2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

அமைச்சர் டக்ளஸிடம் பொன்னாடை பெற்றமை; மன்னிப்பு கோருகிறார் உன்னிகிருஷ்ணன்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பொன்னாடை பெற்றுக்கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்' என்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன்.

இது தொடர்பில் இன்று தமிழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்து தெரிவித்துள்ள உன்னிகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது,

'நான் சுமார் 20, 25 ஆண்டுகளாக இசைத்துறையில் இருக்கிறேன். நான் பல்வேறு ஊர்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசைக் கச்சேரிகள் செய்து வருகிறேன். மேடையிலும் பாடி வருகிறேன்.

நான் முதலில் அவுஸ்திரேலியா செல்கிற வாய்ப்பையும் லண்டன் செல்கிற வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள். அதனால் அவர்கள் மீது எனக்கு தனி அன்பு உண்டு.

அப்படி ஒரு ஒரு அன்பான அழைப்பில்தான் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அங்குள்ளவர்களின் விருப்பத்திற்கிணங்க 'ஸ்வானுபவ' அமைப்பு இந்தக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தது. இதன் அமைப்பாளர் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.

யாழ்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவினை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல அங்குள்ள ராமநாதன் இசைக் கல்லூரியிலும் ஒரு சந்திப்பு, அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு விரிவுரை ஆற்றவும் திட்டம், என்று கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் யாழ்ப்பாணம் சென்றேன்.

கச்சேரி அழகாக நடைபெற்றது. ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்கு வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனக்குப் பொன்னாடை போர்த்தினார்.

இது தமிழ் மக்களின் மனதின் வெகுவாக வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த சம்பவம் நான் முற்றிலும் எதிபாராத ஒன்றாகும். அவர் கலந்து கொள்வார் என்பது எனக்குத் தெரியாது.

இந்த சம்பவம் எதிர்பாராததுதான் என்றாலும் இதற்காக நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். என் இசைப் பயணத்தில் இதை ஒரு கரும்புள்ளியாக் கருதுகிறேன்.

எதுவும் பிரச்சினை இருக்காது என்று இந்திய காலாசார மத்திய நிலையம் உறுதியளித்தது. அந்த நம்பிக்கையில்தான் அங்கு சென்றேன். இருந்தாலும் இப்படி நடந்துவிட்டது.

இனி இது போல ஒன்று நிச்சயமாக நடக்காது என்று உறுதியளிக்கிறேன். எப்போதும் போல் உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் உங்களில் ஒருவனாக என்னை ஏற்று ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உலகெங்கும் நான் இலங்கைத் தமிழர்களின் மேடைகளில் பாடும் போது, 'அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை...', 'எங்கள் தேசத்தில் இடி விழுந்தது...', 'பூக்கள் வாசம் வீசும் காற்றில்..' போன்ற பாடல்களைப் பாடும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கும்.

இலங்கைத் தமிழர்களின் விடுதலை சார்ந்த அவர்களின் கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்துகிற பல பாடல்களை பாடும்போது, கேட்கிற மக்களும் உள்ளம் மல்க இலங்கையின் கோர வடுக்களை தாங்கி நிற்பதை நான் நேரில் பல முறை பார்த்திருக்கிறேன். நெகிழ்ந்திருக்கிறேன்.

அந்த வகையில்தான் இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் சென்றேன். யாழ்ப்பாண மக்களின் துயரங்களில் கலந்து கொள்ளலாம் என்று எண்ணியே யாழ்ப்பாணம் சென்றேன். எதிர்பாராது நடந்த இந்த தவறுக்காக மீண்டும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார். (தற்ஸ்தமிழ்)

You May Also Like

  Comments - 0

  • uvais.m.s Tuesday, 11 September 2012 03:14 PM

    சரியான மனிதனாக இருந்தால் பொன்னாடை போத்தியவுடனே இதை சொல்லி இருக்க வேண்டும்.

    Reply : 0       0

    ss Sunday, 16 September 2012 09:18 AM

    தமிழர்கள் இவ்வளவு கல் நெஞ்சு கொண்டவர்களாகவா மாறி விட்டோம்....!

    Reply : 0       0

    jenosha Tuesday, 02 October 2012 05:01 AM

    உன்னிகிருஷ்ணன் உண்மையான தமிழன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .