2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

அஷாருதினுக்கு 15 இலட்சம் ரூபா அபாராதம்

A.P.Mathan   / 2012 மார்ச் 07 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் இந்திய அணித்தலைவரும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் அஷாருதினுக்கு டெல்லி நீதிமன்றம் 15 இலட்சம் இந்திய ரூபா அபராதமாக விதித்துள்ளது.

அஷாருதினின் காசோலை செல்லுபடியாகாதது சம்பந்தமான வழக்கிற்கு சமூகமளிக்காது நீதிமன்றத்திற்கு உரிய மரியாதை வழங்காத காரணத்தாலும், நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்கு எதிராகவுமே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்துக்குச் சமூகம் தராத அஷாருதின் அதன் பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியேயான கொடுப்பனவு ஒன்றிற்கு தயாராக இருப்பதாக அறிவித்த போதிலும், அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி அவருக்கு தண்டப்பணம் விதித்தார். கொடுப்பனவை மேற்கொள்ள விரும்பியிருப்பின் ஆரம்பத்திலேயே செலுத்தியிருக்கலாம் எனத் தெரிவித் நீதிபதி, அவரது கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

அத்தோடு நீதிமன்ற அழைப்பாணைக்கு மரியாதை தராது குறித்த நாளில் வருகை தராததற்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதி, நீதிமன்றத்தை அவமதித்த காரணத்திற்காகவும், நீதிமன்ற நேரத்தை வீணாக்கியமைக்காகவும் அபராதம் விதிப்பதாக தெரிவித்தார். அத்தோடு கொடுக்கல் வாங்கல்களின் போது அஷாருதினுக்கு உறுதி வழங்கி அவருக்கு சார்பாக கையெழுத்திட்டு, பின்னர் அஷாருதின் கொடுப்பனவை மேற்கொள்ள மறுத்தபோது கையெழுத்திட்டபடி அஷாருதின் வழங்கவேண்டிய பணத்தை கொடுக்க மறுத்த அவரது நண்பர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

அஷாருதினுக்கு எதிரான வழக்கை டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொடுத்திருந்தார். மும்பையில் அஷாருதினுக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமாகவுள்ள ஒரு சொத்தை 4.5 கோடி இந்திய ரூபாவிற்கு விற்க அஷாருதின் முன்வந்ததாகவும், குறித்த தொழிலதிபர் ஆரம்பக் கொடுப்பனவாக 1.5 கோடி இந்திய ரூபா அஷாருதினிற்கு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிறிது காலத்தின் பின் குறித்த சொத்தை விற்க மறுத்த அஷாருதின் முற்பணத்தை திரும்ப வழங்குவதாக உறுதி வழங்கியிருந்தார். அந்த முற்பணத்திற்காக வழங்கப்பட்ட காசோலையே வங்கியில் பணமில்லாத நிலையில் மீளத் திரும்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X