2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ஒரு தலைவன் சரியாக இருந்தால் அந்த அறக்கட்டளையும் சரியாக இருக்கும்: நாராயணன் கிருஷ்ணன்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


'யாருமே பெயருக்காகவும் புகழுக்காகவும் ஓர் அறக்கட்டளையை ஆரம்பித்து விட முடியாது. ஓர் அறக்கட்டளையை ஆரம்பிக்கும் போது இருந்த ஈடுபாடு பின்பு வரும் பெயராலும் புகழாலும் பணத்தாலும் திசைதிருப்பப்படுகின்றது. இதன்போது வேலைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். இங்கு ஒரு கட்டுப்பாட்டுத்தன்மை தகர்க்கப்படுகின்றது. ஒரு தலைவன் சரியாக இருந்தால் அந்த அறக்கட்டளையும் சரியாக இருக்கும்'  என்று கூறுகிறார் இந்தியாவின் மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் 'அக்ஷயா' அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் நாராயணன் கிருஷ்ணன்.

தனது சமையல் கலையின் திறமையினூடாக 19 வயதில் சுவிட்ஸர்லாந்திற்கு சென்று பணிபுரியும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட இவர், அதனை துறந்துவிட்டு அனைத்தையும் விட சமூக பணியொன்றே மேலானது என்று கூறி 'அக்ஷயா' அறக்கட்டளையை கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறார்.

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், அநாதரவானவர்களாக தெருவில் தூக்கியெறியப்படும் வயோதிபர்களுக்கு தனது அக்ஷயாவில் இருப்பிடம் கொடுத்து மூன்று வேளை உணவழித்து அவர்களை தன்னில் ஒருவராக பார்க்கும் செயற்பாட்டை முன்னெடுக்கும் மேற்படி இளைஞன் 'சிஎன்என் டொப் 10 ஹீரோ 2010 விருது' பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரை தமிழ்மிரர் இணையத்தளத்திற்காக நேர்கண்ட போது அவர் பகிர்ந்துகொண்டவை...


கேள்வி:- நீங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறமுடியுமா?


பதில்:- கடந்த 11 வருடமாக கடந்து வந்த பாதைகளை கூறுவதற்கு முன்பாக 11 வருடங்களுக்கு முன்பு எனது பாதை எதுவாக இருந்தது என்பதை கூற விரும்புகின்றேன். நல்ல ஓர் அருமையான பாடசாலை, கல்லூரியில் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. வாழ்க்கையில் எவ்வாறான விடயங்களை நான் பெற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்தேனோ அனைத்துமே எனது வாழ்வில் கிடைக்கப்பெற்றது.

எனக்கு சமையல் கலையில் அதீத ஆர்வம் இருந்தது. ஏனென்றால் எனது தாய் விருந்திற்கு அநேகமானவர்களை அழைப்பார். அதனால் அம்மாவின் சமையலறையில் அவருக்கு பல உதவிகளை புரிவதற்கான வாய்புகள் ஏராளமாக கிட்டின. சமையலில் அன்று ஆரம்பித்த அந்த ஈடுபாடு நான் 12ஆம் வகுப்பை நிறைவு செய்தவுடன் சமையற் கலைக்குள் என்னை முழுமையாக தள்ளிவிட்டது.

ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறிக்குள் என்னை உள்வாங்கிக்கொண்டு சிறந்த புள்ளிகளை பெற்றுக்கொண்டேன். ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றின் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டு சமையல் தலைமையதிகாரியாக பணியாற்றினேன். அப்போது எனக்கு 19 வயது. எனது தொழிலின் திறமையை அவதானித்துவிட்டு ஹோட்டலின் நிர்வாகத்தினர் என்னை சுவிட்ஸர்லாந்திற்கு தொழில் புரிவதற்கு அனுப்புவதாக கூறினார்கள்.

அருமையான வேலை, சிறந்த ஊதியம், போதும் என்று நினைக்கக் கூடிய அத்தனை வசதிவாய்ப்புகளையும் அந்த ஹோட்டல் எனக்கு ஏற்படுத்தி கொடுக்கும்.

சுவிட்ஸர்லாந்திற்கு செல்லும்முன் பெற்றோரை பார்க்க வேண்டுமென்பதற்காக மதுரைக்கு காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். நான் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது மதுரையின் மீனாட்சியம்மன் ஆலயத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் சாலை ஓரத்தில் காணப்பட்ட பாலத்தின் இறக்கத்தின் இடது கையோரம் ஒரு வயதான பெரியவர் தனது மனித நரகலியை எடுத்து உணவாக உண்ணும் காட்சியை கண்டேன்.

அதுவரைக்கும் அவ்வாறானதொரு காட்சியை புத்தகத்தில் படித்ததில்லை, தொலைக்காட்சியில் பார்த்ததில்லை. செவி வழியே கேட்டதுமில்லை. தலையிலிருந்து கால் வரை இரத்தம் ஒரு நிமிடம் சுண்டியதை அந்த தருணத்தில் நான் உணர்ந்தேன். வண்டியை நிறுத்தினேன். அருகிலிருந்த ஹோட்டலுக்கு சென்று உணவை வாங்கி வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தேன். பத்து நொடிகளில் உணவை உட்கொண்ட அந்த பெரியவரின்; கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடியும் காட்சியை கண்டேன். அக்கணம் ஒரு நொடி யோசித்தேன்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றோமே, அங்கு ஆயிரம் பேருக்கு சமைக்கின்றோம். ஐநூறு பேர் வருகின்றனர். முன்நூறு பேர் உணவை உட்கொள்கின்றார்கள். மிகுதி உணவு அனைத்துமே குப்பைத் தொட்டிக்கு செல்கின்றதே. இங்கு நமது மதுரை மண்ணில், எனது மாவட்டத்தில் பசியினால் வாடிக்கொண்டிருக்கும் மக்கள், மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுடைய மனித நரகலியை எடுத்து உணவாக உற்கொள்ளும் அவலத்தை அதனுடன் ஒப்பிட்டு பார்த்தேன்.

பின்பு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று எனது கடமைகளை செய்தேன்;. ஆனாலும் என்னால் எனது வேலையில் கவனத்தை செலுத்தமுடியவில்லை. எனது வேலையை இராஜிநாமா செய்துவிட்டு மதுரைக்கு திரும்பி என்னிடம் இருந்த சேமிப்பு பணத்தைக்கொண்டு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்களுக்கு உணவை வழங்கிக் கொண்டிருக்கின்றேன்.


கேள்வி:- உங்களுடைய அறக்கட்டளைகள் குறித்து கூறுங்கள்?

பதில்:- 'அக்ஷயா' என்ற அறக்கட்டளை. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவில்லாமல் சாலையோரங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் உணவழித்துக்கொண்டிருக்கிறது.
அக்ஷயாவில் மொத்தமாக 450 பேர் உள்ளனர்.

இதுபோக அவர்களை நீராட்டி, தலைமுடி வெட்டி அவர்களது உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் பராமரிக்கின்றோம். மதுரையில் சோலவந்தான் எனும் இடத்தில் புனர்வாழ்வு இல்லமொன்றை நிர்மாணித்துக்கொண்டு வருகின்றோம். 250,000 சதுர அடியில் இவ் இல்லம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இன்னும் 15 வீத வேலைகளே மிஞ்சியுள்ளன. பொது நிதிகள் சற்று குறைவாக காணப்படுவதால் இக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் மெதுவாக சென்றுக்கொண்டிருக்கின்றன.

இன்னும் 6 மாதத்தில் இந்த இல்லத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெறலாம். அவ்வாறு நிறைவு பெற்றால் மதுரை மாவட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ வயதானவர்களோ சாலையோரத்தில் இருக்கமாட்டார்கள்.

குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் அநேகமானவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான நிலைமைகளை தவிர்ப்பதற்காக நாங்கள் ஓர் இல்லமொன்றை வைத்தியசாலையின் வடிவில் அமைத்துக்கொண்டு வருகிறோம். இதன் நிர்மாணப்பணிகள் நிறைவு பெற்றால் இவ்வாறானவர்களை இந்த இல்லத்தில் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து வெறும் உணவுகளை மட்டுமே வழங்காமல் அவர்களுக்கு சிறுதொழில்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை சுறுசுறுப்பாக இயங்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

2010ஆம் ஆண்டு நான் நடத்திக்கொண்டிருக்கும் இந்த அக்ஷயா நிறுவனத்திற்கு சிஎன்என் மூலமாக மிகப்பெரிய திருப்புமுனையொன்று கிடைக்கப்பெற்றது. நூறு நாடுகளில் 10,000 விண்ணப்பங்களில் அக்ஷயாவும் ஒன்று. அந்த 10,000இல் டொப் 20 இற்குள் அக்ஷயா தேர்ந்தெடுக்கப்பட்டது. டொப் 10 இற்குள் இரண்டாவது இடத்தில் அக்ஷயா காணப்படுகிறது. ஹோலிவூட் விருதை வாங்கிய ஒரே ஓர் இந்தியன் என்ற பெருமையை அக்ஷயாவின் மூலம் நான் பெற்றுக்கொண்டேன்.

இளைஞனால் நடத்திக்கொண்டிருக்கும் அறக்கட்டளை, தரமான உணவுகள் மூன்று வேளைகள் மக்களுக்கு கொடுக்கப்படுவதால் கணக்குகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு விருது கொடுப்பது அமைப்புக்கும் அமைப்பினுடைய ஆர்வத்திற்குமே தவிர ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு இல்லை என்பது எனக்கு ஒரு தனிப்பட்ட நம்பிக்கை.

கேள்வி:- இந்த சேவையை முன்னெடுப்பதால், முன்னெடுத்ததால் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கூறமுடியுமா?


பதில்:- ஐரோப்பாவிற்கு சென்ற எனது நண்பர்கள் எனது இல்லத்து தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி 'கிருஷ்ணா வரவில்லை அருமையான வேலை, கிருஷ்ணன் பயந்து விட்டான். இங்கு எல்லாமே ஆனந்தமாக உள்ளது' என எனது தந்தையிடம் கூறியுள்ளனர்.

இதைக் கேள்வியுற்ற எனது பெற்றோர் பயந்துபோனார்கள். சிறப்பான வேலை, இவ்வளவு தூரம் படித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்புகளையும் தொலைத்துவிட்டு இவ்வாறான செயற்பாட்டில் இறங்கிவிட்டானே என எனது பெற்றோர் கவலைகொண்டனர்.

என்னிடம் கேட்காமல் அவர்களது நண்பர்கள், உறவினர்களிடம் இதுதொடர்பில் விளக்கம் கேட்டார்கள்;. உங்கள் பையனுக்கு உளநலம் பாதித்திருக்கலாம். அதனால் அவனை மனோநல நிபுணரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். 30 நாட்கள், 40 நாட்கள் மருந்துகளை கொடுத்து ஓய்வெடுக்க செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

மற்றொரு தரப்பினர், உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பில்லி, சூனியம், ஏவல் இவை ஏதாவது செய்திருக்கலாம். அதனால் உங்களது மகனை கேரளாவின் சோத்தானிகரைக்கு அழைத்துச்சென்று பூஜை செய்யுங்கள். பில்லி, சூனியம், ஏவல், காத்து, கறுப்பு இவை இருந்தால் இந்த பூஜை செய்ய நீங்கிவிடும் என்று கூறியுள்ளனர்.

எனது செயற்பாடு குறித்து எனது பெற்றோர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் எனது பெற்றோரை சமூக சேவை செய்யும் இடத்திற்கு அழைத்துச்சென்றேன். அத் தருணத்தில் சாலையோரத்தில் இருக்கும் பெரியவர்கள் எனது தாயின் பாதத்தை தொட்டு வணங்கி, இன்று நாங்கள் மூன்று வேளை உணவை உட்கொள்கின்றோம் என்றால் அது உங்கள் மகன் கிருஷ்ணனினால் மட்டுமே என்று கூறியதை கேட்டு என் தாய் வீட்டிற்கு வந்து கடுமையாக அழுதார்.

'கிருஷ்ணன் - இவர்கள் அனைவருக்கும் நீ உணவுகொடு. நான் உயிருடன் இருக்கும்வரை உனக்கு உணவழிக்கின்றேன்' என்று எனது தாய் அன்று தட்டிக்கொடுத்தார். அந்த வார்த்தை எனக்கு ஊக்கத்தை தந்தது.

இதுவே சவால்கள். எனது குடும்பத்தில் எனது தாய் தந்தையை சமாளிக்க வேண்டியிருந்தது. நான் என்ன செய்கின்றேன் என்பதை உணர்த்த வேண்டியிருந்தது. அவர்களுடைய ஆதரவுடன் இதனை ஆரம்பிப்பது மிகப்பெரிய சவாலாக காணப்பட்டது. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையில் நடக்கும் கேலிக்கூத்துக்களையும் அவலங்களையும் மீறி இதனை செய்து கொண்டு செல்லவேண்டியுள்ளது.

