2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மார்பகத்திற்குள் பொருத்தப்பட்ட பி.ஐ.பி. சிலிக்கன்களை அகற்றுமாறு 30,000 பெண்களுக்கு பிரான்ஸ் அறிவுற

Kogilavani   / 2011 டிசெம்பர் 23 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமது மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்வதற்காக தவறான சிலிக்கன் பைகளை உள்வைத்து சத்திரசிகிச்சை செய்துகொண்ட சுமார் 30,000 பிரெஞ்சு பெண்களையும் அப்பைகளை  அகற்றிக்கொள்ளும்படி பிரான்ஸ் அரசாங்கம் இன்று சிபாரிசு செய்துள்ளது.

இச்சிலிக்கன் பைகளை அகற்றுவதற்கான செலவுகளை பிரான்ஸ் அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது.

பிரான்ஸை சேர்ந்த பொலி இம்ப்பிளான்ட் புரோதீஸ் (பி.ஐ.பி) எனும் நிறுவனம் தயாரித்த இந்த சிலிக்கன் பைகள் உரிய மருத்துவத் தரம் அல்லாதவை எனக் கூறி பிரான்ஸ் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டது.

பி.ஐ.பி. நிறுவனத்தினால் மார்பக உள்வைப்பபுகளுக்காக பயன்படுத்தப்பட்ட சிலிக்கான்கள் மெத்தைகளுக்குப் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆனால் பிரான்ஸை சேர்ந்த சுமார் 30,000 பெண்களுக்கு இதைப் பயன்படுத்தி மார்பகத்தை பெரிதாக்கும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1000 இற்கும் அதிகமானோருக்கு பொருத்தப்பட்ட சிலிக்கான் பைகள் வெடிப்புக்குள்ளாகின.

அத்துடன் பலர் வேறு பல உபாதைகளுக்கு ஆளாகினர். இச்சத்திர சிகிச்சை செய்துகொண்ட  8 பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை  இத்தவறான சிலிக்கன் பைகளுடன் தொடர்புடையவையா என்பது தெரியவில்லை எனத்   என பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஷேவியர் பேர்ட்ரன்ட் இது தொடர்பாக கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்பங்களிலிருந்து இச்சிலிக்கன் பைகளை அகற்றுமாறு ஆலோசனை கூறியுள்ளதாகவும் ஆனால், இதில் அவசரம் எதுவும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

இச்சிலிக்கான்களை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சைக்கு பிரெஞ்சு அரசாங்கம் நிதியளிக்கும். ஆனால், புற்றுநோய் காரணமாக மார்பகம் அகற்றப்பட்டபின்னர் சிலிக்கன் பை உட்பொருத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே புதிய உள்வைப்பு சத்திரசிகிச்சைக்கு அரசாங்கம் நிதியளிக்கும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரிட்டனில் 400,00 இற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த மார்பக சிகிச்சையை மேற்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் அறிவிப்பு அநாவசிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டுள்ளது என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய மருத்துவ கண்காணிப்பு அமைப்பொன்று இது தொடர்பாக கூறுகையில், பி.ஐ.பி. சிலிக்கன் பொருத்திக்கொண்ட பெண்கள் அவற்றை அகற்ற வேண்டுமென்பதில்லை. எனினும் இது குறித்து கரிசனை கொண்டிருந்தால்  அவர்களின் சத்திரசிகிச்சை நிபுணர் அல்லது வைத்தியசாலையை நாடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

குறைந்தபட்சம் 250 பெண்கள் தமக்கு சத்திரசிகிச்சை செய்த சிகிச்சை நிலையங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பி.ஐ.பி. நிறுவனம் 12 வருடகாலத்தில்  சுமார் 65 நாடுகளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மார்பக சிலிக்கான் பைகளை விற்பனை செய்துள்ளதாக நம்பப்படுகிறது. அவற்றில் அரைப்பங்கு வெனிசூலா, ஆர்ஜென்டீனா, சிலி, கொலம்பியா, பிரேஸில் முதலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டள்ளன.  அங்கு சுமார் 25,000 பெண்கள் இவற்றை பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பிரிட்டன், ஸ்பெய்ன், ஜேர்மனி, இத்தாலி, உக்ரைன் போன்ற நாடுகளிலும் பி.ஐ.பி. சிலிக்கான்களை பயன்படுத்தி மார்பக அழகு சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு மிஸ் கிரேட் பிரிட்டன் அழகுராணியாக தெரிவான ஜெம்மா ஜெரார்ட் (30) அழகுசிகிச்சையாளர் கெத்தரின் கீட் (39) ஆகியோரும் இச்சத்திரசிகிச்சை செய்துகொண்டபின், உபாதை காரணமாக சிலிக்கான்களை அகற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • 3roses Saturday, 24 December 2011 10:54 PM

    உயிரை மாய்க்கும் என தெரிந்தும் தேடிச் செல்பவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். ஏன் இந்த விபரீத செயற்பாடுகளை தேடிச் செல்கின்றார்கள் என்றுதான் இன்னும் புரிகிறதில்லை. இயற்கை அழகு இருக்கு. எதற்கு அதனை பெரிதாக்கிக் கொள்ள வேண்டும்?

    Reply : 0       0

    Kethis Sunday, 25 December 2011 12:38 AM

    பிரிட்டனில் 40,000 பெண்களும் பிரான்ஸில் 30,000 பெண்களும் செயற்கையாக மார்பகத்தை பெரிதாக்கியுள்ளார்களா? இளைஞர்களே ஏமாந்துவிடாதீர்கள்.

    Reply : 0       0

    abusaarah Sunday, 25 December 2011 05:08 PM

    தன் கனவனுக்கு மட்டுமே காட்ட வேண்டிய அழகினை உலகத்துக்கு காட்சிப் படுத்த நிணைத்ததன் விளைவு.
    இதைப் பற்றிப் பேசினால் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறோமாம்....
    இனியாவது மேலைத்தேயவாதிகளின் அறிவுக் கண்கள் திறபடுமா???

    Reply : 0       0

    mana Ummah Sunday, 25 December 2011 09:15 PM

    உண்மையான பெண்களை பார்ப்பது அரிது என நினைக்கிறன்.

    Reply : 0       0

    Raja D Monday, 26 December 2011 04:06 PM

    எமது நாட்டு பெண்கள் இப்படி சிக்கி விட கூடாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .