இந்தியாவின் அதியுயர்ந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருது வழங்கி சச்சின் டெண்டுல்கர் கௌரவிக்கப்பட்டுள்ளார். சர்வதேசப் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்ற நிலையிலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
24 வருடங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நிறைவுபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.
இதன் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட இந்தியாவின் பிரதமர் அலுவலகம், சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவித்தது.
சந்தேகமில்லாமல் சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறப்பான கிரிக்கெட் வீரர் எனக் குறிப்பிட்ட பிரதமர் அலுவலகம், உலகம் முழுவதுமுள்ள மில்லியன் கணக்கானவர்களை அவர் உத்வேகப்படுத்தியுள்ளதாகவும், அவர் ஒரு வாழும் ஜாம்பவனான் எனவும் தெரிவித்தது.
16 வயதில் தனது அறிமுகத்தை மேற்கொண்டதிலிருந்து கடந்த 24 வருடங்களில் அவர் உலகம் முழுதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளதாகவும், இந்தியாவிற்காக ஏராளமான போட்டிகளை வென்றுள்ளதாகவும் தெரிவித்த பிரதமர் அலுவலகம், உலகில் இந்தியாவின் விளையாட்டுக்களுக்கான சிறப்பான தூதுவராக அவர் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சாதனைகள் ஒப்பிட முடியாதன எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் அலுவலகம், விளையாட்டில் அவரது சிறப்பான நடவடிக்கைகளுக்காக அவருக்கு ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பாரத ரத்னா விருதைப் பெறும் முதலாவது விளையாட்டு வீரராகவும், இளையவராகவும் சச்சின் டெண்டுல்கர் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.