2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

பாராட்டு விழாவில் ராகுல் ட்ராவிட்டுக்கு பாராட்டு மழை

A.P.Mathan   / 2012 மார்ச் 28 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான ராகுல் ட்ராவிட்டிற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று நடாத்திய பாராட்டு விழாவில் இந்நாள், முன்னாள் வீரர்கள் அனைவருக்கும் ட்ராவிட்டிற்கு பாராட்டு மழை பொழிந்தனர்.

இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர்களான சுனில் கவாஸ்கர், அஜித் வடேகர், பிஷன் பேடி, மொஹிந்தர் அமர்நாத், டுலிப் வெங்சாக்கர், அனில் கும்ப்ளே, சௌரவ் கங்குலி ஆகியோர் கலந்துகொண்டதோடு, தென்னாபிரிக்காவில் மார்ச் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள டுவென்டி டுவென்டி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி முழுமையாகவும், ஏனைய சில முக்கிய இந்திய வீரர்களும், இந்தியக் கிரிக்கெட் சபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி, தடைகளைத் தகர்த்தெறிந்து செல்லக்கூடிய ஒருவராக ராகுல் ட்ராவிட் விளங்கினார் எனத் தெரிவித்தார். அணிக்குத் தேவைப்படும் எந்தவொன்றையும் செய்யக்கூடிய ஒருவராக ராகுல் ட்ராவிட் விளங்கியதாகத் தெரிவித்த டோணி, ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகக் களமிறங்குதல், விக்கெட் காப்பாளராகச் செயற்படல், ஸ்லிப்பில் களத்தடுப்பில் ஈடுபடல் உட்பட அணிக்குத் தேவையான எதை அவரிடம் கேட்ட போதிலும் அவரது பதில் "ஆம்" என்பதாகவே இருந்ததாகத் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் செரளவ் கங்குலி கருத்துத் தெரிவிக்கும் போது தனது அணித்தலைமை சிறப்பாக அமைந்தமைக்கு ராகுல் ட்ராவிட்டும், இந்திய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜோன் ரைட்டுமே காரணம் எனத் தெரிவித்தார். ராகுல் ட்ராவிட்டை தனது பிரதி அணித்தலைவராகக் கொண்டிருந்தது தனக்கு மிகுந்த உதவியாக அமைந்ததாகவும் கங்குலி தெரிவித்தார்.

முன்னாள் அணித்தலைவர் அனில் கும்ப்ளே கருத்துத் தெரிவிக்கையில் செய்யும் கடமைகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவது ராகுல் ட்ராவிட்டின் மிகப்பெரிய பலமாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

இந்திய அணியின் டெஸ்ட் அணியின் துடுப்பாட்ட வீரர் விவிஎஸ் லக்ஸ்மன் கருத்துத் தெரிவிக்கையில், ஏராளமான சாதனைகளின் மத்தியிலும் இன்னமும் அமைதியான ஒருவராக, பெருமைகள் எதுவுமில்லாத ஒருவராக இருப்பது ராகுல் ட்ராவிட்டின் தனித்தன்மை எனத் தெரிவித்தார்.

ராகுல் ட்ராவிட் தனது பேச்சின் போது தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி செலுத்தியதோடு, வீரர்களின் சிறப்பான திறமை வெளிப்பாடுகளும், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் சரியான முகாமையும் காரணமாக உலகக் கிரிக்கெட்டில் இந்தியா ஓர் ஆதிக்கம் செலுத்தும் கருவியாக மாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு எதிர்கால இந்தியக் கிரிக்கெட் சரியான கைகளில் இருப்பதாகவும், இளைஞர்கள் சிறப்பாக இந்தியக் கிரிக்கெட்டை வளப்படுத்துவார்கள் எனவும் ராகுல் ட்ராவிட் தெரிவித்தார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0

  • muslim Wednesday, 28 March 2012 10:17 PM

    வாழ்த்துகள் இந்தியே அணியின் suvaritku

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X