2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

மன்மோகனை பிரதமராக்குமாறு சோனியா கூறியதால் வியப்படைந்தேன்: கலாம்

Super User   / 2012 ஜூன் 30 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோனியா தான் பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பி என்னிடம் கோரிக்கை வைத்திருந்தால், நான் அவரை பிரதமர் பதவி ஏற்குமாறு அழைத்திருப்பேன் என்று தான் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

'டர்னிங் பொயிண்ட்ஸ்' என்ற அந்தப் புத்தகத்தில், முரண்பட்ட முடிவுகள் என்ற வகையில், தான் எடுத்த சில முடிவுகளைப் பட்டியலிட்டு அது எந்தக் கட்டத்தில் எடுக்கப்பட்டது, அதன் பின்னணி என்ன என்பது குறித்தெல்லாம் எழுதியுள்ளார்.

அந்தப் புத்தகத்தில்தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.:

"2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி வெற்றி பெற்று, அதன் கூட்டணித் தலைவராகவும் நாடாளுமன்றத் தலைவராகவும் சோனியாவை ஒருமனதாகத் தேர்வு செய்தன. அதன் பின்னர் சோனியாவே பிரதமர் ஆவார் என்று நாட்டிலும் உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவின.

ஆனால், வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் இந்திய நாட்டின் பிரதமர் பதவி ஏற்பதை பலரும் விரும்பவில்லை. அரசியல் ரீதியாக பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தனர். வெளிநாட்டுக்காரர் ஒருவர் இந்திய குடியரசுத் தலைவராக பதவி ஏற்க சட்டத்தில் இடமில்லை என்று கூறி சில சட்ட நுணுக்கங்களையும் சிலர் எடுத்துரைத்தனர்.

இந்நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னைச் சந்தித்தனர். பல அமைப்புகளின் தலைவர்கள் என்னைச் சந்தித்து சோனியாவுக்கு இத்தாலி பூர்வீகம் என்பதால், அவரை பிரதமர் ஆக்க ஒப்புக் கொள்ளாதீர்கள் என்று வற்புறுத்தினர்.

ஆனால், நான் சட்ட ரீதியாக நுணுக்கங்களை ஆராய்ந்து, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைகள் பெற்று, ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். அதன்படி, சோனியாவை பிரதமர் பதவிக்கு வரவேற்று கடிதம் தயாரிக்கப்பட்டது.

ஆனால், திடீரென சோனியா, மன்மோகன் சிங்குடன் என்னை வந்து சந்தித்தார். மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்குமாறு என்னிடம் கோரினார். இது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. பின்னர் அவருக்காக அந்தக் கடிதம் மாற்றப்பட்டு, மன்மோகன் சிங்கை பிரதமர் பதவிக்கு ஏற்று அவருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. சோனியாவின் முடிவால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டது.

சோனியாவை பிரதமர் ஆக்கக் கூடாது என்று எனக்கு நேரிலும் இ-மெயில் மூலமும் அதிகம்பேர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் இந்தக் கோரிக்கை சட்டத்துக்கு உட்பட்டதல்ல என்பது எனக்குத் தெரியும். ஆகவே சோனியாவை பிரதமர் பதவியில் அமர்த்த நான் தயாராகவே   இருந்தேன். அவர் தானே பிரதமராக தங்கள் கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறி என்னிடம் கோரிக்கை வைத்திருப்பாரேயானால், அவரை பிரதமராக வரவேற்க நான் தயாராகவே இருந்தேன். அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி இருப்பேன்" என அப்துல் கலாம் அந்தப் புத்தகத்தில்கூறியுள்ளார் .

இந்தத் தகவல் வெளியானதை அடுத்து பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இந்தப்  புத்தகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் முக்தர் அப்பாஸ் நக்வி, அவர் முழு சுதந்திரத்துடன் யாருக்கும் பதிலளிக்க வேண்டிய நிலையில் இல்லாமல் இருந்துள்ளது தெளிவாகியுள்ளது என்று கூறியுள்ளார். காங்கிரஸின் சதுர்வேதியோ, பாஜகதான் சோனியா பிரதமர் ஆகாமல் தடுத்துள்ளது இதன் மூலம் தெளிவாகிறது என்று கூறியுள்ளார். 

சங்மா கடும் எதிர்ப்பு:

இந்தப்  புத்தகத்தின் இன்னொரு பக்கத்தில், வெளிநாட்டுக்காரர் பிரதமராகக் கூடாது என்பதில் பி.ஏ.சங்மா தீவிரமாக இருந்தார். அவர் இது குறித்து என்னிடம் வலியுறுத்தினார் என்று கலாம் கூறியுள்ளார்.

ராஜினாமா முடிவு எடுத்தேன்:

2005ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியபோது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யலாமா என்று நினைத்தேன். இது தொடர்பாக ராஜினாமா கடிதமும் எழுதி வைத்தேன். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் என்னை சமாதானப்படுத்தி அரசு கவிழும் சூழ்நிலை ஏற்படும் எனக் கூறி தடுத்தார். இதை அடுத்து ராஜினாமா முடிவைக் கைவிட்டேன் என்று அப்துல்கலாம் அந்த நூலில் எழுதியுள்ளார்.

அப்துல் கலாமின் இந்தப் புத்தகம் இனிமேல்தான் விற்பனைக்கு வரவுள்ளது. அதன் பின்னர் எத்தகைய அரசியல் வாக்குவாதங்களை ஏற்படுத்தப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் தில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (-தினமணி)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X