2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

மிகப்பெரிய நட்சத்திரமாக விரும்புகிறேன்: உசைன் போல்ட்

A.P.Mathan   / 2012 ஜூன் 03 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகப்பெரிய நட்சத்திரமாக, விளையாட்டின் மிகச்சிறந்த வீரராக மாற விரும்புவதாக ஜமைக்காவின் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். உலக சாதனைக் குறுந்தூர ஓட்ட வீரரான உசைன் போல்ட், ஒலிம்பிக் தொடர்பான தனது இலக்குகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

100 மீற்றர் குறுந்தூர ஓட்டத்தில் 9.58 செக்கன்களிலும், 200 மீற்றர் ஓட்டத்தில் 19.19 செக்கன்களிலும் ஓடி உலக சாதனையைத் தன்வசம் கொண்டுள்ள உசைன் போல்ட், 25 வயதாகும் நிலையில் தன்னுடைய நாளாந்த நடவடிக்கைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

வயது அதிகரிக்கும் போது முன்பிருந்தளவு சக்தி காணப்படாது என்பது உண்மையானது என்றும், முன்பைப் போல் இரவு முழுவதும் விழித்திருந்து விட்டு இப்போது போட்டிகளில் ஈடுபட முடியாது எனத் தெரிவித்த உசைன் போல்ட், இப்போதெல்லாம் அதிகமான ஓய்வு தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

மிகவும் இயல்பாக இருக்கக்கூடிய, எந்த விடயத்தையும் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடிய இயல்பிற்காக பெரிதும் அறியப்பட்ட உசைன் போல், இம்முறை ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வது குறித்து மிகவும் உறுதியான கருத்தைத் தெரிவித்தார்.

கடந்த தடவை 3 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற உசைன் போல்ட், இவ்வருடமும் அவற்றை வெல்வது குறித்து உறுதியாகக் காணப்படுவதாகவும், தான் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக, வரலாற்றில் பெயருள்ள ஒருவராக விரும்புவதாகவும், இவ்வாண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் அதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தரும் என நம்புவதாகவும், அதற்காக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பகல் வேளைகளில் நித்திரை செய்வதைத் தான் தவிர்ப்பதாகவும், அவ்வாறு பகலில் நித்திரை செய்தால் இரவில் சரியான நித்திரை செய்ய முடியாது எனத் தெரிவித்த உசைன் போல்ட், இரவில் சரியாக நித்திரை செய்யாது விடில் போட்டிகளில் முழுமையான அர்ப்பணிப்புடன் பங்குபற்றமுடியாது எனவும் தெரிவித்தார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X