2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பரீட்சையில் மாணவர்களுக்கு விடைகளையும் இணைத்துக்கொடுத்த பேராசிரியர்

Kogilavani   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்களுடன் விடைகள் அடங்கிய தாளையும் இணைத்து  வழங்கியமைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரிட்டனின் மன்செஸ்டர் பல்கலைகழகத்தில் புவிசரிதவியல் பரீட்சையிலே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரீட்சை நிலையத்தில் ஒரு மாணவன் இந்த தவறை கண்டுபிடித்தையடுத்து குழப்ப நிலை தோன்றியது.

அதன்பின்,  மேற்பார்வையாளர்கள்  உடனடியாக மாணவர்களுக்கு வழங்கிய பரீட்சை வினாத்தாள்களுடன் இணைக்கப்பட்டிருந்த விடைத்தாள் அனைத்தையும் பரித்தெடுத்துள்ளனர். மாணவர்கள் 50 பேரையும் அந்த பரீட்சையை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தினர்.

மேற்படி இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் இரண்டரை மணித்தியால பரீட்சை முடிவடைவதற்கு முன்  கோபத்துடன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த பரீட்சையில் பெறப்படும் புள்ளிகள் பட்டப்படிப்பு இறுதிப் புள்ளிகளுடன் இணைத்துக்கொள்ளப்படவிருந்தது. ஆனால் தலைமையதிகாரிகள் இந்த பரீட்சையை நிராகரித்துள்ளதுடன்  மாணவர்கள் மற்றுமொரு பரீட்சைக்கு தோற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அதில் பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர் ஒருவர்,  இது தொடர்பாக கூறுகையில்,  'சில மாணவர்கள் தமக்கு விடைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை உணரவில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு முறையற்ற சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கோபமடைந்துள்ளனர். உண்மையில் இது மிகப்பெரிய குழப்பமாகும்' என்று தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிந்த பின்னரும் இப்பாடத்தை நாம் மீண்டும் படிக்க வேண்டியிருக்கிறது என்பது வெறுப்பூட்டுவதாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

தான் விடைகளையும் இணைத்துக் கொடுத்தமைக்காக பேராசிரியர் ஹக் கோ மின்னஞ்சல் மூலம் மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இத்தவறை நான் மிக தீவிரமாக கருத்திற்கொண்டுள்ளேன். பரீட்சைக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் படித்திருப்பீர்கள் என்பதை நாம் அறிவோம். இத்தகைய  தவறுகள் பரீட்சைக்கால அழுத்தங்களை அதிகரிக்கின்றன என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம்' என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  பல்கலைக்கழகத்தின் பதில் தலைவரும் பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீட பீடாதிபதியுமான பேராசிரியர் கொலின் பெய்லியும் மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .