பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்யவிருந்த ஒருவரை இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளரான மற் பிரயரும், அவ்வணியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் காப்பாற்றியுள்ளனர். மற்றொரு வீரரான ஸ்ருவேர்ட் ப்ரோடும் இப்பணியில் இணைந்திருந்தார்.
ஆஷஸ் தொடரின் ஐந்தாவது போட்டிக்காக சிட்னியில் இங்கிலாந்து அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் உற்சாகப்படுத்தும் குழுவான "பார்மி ஆமி"யின் அறக்கட்டளை நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு அணியின் ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்யவிருந்தவரைக் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த நபர் தனது கடவுச்சீட்டு, கைத் தொலைபேசி, பணப்பை ஆகியவற்றைக் எறிந்து விட்டு, தானும் குதிக்க முற்பட்ட வேளையில், மற் பிரயரும், அவ்வணியின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
அதன் பின்னர் காவல்துறைக்கு தகவலை வழங்கிவிட்டு, மற் பிரயர், ஸ்ருவேர்ட் ப்ரோட், இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் அவருடன் ஒரு மணிநேரமாகக் கதைத்துக் கொண்டிருந்ததாகவும், காவல்துறை அதன் பின்னரே அங்கு வந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.
தற்கொலை செய்ய முயன்ற நபர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.