மூன்றாவதாக பணம். வேலையை இராஜினாமா செய்தாகிவிட்டது. கையில் இருக்கும் பணம் முடியும் வரை இவர்களுக்கு உணவளிக்க முடியும். அது தீர்ந்துவிட்டால்? நாம் என்ன செய்யப்போகிறோம்? அடுத்த வேளை உணவை அவர்களுக்கு வழங்குவதற்கு எங்கிருந்து பணத்தை திரட்டப்போகிறோம்?, யார் நன்கொடை வழங்கப் போகிறார்கள்?, நிதியுதவி வழங்கப்போகிறார்கள்? யார் என்னுடன் இணைந்து இந்த சமூக பணிக்கு ஒத்துழைப்பு வழங்கப்போகின்றார்கள்? என்ற ஒரு கேள்வி இருந்தது.

ஏனென்றால் நான் இழுப்பது ஒரு தேர். தேரை ஒருவரால் மட்டும் இழுத்துவிட முடியாது. பத்துபேர் சேர்ந்து தேர் இழுத்தால் அது நகரும். இதை செய்வதற்கு யார் என்னுடன் ஒத்துழைக்கப்போகின்றார்கள் என்பது ஒரு சவலாகவே இருந்தது.

கேள்வி:- இத்தகைய சவால்களால் மனமுடைந்து இந்த பணியை நிறுத்திவிட வேண்டுமென்று என்றாவது எண்ணியதுண்டா?

பதில்:- எனது வேலையை இராஜினாமா செய்த அன்றிலிருந்து இன்றுவரை ஒரு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் வாழ்க்கையை தொலைத்துவிட்டு இதற்குள்ளே வந்திருக்கிறோமே, நமக்கென்ன ஆகும், என்னால் இந்த அமைப்பை நீண்ட காலம் எடுத்துச் செல்ல முடியுமா? போன்ற கேள்விகளும் சந்தேகங்களும் ஒருநாள் ஒரு கணம் கூட வந்ததில்லை. ஏனென்றால் ஆழமாக ஆணித்தரமாக சுயநினைவுடன் நான் எடுத்த முடிவு அது.


கேள்வி:- சமூக பணியை மறந்துவிட்டு நவீன தொழில்நுட்பத்தின் பின்னாலும், நவீன வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்வதற்கு மட்டுமே விருப்பப்படும் இன்றைய சூழலில் உங்களால் மட்டும் எவ்வாறு சமூகப் பணியை முன்னெடுக்க முடிந்தது?


பதில்:- என்னைப்பொறுத்தவரை இந்த உலகில் இருக்கும் அனைத்து மக்களும் நல்லவர்களே. நான் இந்த சமூகப் பணியை செய்துகொண்டு இருக்கின்றேன் என்பதாலும் நான் இந்த பணியின் மூலமாக நினைக்கும் விடயங்களை சாதித்துக்கொண்டிருக்கின்றேன் என்பதாலும் உலக அரங்கில் இந்த சமூக பணிக்காக விருதுகொடுத்து விட்டார்கள் என்பதாலும் மற்றவர்கள் இந்த பணியை செய்யவில்லை என்று கூறமாட்டேன். அவரவர்கள் அவரவர்களால் முடிந்த வரை இந்த சமூகத்திற்கு உதவி செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு எங்கள் அறக்கட்டளையை எடுத்துக்கொண்டால் எல்லோராலும் வேலையை தொலைத்துவிட்டு இந்த பணியை தொடர முடியாது. ஆனால் அவர்கள் அவர்களால் முடிந்தவரை பொருளாதார உதவியும் நிதியுதவியும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

நவீனமயமாக்கப்பட்ட இன்றைய உலகம் இளைஞர்களை ஊக்குவித்து தூண்டுவிக்கின்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த வெளிச்சங்களை விட இன்று இருக்கும் வெளிச்சங்கள் அதிகம். இளைஞர்களை பொதுவாக குறைகூறிவிட முடியாது.
இன்று அதிகமான வெளிச்சங்கள் உள்ளன.

ஓர் இளைஞன் வாழ்வில் சமுதாயத்தின் மீது பற்றுதலுடனும் ஈடுபாடுடனும் இருந்தாலும் அவனது பெற்றோர்கள், அவனை சுற்றியிருக்கும் உற்றார், உறவினர்கள் அவரை அந்த பற்றுதலுடன் இருக்க விடுவதில்லை.

வேலைக்கு செல்ல வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும், ஓர் இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், கிரடிட் காட், டெபிட் காட் வைத்திருக்க வேண்டும், கையில் தொலைபேசி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பெண்ணே கொடுப்பார்கள் என்று கூறி கூறியே ஓர் இளைஞனை இந்த சமூகம் சமூக பற்றுதலுக்கு அப்பாலுள்ள சூழலுக்குள் தள்ளிவிடுகின்றது.

ஒரு மனிதனை பிரச்சினைக்குள் சிக்க வைத்து விட்டு நீ அதிலிருந்து வெளியே வா, வெளியே வா என்று கூறுவது ஒரு குற்றச்சாட்டு. அனைவருக்கும் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் உள்ளது. ஆனால், சமுதாயமும் சொந்த பந்தங்களும் அவர்களை செய்யவிடுவதில்லை என்பதே என்னுடைய கருத்து.

கேள்வி:- பிரல்பயமாகிக்கொள்வதற்காக அறக்கட்டளைகளை உருவாக்கும் ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. இது குறித்த உங்களது கருத்து என்ன?

பதில்:- கண்டிப்பாக இது உண்மைதான். உழைப்பால் வரும் பணத்தை நன்கொடையாக வழங்கும் போது வழங்கப்பட்ட நோக்கத்திற்கு ஏற்ப அந்த பணம் போய் சேர்கின்றதா என்பதே மக்கள் மத்தியில் இன்றுள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.
முன்னோடியான அறக்கட்டளைகளை நடத்திக்கொண்டிருந்தவர்கள் நிலைதடுமாறி போனது இதற்கு காரணமென்று கூறலாம். யாருமே பெயருக்காகவும் புகழுக்காகவும் ஓர் அறக்கட்டளையை ஆரம்பித்து விட முடியாது. ஓர் அறக்கட்டளையை ஆரம்பிக்கும் போது இருந்த ஈடுபாடு பின்பு வரும் பெயராலும் புகழாலும் பணத்தாலும் திசைதிருப்பப்படுகின்றது. இதன்போது வேலைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். இங்கு ஒரு கட்டுப்பாட்டுத்தன்மை தகர்க்கப்படுகின்றது. ஒரு தலைவன் சரியாக இருந்தால் அந்த அறக்கட்டளையும் சரியாக இருக்கும்.


கேள்வி:- இவ்வாறான விடயங்களால் அறக்கட்டளைகள் குறித்து மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லாமல் போகின்றது. இதனை எவ்வாறு சரிசெய்யலாம்?


பதில்:- இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன செய்ய நினைக்கின்றோமோ செய்துக்கொண்டே இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்த சவால்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் யுக்தியை கையாளவேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பொறுமையாக இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு அறக்கட்டளை மீது அதிருப்தி ஏற்பட்டு கேள்விகள் கேட்கப்படுமிடத்து பொறுமையாக பதிலளிக்க வேண்டும். அதுதான் ஒரு திருப்தியை மக்களுக்கு கொடுக்கின்றது.

இரண்டாவது, கணக்குகளை வரவு செலவுகளை தணிக்கை செய்யவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தனிக்கை செய்ய வேண்டும். தனிக்கை செய்த கணக்கை பார்வைக்கு வைக்கவேண்டும். ஒருவர் ஆயிரம் ரூபா பணத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியிருந்தால் அதனை என்ன செய்தீர்களோ அதற்கான ஆதாரங்களை அவர் வந்து கேட்டால் காட்ட வேண்டும்.

இதேவேளை, அரசாங்கம் கூறுவதுபோல நிதியாண்டுக்குள் உங்கள் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். நிர்வாக செலவுகளை குறைக்க வேண்டும். நிர்வாகத்தில் 5 இலட்சம், 10 இலட்சம் நன்கொடைகள் கிடைக்கப்பெற்றால் விமானத்தில் பயணம் செய்வது, ஒரு காரை வாங்கிக்கொண்டு அதில் பயணம் செய்வது, அவற்றை எல்லாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நான் விமானம் மூலம்தான் இலங்கை வந்தேன். ஆனால், எனது அறக்கட்டளை விமானத்திற்கான பற்றுச்சீட்டை எனக்கு தரவில்லை. அனுசரணையாளர்கள் பெற்றுக்கொடுக்கின்றார்கள். நான் அதன்மூலம் இலங்கைக்கு வந்தேன்.


கேள்வி:- ஆங்காங்கே அறக்கட்டளைகள் இருக்கும் நம்பிக்கையில் நடுத்தெருவில் தள்ளப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இது எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது?


பதில்:- அறக்கட்டளைகள் இருப்பதினால் என் தாயை பார்த்துக்கொள்ள தேவையில்லை. முதியோர் இல்லத்தில் விட்டுவிடலாம், மாதம் 2000 கொடுத்தால் போதும் என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் உள்ளது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இவ்வாறு அறக்கட்டளைகள் இல்லாவிட்டாலும் பலர் நடுத்தெருவில்தான் விடப்படுகின்றார்கள். அறக்கட்டளைகள் இருக்கு என்பதால் இவர்கள் வீதிக்கு வரவில்லை. இவர்கள் வீதிக்கு வரும் சூழல் ஏற்படுவதனால் தான் அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கேள்வி:- எதிர்காலத்தில் பல்வேறு நாடுகளில் இவ்வாறான அறக்கட்டளைகளை உருவாக்கும் எண்ணம் உண்டா?

பதில்:- மதுரை மாவட்டத்தில் 'அக்ஷயா' அறக்கட்டளை செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதை வெளியூருக்கும் எடுத்துச் செல்வேன், மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச்செல்வேன், இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வேன், இந்தியா முழுவதும், உலகம் முழுதும் கிளைகள் இருக்கும் என்று கூறுவதற்கு இது ஹோட்டல் அல்ல.

மனதளவில் செய்யக்கூடிய நற்செயல். நான் உங்களிடம் மற்ற மாநிலங்களுக்கும் இதை எடுத்துச் செல்வேன், ஐரோப்பாவிலும் கிளை இருக்கும், அமெரிக்காவிலும் கிளையிருக்கும் என்று கூறினால் அது அரசியல் பேச்சு. கண்டிப்பாக சேவையின் தரம் என்று எடுத்துக்கொண்டால் பல இடங்களில் கிளைகளை திறந்து செயற்படுவதற்கு இது வியாபாரம் அல்ல. இது சமூக சேவை.

இந்த கேள்வியானது, ஒரு பெற்றோரை பார்த்து 'உங்களது குழந்தைகளை அருமையாக வைத்துக்கொண்டுள்ளீர்களே.
அக்குழந்தைக்கு நல்ல புத்தியை சொல்லிக்கொடுத்து அறிவுபூர்வமாக வளர்த்து உள்ளீர்களே, எல்லா நாடுகளிலும் உள்ள குழந்தைகளை இவ்வாறு வளர்க்க முடியுமா?' என்று கேட்பதை போன்று உள்ளது.

எனவே அக்ஷயாவில் உள்ள 450 பேரையும் என்னில் ஒருவராக எப்போதும் என்னுடன் இருப்பவர்களாக பார்க்கிறேன். தரம் என்பது மிகவும் அவசியம். பத்து இடங்களில் இவ்வாறான நிலையங்களை நிறுவும் போது தரத்தை கொடுக்க முடியுமா? என்பது எனக்குள் இருக்கும் அச்சமும் கேள்வியும்.


கேள்வி:- தற்போதைய இளம் சந்ததிக்கு நீங்கள் விடுக்கும் செய்தி..?

பதில்:- பணத்தால் மட்டும் அனுபவத்தை கொண்டுவர முடியாது. இளையோர் தமது பெற்றோரை மதிக்க வேண்டும். பெற்றோரினது அர்ப்பணிப்பிலும் தியாகத்திலும்தான் நாம் இன்று இந்த நிலையை எட்டியுள்ளோம் என்பதை உணரவேண்;டும். உழைக்கும் ஊதியம் நூறு ரூபாவாக இருந்தாலும் அதில் ஐந்து ரூபாயானாலும் நல்ல அறக்கட்டளைகளை தேர்ந்தெடுத்து நன்கொடை வழங்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள்.

நேர்காணல்: க.கோகிலவாணி
படங்கள்: பிரதீப் டில்ருக்ஷன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .