2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இந்தியா இனி: தோல்வியும் டோணியும் & சச்சின் இனியும்???

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் டெஸ்ட் தொடர் வெற்றி - 24 வருடங்களுக்குப் பிறகு பெறப்பட்ட அரிய தொடர் வெற்றியின் மகிழ்வோடு இங்கிலாந்து அடுத்து இன்று ஆரம்பிக்கும் Twenty 20 தொடருக்கு புதிய தலைவர் (ஒய்ன் மோர்கன்) ஒருவரின் தலைமையில் உற்சாகமாகக் குதிக்கிறது.

மறுபக்கம் இந்தியா தங்களின் இரு உலகக் கிண்ணங்கள் வென்ற, இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஆகா ஓகோ என்று தூக்கிக் கொண்டாடப்பட்ட, Captain Cool மகேந்திர சிங் டோணியின் மீது கடுமையான விமர்சனங்களை வழங்கிக்கொண்டிருக்கிறது.

தலைமைத்துவத்திலிருந்து டோணி விலகவேண்டும்; மூன்றுவகைப் போட்டிகளுக்கும் வேறு வேறு தலைவர்கள் பரிசீலிக்கப்படும் போன்ற கருத்துக்கள் வெளிவருகின்றன. சுனில் கவாஸ்கர் டோணிக்குப் பதிலாக இளம் வீரர் விராட் கோளிக்கு டெஸ்ட் தலைமைப் பதவி வழங்கவேண்டும் என்கிறார்.


நாக்பூர் டெஸ்ட் போட்டியில் எவ்வாறு தனது பொறுமையான 99 ஓட்டங்கள் மூலம் தன் மீதான துடுப்பாட்ட விமர்சனங்களுக்கு டோணியால் கொஞ்சம் சமாளிக்க முடிந்த மாதிரித் தான், விராட் கோளியும் முன்னைய மூன்று போட்டியிலும் சறுக்கிய பின்னர் தனது சதம் மூலமாக விமர்சனங்களிலிருந்து தப்பித்துள்ளார். அப்படி இருக்கையில் கோளிக்குத் தலைமை?

இந்தியாவின் இளவயதுத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட கபில் தேவ், கோளிக்குத் தலைமை இந்த இளவயதில் வழங்கப்பட்டால் அது அவர் மீது அழுத்தங்களை வழங்கும் என்று தன்னை உதாரணப்படுத்தி சொல்கிறார்.

டோணியைத் தலைமைப் பதவியிலிருந்து அகற்றினாலும் அடுத்த டெஸ்ட் தலைவர் யார் என்ற கேள்விக்குப் பதிலாக யாருமில்லை... போட்டி வழங்கக் கூடியவர்களாகக் கருதப்பட்ட சேவாக்கும், கம்பீரும் கூடத் தத்தம் இடங்களைத் திடப்படுத்திக்கொள்ளப் போராடவேண்டிய நிலையில். இப்போதிருக்கும் நிலையில் டோணிக்கு இது சாதகமான விடயமே...

ஆனால் ஒன்று, கப்டன் கூல் அண்மைய காலம் போலவே தான், இந்த Twenty 20 தொடரிலும் கூலாக இருக்கப் போவதில்லை. விமர்சனங்கள், தோல்விகள் ஏற்படுத்தும் அழுத்தம் அவரை ஆட்டுவிக்கப் போகிறது.

இந்த இடத்திலே தான், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோணத் தொடரின்போது இதே டோணி அடுத்த உலகக் கிண்ணத்துக்கு முன் தான் ஓய்வு பெற்று விடும் எண்ணம் உண்டு எனவும் 2013இன் போது டெஸ்ட் அணித் தலைமையிலிருந்து விலக இருப்பதாக அறிவித்தபோது இனி இந்தியக் கிரிக்கெட்டின் நிலை என்னாவது என்று இதே ஊடகங்கள், விமர்சனங்கள் பதறியதை இப்போது ஞாபகப்படுத்தவேண்டி இருக்கிறது.

முன்பு டோணியின் எந்த ஒரு முடிவையும், அணித்தெரிவையும் தீர்க்கதரிசனமாகப் பார்த்தவர்கள், அண்மைக்காலத்தைய இந்திய அணியின் தோல்விகளுக்குப் பின்னர் அவற்றை டோணியின் பக்கச் சார்பு, தனக்குப் பிடிக்காதவர்களை அணியில் சேர்க்காமல் விடும் சர்வாதிகாரப் போக்கு என்று விமர்சிக்கவும் ஆரம்பித்துள்ளார்கள்.

