2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வளமான வாழ்வுக்கு PERMA டெக்னிக்

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ட்டின் செலிக்மேன் என்பவர், அமெரிக்காவின் பிரபல உளவியலாளராவார். எண்ணற்ற சுய முன்னேற்றப் புத்தகங்களை எழுதியவர். Learned helplessness பற்றிய அவரது கோட்பாடு, அறிவியல் மற்றும் மருத்துவ உளவியலாளர்களிடையே மிகவும் பிரபலமானது. செலிக்மேன் வகுத்துள்ள PERMA மொடல் கோட்பாடு எனப்படும், வளமான வாழ்க்கைக்கான 5 கட்டளைகள், நேர்மறை உளவியலில் மிகவும் பிரபலமடைந்துள்ளன.

நேர்மறை உணர்ச்சிகள், ஈடுபாடு, உறவுகள், பொருள் மற்றும் சாதனை என்ற ஐந்தும்தான், PERMA கட்டளைகள். இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

P - Positive Emotions

அன்பு, மகிழ்ச்சி, நன்றியுணர்வு, அமைதி, ஆர்வம், நம்பிக்கை, பெருமை, கேளிக்கை, உத்வேகம் மற்றும் பிரமிப்பு போன்ற இனிமையான உணர்வுகளை, Positive Emotions குறிக்கின்றன. நேர்மறையான உணர்ச்சிகள் நல்லவை என்பதோடு, பொருள் மதிப்பையும் கொண்டிருக்கின்றன.

நேர்மறையான உணர்ச்சிகள், ஒரே நேரத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் மாறுபட்ட சிக்கல்களைத் தீர்ப்பதை ஊக்குவித்தல் என இரண்டு விதமான பலன்களைத் தரக்கூடியவை. காலப்போக்கில், சமூக மற்றும் உளவியல் வளத்தை மேம்படுத்துவதன் மூலம், நம்முடைய செயற்பாட்டில் ஒரு நெகிழ்வுத் தன்மையையும் கொடுப்பவை.

E - for Engagement

ஒரு சவாலான வேலையை அனுபவித்தும் அக்கறையோடும் நீங்கள் செய்யும்போது, முழு ஈடுபாடும் அதில் இருக்கும். அந்த நிலையில் இருக்கும் நீங்கள், காலநேரம், இருக்கும் இடம் எல்லாவற்றையும் மறந்து அந்த வேலையோடு ஒன்றிவிடுவீர்கள். பொதுவாக இந்த நிலை, ஓவியம் வரைதல், இசை கேட்பது போன்ற நமக்குப் பிடித்த விடயங்களைச் செய்யும்போது வருவதுண்டு. இந்தப் பழக்கமே, நாளடைவில் அலுவலக வேலையைச் செய்யும் போதும் அதே ஈடுபாட்டைத் தூண்டச் செய்யும்.

R- for Relationships

நம்முடைய நல்வாழ்வுக்கு அத்திபாரமாக இருப்பவை, நேர்மறையான உறவுகள் என்பதிலும் அந்த உறவுகள் நம் ஒவ்வொருவருக்குமே தேவை என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும், வளமான உற்சாகமான உறவுகள் முக்கியம் என்பதை நீண்டகாலமாகவே ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அந்த உறவுககளை, வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது உங்கள் நட்பு வட்டத்திலோ கூட அமைத்துக்கொள்ளலாம். உறவுகள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் மட்டுமல்ல, உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கூட அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

M- for Meaning

‘நாம் நமக்காகச் செய்யாமல், பிறருக்காகச் சேவை செய்யும்போது, நம்முடைய பலம் பலமடங்காகி, நம்மால் முடிந்தவரை சிறப்பாகச் செயற்படுகிறோம்’ என்பது, செலிக்மனின் கோட்பாடு. சுயநலத்தைத் தாண்டி, குறிப்பிட்ட நோக்கம், நீண்டகால இலக்கு, ஒரு சமூகத் தொண்டு, ஒரு மதம் சார்ந்த தொண்டு, ஓர் அரசியல் கட்சி அல்லது வேறொருவரின் குடும்பம் என, இலக்கு இப்படிப் பொதுநலமாக இருக்குமானால், நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும்.

A - for Accomplishment

இறுதியாக, நாம் அனைவரும் நம் வாழ்வில் ஏதோ ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற உணர்வு தேவை. நிர்ணயித்த குறிக்கோளை அடையும்போது, வாழ்வு வளமானதாக இருக்கும். பொன், பொருள், புகழ் போன்றவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும், தனிப்பட்ட வளர்ச்சி, மற்றும் உறவுகளால் கிடைக்கும் மகிழ்ச்சி, வாழ்க்கையை வளமாக்குவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
சாதனைகளும் நல்வாழ்வும், ஒன்றோடொன்று தொடர்புடையவை. கல்வி, வேலை மற்றும் உறவுகளில் அடையும் வெற்றிகள் தற்காலிக மகிழ்ச்சியை மட்டும் தூண்டுவதில்லை. உயர்ந்த நல்வாழ்வுக்கும் அடிப்படையாக இருப்பவை.

- இந்துமதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X