்பாக விளையாடியுள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.


குழு A இன் புள்ளி நிலைமைகள்
ரஷ்யா                         1    1    0    0    3    3
கிரீஸ்                          1    0    0    1    0    1
போலந்து                    1    0    0    1    0    1
செக் குடியரசு           1    0    1    0    -3    0
(போட்டிகள், வெற்றி, தோல்வி, சமநிலை, கோல் வித்தியாசம், புள்ளிகள்)

இரண்டாவது நாளில் குழு B இற்கான இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதற்ப்போட்டி நெதர்லாந்து, டென்மார்க் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டென்மார்க் அணி 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று 3 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. ரோன் டெலி 24ஆவது நிமிடத்தில் அடித்த கோலின் மூலமாக டென்மார்க் அணிக்கு வெற்றி சொந்தமானது. இரண்டு அணிகளும் பந்து பரிமாற்றங்களில் கிட்டத்தட்ட சம அளவில் விளையாடி இருந்தன. உக்ரைன் மெடலிஸ்ட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று இருந்தது.

அடுத்த போட்டி போர்த்துக்கல், ஜேர்மனி அணிகளுக்கிடையில் நடைபெற்றது. உக்ரைன் அரீனா விவ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜேர்மனி வீரர் மரியா கோமஸ் அடித்த கோலின் மூலம் வெற்றியை தனதாகிக் கொண்டது ஜேர்மனி அணி. கடந்த ஐரோப்பிய கிண்ண போட்டி தொடரிலும் ஜேர்மனி அணி போர்த்துக்கல் அணியை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுக்கமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜேர்மனி அணி 72ஆவது நிமிடத்தில் கோலை பெற்றது முதல் இன்னும் இறுக்கமாக விளையாடியது.


குழு B இன் புள்ளி நிலைமைகள்
ஜேர்மனி              1    1    0    0    1    3
டென்மார்க்          1    1    0    0    1    3
நெதர்லாந்து       1    0    1    0    -1    0
போர்த்துக்கல்    1    0    1    0    -1    0
(போட்டிகள், வெற்றி, தோல்வி, சமநிலை, கோல் வித்தியாசம், புள்ளிகள்)


ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடரின் மூன்றாம் நாளான கடந்த 10ஆம் திகதி குழு C இற்கான போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் நடப்பு உலகச் சம்பியன் ஸ்பெயின் அணியும், இத்தாலி அணியும் மோதின. இந்த போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் நிறைவடைந்தது. 61ஆவது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் டி நட்டலி அடித்த கோலின் மூலம் இத்தாலி அணி முன்னிலை பெற்றாலும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 3 நிமிட இடைவெளியில் ஸ்பெயின் வீரர் செக் பப்ரிகஸ் அடித்த கோலின் மூலம் போட்டி மீண்டும் சமநிலையை அடைந்தது. போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று இருக்க போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இரண்டு அணிகளும் ஒவ்வொரு புள்ளிகளைப் பெற்றுக் கொண்டன.

இரண்டாவது போட்டி குரேசிய - அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியாக நடைபெற்றது. போட்டி ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்திலேயே குரேசிய அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. மன்ட்சுகி அடித்த கோலின் மூலமாக இந்த முன்னிலை கிடைத்த போதும் போட்டியின் 19ஆவது நிமிடத்தில் லெட்ஜர் அடித்த கோலின் மூலம் போட்டியை அயர்லாந்து அணி சமப்படுத்தியது. இடைவேளைக்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் ஜெலவிக் அடித்த கோலின் மூலமாக மீண்டும் குரேசிய அணி போட்டியில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆரம்பித்து 3 நிமிடங்களில் அடுத்த கோலும் அடிக்கப்பட்டது குரேசிய அணியால். முதல் கோலை அடித்த மன்ட்சுகி இந்த கோலை அடித்தார். போட்டி  1 - 0 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது. 3 புள்ளிகள் குரேசிய அணிக்கு கிடைக்க குழு C இல் முதலாம் இடத்தைப் பெற்றார்கள்.

குழு C இன் புள்ளி நிலைமைகள்
குரேசியா            1    1    0    0    2    3
ஸ்பெயின்         1    0    0    1    0    1   
இத்தாலி             1    0    0    1    0    1
அயர்லாந்து      1    0    1    0    -2    0
(போட்டிகள், வெற்றி, தோல்வி, சமநிலை, கோல் வித்தியாசம், புள்ளிகள்)


உலக டுவென்டி டுவென்டி போட்டி தொடர் உத்தியோகபூர்வ நிகழ்வு தூதுவர் லசித் மாலிங்க
இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி போட்டி தொடருக்கான உத்தியோகபூர்வ நிகழ்வு தூதுவராக லசித் மாலிங்க அறிவிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிரிவேற்று அதிகாரி ஹரூன் லோர்கட் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். டுவென்டி டுவென்டி போட்டிகளில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் லசித் மாலிங்க. போட்டிகளிலும் மிக சிறப்பாக செயற்படும் அதேவேளை, வெளி நடவடிக்கைகளிலும் அவர் நல்ல முறையில் செயற்படுவதாலும் அவருடைய வித்தியாசமான அலங்காரங்களும் தோற்றங்களும் இன்னும் டுவென்டி டுவென்டி போட்டிகளுக்கு ஏற்றதாகவும் இருப்பதனால் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்று கூறப்படுள்ளது. இது தனக்கு கிடைத்த கௌரவமாக கருதுவதாகவும் உலகில் உள்ள அத்தனை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த உலக டுவென்டி டுவென்டி செய்திகளை எடுத்து செல்வேன் எனவும் லசித் மாலிங்க கூறியுள்ளார். மேலும் இலங்கையில் இந்த போட்டி தொடரை நடத்த வாய்ப்பளித்தமைக்கு சர்வதேச கிரிக்கெட் சபைக்கு அவர் நன்றி கூறியுமுள்ளார்.

இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி கடந்த 9ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. துடுப்பாட்ட ஒழுங்கு மாற்றம் இலங்கை அணிக்கு கை கொடுக்க துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை குவித்ததன் மூலம் இலகுவாக வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக டில்ஷானின் துடுப்பாட்டம், திசர பெரேராவின் பந்து வீச்சும் வெற்றிக்கு மிக முக்கியமாக அமைந்தன. மழையின் குறுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் ஒரு நிமிடம் மாத்திரமே மழை குறுக்கீடு செய்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது இந்த மைதானத்தில் வெற்றி பெற போதுமானது. இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டில்ஷான், உப்புல் தரங்க ஆகியோர் களமிறங்கினர். தரங்க அண்மைக்காலமாக மத்திய தர வரிசை வீரராகவும், மஹேல ஜெயவர்தன ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் துடுப்பெடுத்தாடி வந்தனர். ஆரம்ப இணைப்பாட்டம் 37 ஓட்டங்கள். தரங்க 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து குமார் சங்ககார 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக தினேஷ் சந்திமால் (32), டில்ஷான் ஆகியோர் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பின்னர் மஹேல ஜெயவர்த்தன, டில்ஷான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 84 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்தனர். மஹேல ஜெயவர்த்தன 45 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இறுதியாக டில்ஷான், திசர பெரேரா ஆகியோர் இன்னிங்ஸை நிறைவு செய்தனர். திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றார். திலகரத்ன டில்ஷான் தனது 13ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். நல்ல ஆரம்பத்தையும் முடிவையும் அவரின் துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு வழங்கியது. 119 ஓட்டங்களை 139 பந்துகளில் அவர் பெற்றார். இதில் 11 நான்கு ஓட்டங்கள், ஒரு சிக்ஸர் அடக்கம்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று 76 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. சரியான இணைப்பாட்டங்களை பாகிஸ்தான் அணியால் உருவாக்க முடியாமல் போனது. அசர் அலி தனித்து நின்று போராடிய போதும் அவருக்கு துணையாக யாரும் இல்லை. 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் அசர் அலி. பந்துவீச்சில் திசர பெரேரா கலக்கினார். 10 ஓவர்கள் பந்து வீசி 44 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்கள். பாகிஸ்தான் அணியுடன் இலங்கை பந்து வீச்சாளர் பெற்ற சிறந்த பந்து வீச்சு பெறுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சிறந்த பந்து வீச்சு பெறுதியும் இதுவே. நுவான் குலசேகர, லசித் மாலிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகன் திசர பெரேரா. இந்த வெற்றியின் மூலமாக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என இலங்கை அணி சமப்படுத்தியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .