.jpg)
-தம்பி
மனித இனத்தின் ஆதாரம் பசி. பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்பது நமது முதுமொழி. அந்தப் பத்துகளில் ருசியும் ஒன்று. அப்படி நாம் ருசித்து சாப்பிடுவதற்கு மூலகாரணமான நாக்கின் வரலாறு கூட இது வரைக்கும் எழுதப்படாத சரித்திரங்களில் ஒன்றாக தான் இருக்கின்றது. ஆமாம் நமது நாக்கு முதலில் எதை, எங்கே ருசித்தது என்ற கேள்விக்கு பதில் தேடுவது கொஞ்சம் கஷ்டம் தான். அதிலும் தமிழர்கள், எங்கள் பண்பாட்டு கலாசாரத்தில் நாம் உண்ணும் உணவுகளுக்கும் அதன் ரகங்களுக்கும் அளவே இல்லை. வகை வகையாக சமைத்து ருசிக்க பழகி கொண்டவர்கள் நாங்கள். அதனை வெறுமனே இல்லாமல் அறுசுவை என்ற வரையறுக்குட்படுத்திக் கொண்டு ஆரோக்கியமாகவும் வாழ பழகி கொண்டவர்கள்.
எனவே, ஒவ்வொரு மனிதனதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதி செய்வது அவனுடைய உணவு பழக்க வழக்கம் தான். அந்த வகையில் உலகம் முழுவதும் வாழும் மக்களின் போஷாக்கை அதிகரித்தல், வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், விவசாயம் மற்றும் உணவு பொருட் தயாரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பட்டினியை போக்குவதை நோக்காக கொண்டு 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி, கனடாவின் கியுபெக் நகரில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இவ்வமைப்பு நிறுவப்பட்ட தினத்தை நினைவு கூரும் விதமாகவே இன்றைய தினத்தை சர்வதேச உணவு தினமாக உலகம் கடைப்பிடிக்கின்றது.
நாம் தொண்டு தொட்டு காத்து வந்த எமது உணவு பழக்க வழக்கமும் இன்று மாற்றமடைந்திருக்கின்றது. ஆமாம் மேற்கத்தேய உணவு மோகத்தில் மூழ்கி போன நாம் அதில் என்ன இருக்கின்றது என தெரியாமலேயே அவற்றைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கின்றோம். சில நேரங்களில் அவ்வாறன உணவு பழக்க வழக்கங்களே நமது கௌரவத்தை தீர்மானிக்கின்ற அற்ப விடயங்களாகவும் மாறி விட்டிருக்கின்றது.
இதனால் Fast Food என்ற பெயரில் துரித கதியில் வாங்கி, துரித கதியில் சமைத்து, துரித கதியில் சாப்பிட்டு விட்டு, துரித கதியிலேயே வாழ்க்கையையும் முடித்துக் கொள்ளும் துர்பாக்கிய நிலைக்கே நாம் இன்று தள்ளப்பட்டிருக்கின்றோம். இதே நிலை தான் இன்று நமது வேளாண்மை முறைக்கும் நேர்ந்திருக்கின்றது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நமது சந்ததிகளின் எதிர்கால வாழ்க்கையை மென்மேலும் வலுவிலக்க செய்து கொண்டிருக்கின்றன.
இப்படியான உணவுப் பழக்க வழக்கங்களுக்கிடையில் எங்கே போய் போஷாக்கு உணவைப் பற்றிப் போதிப்பது. விழித்துக் கொள்ளுங்கள், ஒன்றுக்கு பத்து என்ற அடிப்படையில் லாபத்தை சம்பாதிக்கும் நோக்குடன் வெளிநாட்டு கம்பனிகள் எங்கள் விளை நிலங்களில் எங்கள் மூலமாகவே கண்டதையும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. நாமும் கால தாமதமின்றி அதிகமாக அறுவடை செய்து கொள்ளும் குறுகிய நோக்குடன் அந்த விதைகளையும் உரங்களையும் மருந்துகளையும் வாங்கி எங்கள் நிலத்தில் கொட்டிக் கொண்டே இருக்கின்றோம். அத்தகைய மோசமான உற்பத்திகளுக்கு எமது நிலம் பழகி போகுமானால் அது நாளைய நமது வாழ்க்கையில் படுமோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே விவசாய நடவடிக்கைகளுக்கு இயற்கையான முறைகளையே பின்பற்றுவோம். மரபு சார் ரீதியில் விதைகளை உற்பத்தி செய்வதுடன், அவ்விதைகளின் வீரியமான வளர்ச்சிக்கு இயற்கையான உரங்களையே பயன்படுத்துவோம்.
.jpg)
அவ்வாறான வேளாண்மை நடவடிக்கைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை நமது பாரம்பரிய பண்பாட்டம்சங்களுக்கு ஏற்ப சமைத்து உண்போம். அதன் மூலம் போஷாக்கும் ஆரோக்கியமுமிக்க அழகானதொரு சூழலை உருவாக்குவோம். இயந்திரமயமாகி விட்ட இந்த உலக வாழ்க்கையில் அது சாத்தியப்படுமா? என கேட்க வேண்டாம்.
காரணம், பசி கொண்ட போதெல்லாம் அதனை தீர்த்துக் கொள்வதற்காக மனிதன் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் பயனாக தான் இந்த உலகம் இன்றும் அற்புதமான பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றது. அத்தகைய பசிகளை எல்லாம் தீர்த்துக் கொள்வதற்கு மூலமாய் இருக்கும் வயிற்றுப் பசியை மாத்திரம் ஏன் நஞ்சை உண்டு தீர்த்துக்கொள்வானே?
.jpg)