இறுதியாக இதற்கு ஏற்றாற்போல கிடைத்த அல்வா தான் தொடர்ச்சியாக உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்துவரும் அஜியாங் ரஹானே தொடர்ந்தும் விளையாடாமலே காத்திருக்க, டெஸ்ட் வீரராகக் கருதப்படாமல் வந்த ரவீந்திர ஜடேஜா - டெஸ்ட் அறிமுகம் பெற்றமை. (ஜடேஜாவின் முதல் தரப் போட்டிகளின் பெறுபேறும் மிகச் சிறப்பாக அமைந்தமை இங்கே குறிப்பிடத்தக்கன தான்).

அதேபோல ஆடுகளங்கள் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்படவேண்டும் என்று கேட்டும், ஆடுகளப் பராமரிப்பாளருடன் மோதியும் இன்னொரு பக்கம் டோணியின் நற்பெயர் சிக்கலாகியது.

பந்துவீச்சு மாற்றங்களிலும் டோணியின் வழமையான நுட்பங்களையோ, அல்லது ஆடுகளத் தன்மை, ஆட்டப்போக்கு அறிந்து செய்த சாமர்த்தியங்களையோ காணமுடியவில்லை.

உலகக் கிண்ண வெற்றியின் உற்சாகத்தில் பயணிக்கும் டோணி, இறுதியாக நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்பதில் தோல்வியையும் ஐந்தில் மட்டும் வெற்றியையும் சுவைத்திருக்கிறார். இந்த ஐந்தில் நான்கு பலவீனமான நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுக்கெதிராக இந்தியாவில் பெறப்பட்டவை.

எனினும் இன்று ஆரம்பிக்கும் இங்கிலாந்து அணிக்கெதிரான Twenty 20 தொடரும், அதன் பின்னர் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கெதிரான பரபரப்பான தொடரும் இந்தியா பெறக்கூடிய வெற்றிகள் (பெற்றால்) டோணி தன்னைத் திடப்படுத்திக்கொள்ள உதவும்.
-----

இந்த தோல்வி தருகின்ற அடுத்த கேள்வி, சச்சின் எப்போது ஓய்வை அறிவிக்கப் போகிறார்?


இந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் ஒரு இன்னிங்சில் பெற்ற 76 ஓட்டங்களைத் தவிர ஏனைய 5 இன்னிங்சில் 36 ஓட்டங்களையே எடுத்திருக்கிறார். சராசரி 18.66. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட்கள் அடங்கிய தொடர் ஒன்றில் சச்சின் பெற்ற மிக மோசமான சராசரி இதுவே.

நாற்பது வயதாகும் உலகின் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற சாதனையாளர் தொடர்ந்து தடுமாறியும், தளர்ந்தும் வருகிறார் என்பது அவரது கடந்த இரு வருடப் பெறுபேறுகளிலேயே தெரிகிறது. 18 டெஸ்ட் போட்டிகளில் 1113 ஓட்டங்கள். சராசரி 35.90. ஒரேயொரு சதம்.

ரஹானே, திவாரி, இன்னும் பல இளம் வீரர்கள் வெளியே வாய்ப்புக்காகக் காத்திருக்க, சச்சின் தானும் தடுமாறி அணியையும் தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்கள் கிளம்பியுள்ளன வழமை போலவே...

இந்தியா அடுத்த டெஸ்ட் தொடர் விளையாட சில மாதகாலம் இருப்பதால் சச்சின் என்ன முடிவை எப்போது எடுப்பார் என்று அனைவருமே காத்துள்ளார்கள்.


ஆனால் சாகிர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு வழங்கிய வாய்ப்புக்களை சரியாக அவர்கள் பயன்படுத்தாத காரணத்தினால் துணிச்சலாக, இரக்கமில்லாமல் தேர்வாளர்கள் அவர்களை அணியை விட்டுத் தூக்கியதுபோல சச்சின் டெண்டுல்கர் விவகாரத்திலும் எடுப்பார்களா என்ற ஒரு கேள்வி ஒரு பக்கம்...

மறுபக்கம், ஒரு சில இனிங்சில் ஓட்டங்கள் பெற்றாலும் பொதுவாகத் தடுமாறிய சேவாக், கம்பீர், பந்துவீச்சில் நினைத்தபடி பெரிதாக சாதிக்காத வேகப்பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்டத்தில் பிரகாசித்தாலும் பந்துவீச்சில் எதிர்பார்த்தபடி சோபிக்காத அஷ்வின் போன்றோரையும் இதே தேர்வாளர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

இன்று ஆரம்பிக்கும் Twenty 20 தொடர் இன்னும் இந்தியாவின் இளம் வீரர்களுக்கான மேடையாக அமையவுள்ளதுடன், டோணிக்கான தனிப்பட்ட தலைமைத்துவப் பரீட்சையாகவும் உள்ளது என்னமோ மறுக்க முடியாத உண்மைதான்...!!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .