2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கடந்த வார களங்கள் (ஓகஸ்ட் 27 – செப்டெம்பர் 02)

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்க அணிக்கு முதல் வெற்றி
இங்கிலாந்து - தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ஹசிம் அம்லா 150 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இதுவே அவருடைய கூடுதலான ஓட்டங்கள். கிரேம் ஸ்மித் 52 ஓட்டங்கள். பந்துவீச்சில் கிரேம் சுவான் 2 விக்கெட்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் இயன் பெல், சமித் பட்டேல் ஆகியோர் தலா 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். வேய்ன் பார்னல், ரொபின் பீற்றர்சன், மோர்னி மோர்க்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 80 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக ஹசிம் அம்லா தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆபிரிக்க அணி தரப் படுத்தல்களில் முதல் இடத்தை தனதாக்கிக்கொண்டது. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி தொடரிலும் இங்கிலாந்தை வெற்றி கொண்டு டெஸ்ட் தரப்படுத்தல்களில் தென் ஆபிரிக்க அணி முதல் இடத்தை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானை வென்றது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டி தொடர் ஐக்கிய அரபு ராட்சியத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 45.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆசாத் சபிக் 56 ஓட்டங்களையும், உமர் அக்மல் 52 ஓட்டங்களையும் பெற்றனர். மிச்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதுவே அவரின் முதல் ஐந்து விக்கெட் பெறுதியாகும். ஜேம்ஸ் பட்டின்சன் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரலிய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா சார்பாக மைக்கல் கிளார்க் 66 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லீ ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சைட் அஜ்மல் 3 விக்கெட்களையும், மொஹமட் ஹபீஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஐந்து விக்கெட்களை கைப்பற்றிய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். 

இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது
தென் ஆபிரிக்க அணி முதற்ப் போட்டியில் வெற்றி பெற்று இருந்த நிலையில் இங்கிலாந்து அணி போராட்டத்துக்கு மத்தியில் வெற்றி பெற்று தொடரை உயிர்ப்பித்தது. டெஸ்ட் தொடர் தோல்வி, ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் ஆரம்பம் தோல்வி என்ற நிலையில் ஒருநாள்ப் போட்டி தொடரிலும் இங்கிலாந்து அணி தோல்வியை சந்திக்கப் போகின்றது என்ற நிலையில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. ஒரு நாள்ப் போட்டிகளின் வெற்றிக்கு கெவின் பீற்றர்சன் தேவை என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீற்றர்சன் இல்லாமலே வெற்றி பெறமுடியும் என இங்கிலாந்து அணி வென்று காட்டியது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. ஹசிம் அம்லா 43 ஓட்டங்களையும், டீன் எல்கர் 42 ஓட்டங்களையும் பெற்றனர். ஜேம்ஸ் அன்டர்சன் 9.4 ஓவர்களில்  44 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார். 9 ஓவர்கள் பந்து வீசி ஜேட் டேர்ன்பச் 44 ஓட்டங்களிற்கு  3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். ஜேம்ஸ் ரெட்வெல் 2 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஜொனதன் ரொட் மெதுவாக துடுபெடுத்தாடி ஆரம்பம் ஒன்றை வழங்க ஒய்ன் மோர்கன் அதிரடியாக அடித்தாடி வெற்றியைப் பெற்றுக் கொண்டார். ஜொனதன் ரொட் 125 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஒய்ன் மோர்கன் 67 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ரொபின் பீற்றர்சன் 10 ஓவர்களில் 39 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். போட்டியின் நாயகனாக ஒய்ன் மோர்கன் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் கடந்த போட்டியில் இங்கிலாந்து இழந்த முதலாமிடத்தை மீண்டும் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது
ஐக்கிய அரபு ராட்சியத்தில் நடை பெற்றுவரும் அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என பாகிஸ்தான் அணி சமன் செய்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் கூடுதலான ஓட்டங்களை மைக்கல் ஹஸ்ஸி பெற்றுக் கொண்டார். 61 ஓட்டங்களை அவர் பெற்ற அதேவேளை ஜோர்ஜ் பெய்லி 39 ஓட்டங்களையும், மைக்கல் கிளார்க் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார். சைட் அஜ்மல் 10 ஓவர்கள் பந்து வீசி 32 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். ஜுனைத் கான் 9 ஓவர்கள் பந்துவீசி  52 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார்.

