2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

வைரம் வாங்கினால் மரணம் நிச்சயம்

Mayu   / 2024 ஜூன் 26 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆங்கிலேயருக்கு முன்பிருந்து இந்தியாவில் பல கோயில்களும், அரசு கருவூலங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அப்படி எடுக்கப்பட்ட பொருட்களில் ஒன்று தான் ஹோப் வைரம்.

இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வைரம், தற்போது அமெரிக்காவில் இருக்கிறது என ​சொல்லப்படுகிறது.  இன்று வரையில் இந்த வைரம் பற்றி பல கதைகள் உண்டு. உலகின் விலைமதிக்க முடியாத ஒன்றாக நம்பப்படும் இந்த வைரம் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை பார்க்கலாம்.

குண்டூரில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் இருந்து இந்த வைரம் எடுக்கப்பட்டதாக நீண்டகாலமாக நம்பப்படுகிறது. இருப்பினும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வஜ்ரகரூரில் உள்ள கிம்பர்லைட் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று புதிய சான்றுகள் தெரிவிக்கின்றன.

17ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோப் வைரம், பல முறை கைமாறிவிட்டது. பிரெஞ்சு ரத்தின வியாபாரி ஜீன் பாப்டிஸ்ட் டேவர்னியர் அதை பட்டைத்தீட்டாத வடிவத்தில் வாங்கியுள்ளார்.

பின்னர் பட்டைத் தீட்டப்பட்டு, 115 காரட் நீல நிறத்தில் காட்சியளித்த அந்த வைரம் பிரான்சின் லூயிஸ் XIV மற்றும் மேரி அன்டோனெட் ஆகியோரின் கைகளுக்கு மாறியது. 1839ஆம் ஆண்டில் அது கல் ஹென்றி டயமண்ட் ஹோப் என்பவரால் வாங்கப்பட்டது. அதன்பிறகுதான் அது ஹோப் வைரம் என்று அழைக்கப்பட்டது.

அதன்பின்னர், ஹென்றி டயமண்ட் ஹோப்பின் அகால மரணத்திற்குப் பிறகு அவர் சூதாடி பட்ட கடன்களுக்காக, அவரது குடும்பத்தினர் அதை விற்றனர்.

நகைக்கடைக்காரர் வில்ஹெல்ம் ஃபால்ஸ் அந்த வைரத்தை வாங்கிய நிலையில், அவரை அவரது மகனே கொலை செய்து வைரத்தை எடுத்துக் கொண்டார். ஆனாலும் அவரும் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அந்த வைரத்தை எவலின் வால்ஷ் மெக்லீன் என்பவர் வாங்கினார்.

வைரம் வந்து சேர்ந்ததில் இருந்து பல்வேறு துன்பங்களையும், பல்வேறு இழப்புகளையும் அவர் சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக, அவரது 9 வயது மகன் விபத்தில் மரணமடைந்தார்.

 25 வயது மகன் ஒருவர் போதைப்பொருள் அதிகமாக எடுத்துக் கொண்டதால் இறந்தார். அவருடைய கணவரும் அவரை விட்டு விலகிய நிலையில், இறுதியில் வால்ஷ் மெக்லீன் பைத்தியம் பிடித்து இறந்து போனார்.

வால்ஸ் மெக்லீனின் வாரிசுகள் அந்த வைரத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஹாரி வின்ஸ்டன் என்பவருக்கு விற்பனை செய்தனர். ஆனால், அந்த வைரத்தின் சாபத்தைப் பற்றித் தெரிந்து கொண்ட அவர், வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் நிறுவனத்திற்கு சொந்தமான அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

இதனிடையே, ஹோப் வைரம் சபிக்கப்பட்டதற்கு, இந்தியாவில் ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்டதே காரணம் என்றும் ஒரு கதை உண்டு.

எனவே, அந்த வைரத்தை எடுத்தவர்களை கோயில் பூசாரிகள் சபித்ததன் காரணமாகவே, அதன் உரிமையாளர்கள் அகால மரணமடைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மையான கதை என்பது தெரியவில்லை. தற்போது அமெரிக்காவில் இருக்கும் இந்த ஹோப் வைரத்தின் மதிப்பு சுமார் ரூ.2,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X