2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஒலிம்பிக் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக சீனாவிலிருந்து லண்டனுக்கு ரிக்ஷாவில் சென்ற விவசாயி

Menaka Mookandi   / 2012 ஜூலை 27 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்காக சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் இருந்து லண்டன் வரை ரிக்ஷா வண்டியில் சென்றுள்ளார். அவர் 16 நாடுகளைக் கடந்து இங்கிலாந்தை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சென் குவான்மிங் (வயது 57) விவசாயி. அவர் கடந்த 2008ஆம் ஆண்டு சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்துவிட்டு 2012இல் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளையும் கண்டுகளிக்க ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் விஸா மற்றும் பணம் உள்ளிட்டவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
 
இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கிராமத்தில் இருந்து லண்டனுக்கு ரிக்ஷாவில் புறப்பட்டடுள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 16 நாடுகளைக் கடந்த நிலையில் கடந்த 6ஆம் திகதி லண்டனை அடைந்துள்ளார்.

இது குறித்து நரைத்த குறுந்தாடியும், குடுமியுமாக இருக்கும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

'நான் இதுவரை சீனாவை விட்டு வெளியேறியதே இல்லை. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் தான் நான் சீனாவில் இருந்து லண்டன் வந்துள்ளேன்.

வரும் வழியில் தாய்லாந்து வெள்ளத்தையும், துருக்கியின் கடுங்குளிரையும் தாண்டி வந்துள்ளேன். நான் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வந்துள்ளேன். விருதை எதிர்பார்த்து இவ்வாறு செய்யவில்லை.

பிரான்சில் இருந்து படகு மூலம் இங்கிலாந்து வந்து சேர்ந்தேன். இந்த பயணத்திற்கு நண்பர்கள், அன்பான மக்கள், வழி நெடுகிலும் உள்ள சீன மக்கள் பண உதவி செய்தனர்' என்றார்.

அவரது ரிக்ஷாவில் பாரிசில் உள்ள ஈபில் கோபுரம், கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் டவர்ஸ் உள்ளிட்ட பிரபலமான இடங்களில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஒட்டி வைத்துள்ளார். கடந்த 9ஆம் திகதி அவர் லண்டன் தெருக்களில் செய்வதறியாது சென்றதாக இங்கிலாந்தைச் சேர்ந்த காப்புறுதி முகவர் ஜான் பீஸ்டன் தெரிவித்தார்.

அவருக்கு ஒலிம்பிக் போட்டியைக் காண டிக்கெட் வாங்கிக் கொடுக்க தீவிர முயற்சி செய்து வருகிறோம் என்றும் அவர் கூறினார். ஒலிம்பிக் போட்டிகளைக் காண அனுமதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தனது நீண்ட பயணம் பற்றி பெருமிதம் கொண்டுள்ளார் அந்த விவசாயி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .