2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இளைய தலைமுறைக்கு அன்பு போதும்; ஆயுதம் வேண்டாம்: ஐ.நா விழாவில் ஐஸ்வர்யா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

'உலகம் சமாதானத்துடன் இருந்தால் போதும். இன்றைய சூழலில் ஆயுதம் ஏந்துவதன் விளைவை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளைய தலைமுறைக்கு அன்பு போதும்' என்று ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்.

அமைதிக்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவாக ஐ.நா சபையில் நடந்த விழாவில் பங்கேற்றுப் பேசினார் ஐஸ்வர்யா ராய். நிலையான எதிர்காலத்துக்கான நிலையான அமைதி என்ற தலைப்பில், அமெரிக்க மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் கூறியதாவது,

'உங்களுடன் இருக்கும்போது நானும் ஒரு மாணவர் போன்று உணர்கிறேன். ஐ.நா. சபை மீது எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை உள்ளது. ஏனெனில் இந்த அமைப்பினால்தான் சிறந்த ஒற்றுமையான உலகத்தை படைக்க முடியும். காக்கவும் முடியும். ஒற்றுமைதான் தைரியத்தையும், சிறந்த தலைமையையும் வழங்குகிறது. சகிப்புத் தன்மை சிறந்தது. அதை நான் எனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

'நீங்கள்', 'உங்களது', 'நான்' என்ற அகந்தையை கைவிட்டு நாம், நாங்கள் என்ற உணர்வுடன் வாழ வேண்டும். நமது விருப்பு, வெறுப்புகளை கைவிட்டு ஒருவர் மீது ஒருவர் அன்புகொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே அமைதியைப் பெறமுடியும்.

ஆயுதங்களும், போர்களும் அபாயம் மிகுந்தவை. எனவே, இளைய தலைமுறையினர் ஆயுதத்தை கையில் எடுப்பதை கற்பனை செய்தும் பார்க்கக்கூடாது. ஏனெனில் இது உலகத்தையும், தலைமுறையையும் அழித்து விடும். ஆகவே அன்புடன் வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி, பாதுகாப்புடன் வாழ வேண்டும். அமைதி, சமாதானம் என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல. அது உணர்வுகளின் வெளிப்பாடு' என்றார்.

ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா.வின் சமாதான தூதரும், நடிகருமான மைக்கேல் டக்ளஸ், இங்கிலாந்து மனித வாழ்வியல் நிபுணர் ஜொனி குடால், அமெரிக்க யூத எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான எலிவெசல், அமெரிக்க நடிகை மோனிக்கா லமன் ஆகியோரையும் சந்தித்து ஐஸ்வர்யா உரையாற்றியுள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் உலக மக்களுக்கு சமாதான செய்தி வெளியிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் ஐஸ்வர்யா  குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வின் போது 'ஓம் ஷாந்தி' என்ற ஸ்லோகத்துடன் அவர் தனது பேச்சைத் தொடங்கி அதே ஸ்லோகத்துடன் தனது உரையை முடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .