2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி

A.P.Mathan   / 2012 ஜூலை 04 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்ன் மூன்றாவது தடவையாக ஐரோப்பிய சம்பியனாகியுள்ளது; அத்துடன் இதுவரை ஐரோப்பியக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக ஒருமுறை வென்ற கிண்ணத்தை மீண்டும் தொடர்ச்சியாகக் கையகப்படுத்திய சாதனையையும் படைத்துள்ளது. La Furia Roja (Spanish) - The Red Fury என்று செல்லப் பெயரால் அழைக்கப்படும் ஸ்பானிய அணி தொடர்ச்சியாக வென்ற உலகின் மூன்றாவது முக்கியமான மகுடம் இது. இரு ஐரோப்பியக் கிண்ணங்களும் உலகக் கிண்ணமும்...

நாம் ஏற்கெனவே இந்தப் பகுதியில் முன்னைய கட்டுரையில் எதிர்வுகூறியிருந்ததைப் போலவே ஸ்பெய்ன் அணியின் வியூகத்தை மிகக் கச்சிதமாக முன் கள முன்னணி வீரர் ஒருவரையும் உள்ளடக்கி அமைத்ததன் மூலம் இத்தாலி அணியைவிடப் பன்மடங்கு பலத்துடன் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தது. ஜேர்மனி அணியை அரையிறுதியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த இத்தாலி அணியா இதுவெனும் அளவுக்கு மிக மோசமான அணியாக இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஆட்டம் அமைந்திருந்தது.

உக்ரேய்னின் கீவ் நகரில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இரு பாதிகளிலும் தலா இரு கோல்களாக ஸ்பெய்ன் அடித்து வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கியது.

இரு பக்கப் பயிற்றுவிப்பாளர்களும் தமது வெற்றிகர வழிமுறைகளையே பின்பற்றிய இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் அணி அடிக்கடி அண்மைக்காலத்தில் இப்படியான முக்கிய போட்டிகளில் விளையாடிய அனுபவமோ என்னவோ பதற்றமில்லாமல், இலகுவான முறையில் ஆட்டத்தை ஆரம்பித்து முன்னகர்த்தியது.

முன் கள வீரர் பப்ரெகாசின் உதவியால் முதலாவது கோலை சில்வா தலையால் இடித்துப் பெற்றார். இம்முறை ஐரோப்பியக் கிண்ணத்தில் பெரும்பான்மையான கோல்கள் தலை மூலம் அடித்தே பெற்றுக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இரண்டாவது கோல் ஜோர்டி அல்பாவின் அதிரடி சாகசத்தினால் பெறப்பட்டது. அல்பாவின் முதலாவது சர்வதேச கோல் இது என்பது மேலும் சிறப்பாக அமைந்திருந்தது.

ஆனால் பாவம் இத்தாலி, காயத்தினால் பாதிப்படைந்த வீரர் ஒருவரை இடைவேளைக்கு முன்னதாகவே மாற்றவேண்டி வந்திருந்தது. தொடர்ந்து போட்டி இடம்பெற இடம்பெற இத்தாலியின் வீரர்களின் உபாதைகள், காயங்களும் அதிகரிக்க அதுவே இத்தாலியின் வேகமும் குறைவடைய ஆரம்பித்தது.

வழமையாக ஒரு கால்பந்து அணிக்கு இருக்கும் வீரர்களைப் பிரதியீடு செய்யும் வாய்ப்புக்களும் வீரர்களின் உபாதை காரணமாக 56 நிமிடங்களிலேயே இல்லாமல் போய் விட, அதன் பின்னர் மேலும் ஒரு வீரருக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக இத்தாலி பத்து வீரர்களோடேயே விளையாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. 

மாறாக ஸ்பெய்ன் அணியின் இரு முக்கிய பிரதியீடுகளும் அந்த அணிக்கு கோல்களை வழங்கியது. டொரெஸ் பின்னர் மட்டா...

ஐரோப்பிய கிண்ண இறுதிப் போட்டியொன்றில் ஓர் அணி பெற்ற மாபெரும் வெற்றியையும் ஸ்பெய்ன் இந்த 4-0 என்ற வெற்றி மூலமாகப் பதிவு செய்தது.

அதிக கோல்களைப் பெற்ற வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பாதணி விருதைப் பெறுவதற்கு இம்முறை கடும் போட்டி... ஆறு வீரர்கள் தலா மூன்று கோல்களை அடித்திருந்த போதிலும், குறைந்தளவு நேரம் மைதானத்தில் களமிறங்கியிருந்த பெர்னாண்டோ டொரேசுக்கு தங்கப் பாதணி விருது கிடைத்தது.

ஸ்பெய்ன் அணியின் அபாரமான வெற்றிக்கு அந்த நாட்டு மக்கள் நேற்று வழங்கிய மாபெரும் கௌரவம், வெற்றிக் கிண்ணத்துடன் வீரர்கள் வந்த அலங்கரிக்கப்பட்ட பேரூந்தை வழிநெடுகக் காத்திருந்து வரவேற்றனர்.

பொருளாதார சுமை, நிதிநெருக்கடி போன்ற சிக்கல்களால் அண்மைக்காலத்தில் அவதியுற்று வந்த அந்நாட்டு மக்களுக்கு இந்த வெற்றி கொஞ்சமாவது ஆறுதலாக அமைந்திருக்கும்.

இதை விட மேலதிகமாக இன்னொரு செய்தியாக இனி லண்டன் ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கதிற்கும் குறிவைத்துள்ளது ஸ்பெய்ன்.

23 வயதுக்குட்பட்ட வீரர்களே பங்குபற்றும் ஒலிம்பிக் போட்டிக்கான கால்பந்தாட்ட போட்டிகளுக்கான ஸ்பெய்னின் குழுவில், ஐரோப்பியக் கிண்ணம் வென்ற அணியில் இடம்பெற்ற மூன்று வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள்.

80களிலும் 90களிலும் எத்தனையோ திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் முக்கியமான போட்டிகளில் வெல்ல முடியாமல் தடுமாறி வீழ்ந்து கொண்டிருந்த, தங்கள் திறமையை நிரூபிக்க முடியாமல் இருந்த ஸ்பெய்ன் அணி, கடந்த ஐந்து வருடங்களில் தம்மை சரியான முறையில் சுய மதிப்பீடு செய்து, சரியான வழிவகையைக் கண்டறிந்து இப்போது உலகின் மிகச் சிறந்த கால்பந்து அணியாக எழுந்து நிற்கிறது. இதற்கு அவர்களது பயிற்றுவிப்பாளர் விசென்டே டெல் பொஸ்கே மிக முக்கியமான காரணம்.

சரியான வீரர்களைத் தெரிவு செய்வதும், மற்ற அணிகளில் எழுகிற குற்றச் சாட்டுக்கள் போல பாரபட்சம், ஒழுக்கவீனம் போன்ற எவையும் எழாததுமே நல்ல உதாரணங்கள்.

பொஸ்கேயின் நெறியாள்கையில் ஸ்பெய்ன் அணி இப்போதே உலகில் ஆதிக்கம் செலுத்திய மிகச் சிறந்த கால்பந்து அணிகளான 50களின் ஹங்கேரி, 60,70களில் இருந்த பிரேசில், 70களில் இருந்த மேற்கு ஜேர்மனி ஆகிய அணிகளோடு ஒப்பிடப்பட ஆரம்பித்துவிட்டது. இன்னும் தொடரும் வெற்றிகள் ஸ்பெய்னின் புகழை மேலும் உயர்த்தும்; அதேபோல ஸ்பெய்ன் மீது இனி தொடர்ந்து வென்றுகொண்டே இருக்கவேண்டும் என்ற அழுத்தமும் வரப்போகிறது.

ஆனால் சாதிக்கும் இந்த சிவப்பு வீரர்களின் தொடர்ச்சியான வெற்றிப்பயணம் மேலும் சிறக்கட்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .