2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சல்மான் பட் சிறையில் தனிமையில் வாடுகிறார்: ஆசிப்

A.P.Mathan   / 2012 மே 08 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறையிலடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட் அங்கு தனிமையில் வாடுவதாகவும், அவர் மன அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாகவும் அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆசிப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெற்ற ஸ்பொட் ஃபிக்சிங் சம்பவத்தில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டன் காரணமாக இங்கிலாந்தின் குற்றவியல் சட்டத்தின்படி பாகிஸ்தானின் மூன்று வீரர்களான சல்மான் பட், மொஹமட் ஆசிப் மற்றும் மொஹமட் ஆமிர் ஆகியோருக்கும், பாகிஸ்தானிய வீரர்கள் பலரின் முகவராகச் செயற்பட்ட மஷார் மஜீத் என்பவருக்கும் இங்கிலாந்து நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது.

இதில் சல்மான் பட் இற்கு 30 மாதங்களும், மொஹமட் ஆசிப் இற்கு 12 மாதங்களும், மொஹமட் ஆமிருக்கு 6 மாதங்களும், மஷார் மஜூத் இற்கு 32 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மொஹமட் ஆமிர் ஏற்கனவே 3 மாத சிறைத்தண்டனைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், 6 மாதகாலத்தை சிறையில் கழித்த பின்னர் மொஹமட் ஆசிப் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சல்மான் பட்டும், தானும் சிறையில் ஒரே அறையை 3 மாதங்களுக்குப் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவித்த மொஹமட் ஆசிப், தனது விடுதலை நாளன்று தனக்கான வாழ்த்துக்களை சல்மான் பட் தெரிவித்ததாகவும் தெரிவித்தார். அத்தோடு 30 மாதங்களின் முடிவில் (இங்கிலாந்து விதிகளின் படி சல்மான் பட் 15 மாதங்களில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது) தான் எப்போது விடுதலையாவேன் என சல்மான் பட் ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

எனினும் தான் விடுதலையாகும் நாளில் சல்மான் பட் மிகுந்த தனிமையை உணர்ந்து கொண்டிருந்ததாகவும், மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாகியிருந்ததாகவும் தெரிவித்த மொஹமட் ஆசிப், தனது விடுதலையை அவர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் தானும், சல்மான பட்டும் ஒரே அறையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்களா எனக் கேட்கப்பட்டதாகவும், இருவரும் உடனடியாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்த மொஹமட் ஆசிப், முஸ்லிமல்லாத ஒருவரோடு சிறையில் ஒரே அறையைப் பகிர்வது கடினமானது என்பதாலேயே ஒரே அறையைப் பகிர்ந்துகொள்ள உடனடியாகவே இருவரும் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிவித்தார்.

அத்தோடு சல்மான் பட் மற்றும் மொஹமட் ஆசிப் இருவரிடையேயும் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன என்ற கருத்தையும் அவர் மறுத்தார்.

இங்கிலாந்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் போது விசாரணைகளில் சல்மான் பட் மொஹமட் ஆசிப் ஐயும், மொஹமட் ஆசிப் சல்மான் பட்டையும் மாறி மாறிக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

எனினும் சிறையில் இருவரிடையேயும் எந்தவித முரண்பாடுகள் காணப்படவில்லை எனத் தெரிவித்த அவர், சிறை மூலம் இருவரிடையிலான அன்பு அதிகரித்தது எனவும், இருவரும் சகோதரர்கள் போல் காணப்பட்டோம் எனவும் தெரிவித்தார்.

சிறையிலிருந்து தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் கதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிவித்த அவர், சல்மான் பட்டின் மனைவி, அவரது முதற் குழந்தை மற்றும் அவரது தாய் ஆகியோர் மாதத்திற்கொருமுறை சிறைக்கு வந்து அவர்களைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார். அத்தோடு அவரது இளைய மகனுக்கான வீசா தொடர்ந்தும் மறுக்கப்பட்டதன் காரணமாக அவர் இங்கிலாந்திற்கு வருகை தர முடியவில்லை எனவும் தெரிவித்தார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X