2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

அரசியல் சர்ச்சையில் சிவாஜி சிலை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 28 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் வைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இச்சிலையை அகற்றக்கூடாது என வேண்டுகோள் விடுத்து, தமிழ் திரையுலகினர் அண்மையில் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து மனுவொன்றை கையளித்திருந்தனர். ஆனால் சிலையை அகற்றலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்பது சிவாஜி ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்நிலையில், சிவாஜியின் கலையுலக நண்பரான கருணாநிதி மீண்டும் முதல்வராக 2006ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டதும், அதற்கு செயல்வடிவம் கொடுத்தார்.

நடிகர் திலகத்தின் நினைவுநாளான ஜூலை 21ஆம் திகதி சென்னை, கடற்கரைச் சாலையில் காந்தி சிலைக்கு எதிரில் சிலையை அமைத்து திறந்து வைத்தார். சிவாஜியின் வீடு இருக்கும் செவாலியே சிவாஜி சாலை- தியாகராயர் சாலை சந்திப்பு, சிந்தாதிரிப்பேட்டை - அண்ணா சாலை சந்திப்பு, கடற்கரைச் சாலையில் தலைவர்கள் சிலைகள் இருக்கும் வரிசையில் ஏதாவது ஓர் இடம் என மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.

ஆனால் ராணி மேரி கல்லூரி, டிஜிபி அலுவலகம் சந்திக்கும் இடத்தில் சாலை அமைக்கப்பட்டது. சிவாஜி சிலையை வைத்து அரசியல் நடத்தப் பார்க்கிறார் கருணாநிதி. தமிழக மக்களின் வரிப்பணத்தில் சிவாஜியின் சிலையை வைக்க தி.மு.க. அரசு ஆர்வம் காட்டுவதற்குக் காரணம், அவர் தேவர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என அப்பொழுதே சர்ச்சை கிளம்பியது.

'போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சிவாஜி சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும்' என சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2006இல் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் தடை விதிக்காததால், சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார். இந்த வழக்கைத் தாக்கல் செய்த சீனிவாசன் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் அவருடைய வழக்கறிஞர் காந்தி என்பவர், மாபெரும் தலைவர் மகாத்மா காந்தியின் சிலை அருகில் சிவாஜி சிலை இருக்கிறது. காந்தியின் முக்கியத்துவத்தைக் குறைத்து, சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

காமராஜர் சாலையில் இருந்து வலப்புறமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் வாகன ஓட்டிகளுக்கும், அதே போல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து வலப்புறமாக சாந்தோம் நெடுஞ்சாலைக்கும் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இந்த சிலை இடையூறாக அமைந்துள்ளது.

மேலும் காமராஜர் சாலையை கடக்கும் பாதசாரிகளை இந்த சிலை மறைத்து விடுவதால் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.சிவாஜி கணேசன் மிகப்பெரிய நடிகர் என்பதால் அவரது சிலையை மெரினா கடற்கரையில் முன்பக்கம் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலையோடு, இவரது சிலையை வைத்தால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்காது. எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டு இருந்தது.

சிவாஜி சிலையை இடமாற்றம் செய்வதற்கு அவரது ரசிகர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம்,சட்டப்படி பார்த்தால் நெடுஞ்சாலையில் சிலை வைக்க முடியாது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவே இருக்கிறது. நாளைக்கு சிறந்த நடிகர்கள் எனச் சொல்லி ரஜினி, கமலுக்குக்கூட அந்தச் சாலையில் சிலை வைக்க வேண்டிய நிலை உருவாகலாம்' என்று கருத்து தெரிவிக்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யும் முடிவுக்கு ரசிகர்கள் போராட்டம், சாலை மறியல் நடத்தலாம் என எதிர்பார்த்து காலை முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பெரும்பாலான ஊடகங்களில் நேற்றைய விவாதமே சிவாஜி சிலையை இடமாற்றம் செய்வது பற்றித்தான். அதில் பேசிய பல ரசிகர்கள் சிவாஜி சிலை அகற்றக்கூடாது என்றே கருத்து கூறினர்.

சிவாஜி சிலை வைக்கப்படும் போது சர்ச்சை எழுந்த போது பேசிய சிவாஜி குடும்பத்தினர், நடிகர் திலகத்துக்கு சிலை வைக்க வேண்டுமென நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கவில்லை. ஒரு மாபெரும் நடிகனுக்கு மரியாதை செய்ய அரசே இப்படி முடிவெடுத்திருக்கிறது.

அதேபோல், சிலை அமைக்கும் விஷயத்தில் யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. இப்போது இதுபற்றி சிலர் சர்ச்சைகளைக் கிளப்புகிறார்கள் என்றனர். இப்போது இடமாற்றம் செய்யப்போவதாக கூறுவதற்கும் சிவாஜி ரசிகர்கள்தான் கொந்தளிக்கின்றனரே தவிர குடும்பத்தினர் யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X