2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

களியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு; கிரிக்கெட் வீரர்கள் கைது

A.P.Mathan   / 2012 மே 21 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பாயில் இடம்பெற்ற களியாட்ட ஒன்றுகூடலைக் கலைத்த மும்பைக் காவல்துறையினர், அந்தக் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கானோரைக் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஐ.பி.எல். போட்டிகளில் பூனே வொரியர்ஸ் அணி சார்பாக பங்குபற்றிய ராகுல் சர்மா மற்றும் வெய்ன் பார்னெல் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த களியாட்ட நிகழ்வில் போதைப் பொருட்கள் பரிமாறப்பட்டன என்ற காரணத்திற்காக கைதுசெய்யப்பட்ட நூற்றுக் கணக்கானோரில் 38 பெண்களும் அடங்குகின்றனர். அத்தோடு அந்தக் களியாட்ட நிகழ்வில் பங்குபற்றியவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டவர்கள் எனவும், ஏனையோர் உள்ளூர் பிரபலங்களின் பிள்ளைகளாகவும், இந்திய சினிமாத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த களியாட்ட நிகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து 108 கிராம் கொக்கைன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் காவல்துறையினர், கைதுசெய்யப்பட்ட அனைவரையும் இரத்த மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகளில் ஈடுபடுத்தியுள்ளனர். குறித்த பரிசோதனைகளின் முடிவுகளுக்காக காவல்துறையினர் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த களியாட்ட நிகழ்வில் தான் பங்குபற்றியிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ராகுல் சர்மா, அதே ஹொட்டலில் இடம்பெற்ற இன்னுமொரு பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காகவே தான் அங்கு சென்றிருந்ததாகத் தெரிவித்துள்ளார். அந்தப் பிறந்தநாள் நிகழ்வுக்குத் தான் சென்றிருந்த போதிலும், அங்கு யாரும் வந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராகுல் சர்மாவின் தாயும் தனது மகன் மேல் எந்தப் பிழையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஐ.பி.எல். போட்டிகள் மிகுந்த போட்டித்தன்மையுடன் இடம்பெற்ற போதிலும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே வன்கெடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மதுபோதையில் தர்க்கத்தில் ஈடுபட்டார் என அவருக்கு அம்மைதானத்தில் 5 வருடகாலத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் லூக் பொமர்பக் பெண்ணொருவரை பாலியல் ரீதியாக தொல்லை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X