பதிலளித்த பாகிஸ்தான் அணி 43.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. கூடுதலாக நசீர் ஜம்ஷெட் 97 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஆஷர் அலி ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அவுஸ்திரேலிய அணி சார்பாக 8 பந்துவீச்சாளர்களை பாவித்தும் பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை. போட்டியின் நாயகனாக நசீர் ஜம்ஷெட் தெரிவானார்.

இங்கிலாந்து அணி நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது
நான்காவது போட்டி இரு அணிகளுக்குமிடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 220 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ஹசிம் அம்லா 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஏ.பி.டி.வில்லியர்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். டீன் எல்கர் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 20 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார் ரொபின் பீற்றர்சன். பந்துவீச்சில் ஜேம்ஸ் ரெட்வெல் 8 ஓவர்கள் பந்துவீசி 35 ஓட்டங்களைப் கொடுத்து 3 விக்கெட்களைக் பெற்றுக்கொண்டார். ரவி போபரா 9 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 46.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அணித் தலைவர் அலஸ்டயர் குக் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும் இயன் பெல், ஜொனதன் ரொட் ஆகியோருடைய இணைப்பாட்டம் 141 ஓட்டங்களை தர வெற்றி இலக்கு இலகுவானது. இயன் பெல் 88 ஓட்டங்களை பெற்ற அதேவேளை, ஜொனதன் ரொட் 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஒய்ன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். டேல் ஸ்டைன் 9.4 ஓவர்களில் 47 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 2 - 1 என்ற முன்னிலை பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி தொடர் தோல்வியில் இருந்து தப்பியுள்ளதுடன் தரப்படுத்தல்களில் இழந்த முதல் இடத்தை மீண்டும் கைப்பற்றிக் கொண்டது. அடுத்த போட்டியில் தோல்வியடைந்தாலும் முதல் இடம் பறிபோகாது. இந்த தோல்வி மூலமாக தென் ஆபிரிக்க அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று கைப்பற்றிக் கொண்ட முதல் இடத்தை இழந்தது மட்டுமல்லாமல் மூன்றாமிடத்திற்கும் பின்தள்ளப்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் வென்றால் மாத்திரமே இரண்டாமிடம் மீண்டும் கிடைக்கும்.

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் இறுதிப் போட்டி
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டி தொடரின் இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரை இறுதிப் போட்டிகள் முழுமையாக மழை காரணமாக நடை பெறாமலே இறுதி அணிகள் முதல் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன. அந்த வகையில் ஊவா நெக்ஸ்ட், நகனஹிர நாகாஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இறுதிப் போட்டியும் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. டக் வேர்த் லூயிஸ் முறையில் ஊவா நெக்ஸ்ட் அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. மழை காரணமாக முதலில் போட்டி 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய நகினஹிர நாகாஸ் அணி 4 விக்கெட்களைக் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அஞ்சலோ மத்தியூஸ் அடித்தாடினார். ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 8 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டார். அன்று மக்டொனல்ட் 24 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். நகினஹிர நாகஸ் அணி பதிலுக்கு 5.1 ஓவர்களில் 63 ஓட்டங்களைப் பெற்று இருந்த வேளையில் மழை மீண்டும் பெய்ய போட்டி நிறுத்தப்பட்டது. போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட முடியாமல் போக டக் வேர்த் லூயிஸ் முறையில் முடிவு காணப்பட்டது. 5.1 ஓவர்களில் 45 ஓட்டங்கள் போதும் என்ற நிலையில் நகினஹிர நாகாஸ் அணி 63 ஓட்டங்களைப் பெற்று இருந்தமையினால் 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுக் கொண்டது. டில்ஷான் முனவீர அடித்த அடி வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. 23 ஓவர்களில் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 5 ஆறு ஓட்டங்கள், 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். போட்டியின் நாயகனாக டில்ஷான் முனவீர தெரிவு செய்யப்பட்டார். போட்டி தொடர் நாயகனாக சமிந்த எரங்க தெரிவு செய்யப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .