2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அமர்ந்திருப்பதை குறைத்தால் ஆயுள் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள்

Kogilavani   / 2012 ஜூலை 13 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக நேரம் ஆசனத்தில் அமர்ந்திருந்து தொழில்புரிவதானது எமது ஆயுள்  குறைவடைவதற்கு காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வளர்ந்தவர்கள் ஒரு நாளில் அதிகபட்சமாக 3 மணித்தியாலங்கள் மாத்திரம் அமர்ந்திருந்தால் அவர்கள் மேலதிகமாக இரண்டு வருடங்கள் வாழ முடியும் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சி பார்ப்பதும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்துவதாக  ஆய்வாளர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி பார்ப்பதை தினமும் இரண்டு மணித்தியாலங்களாக மாத்திரம்  மட்டுப்படுத்துபவர்கள் ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் மேலதிகமாக வாழமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறையானது அதிக உடற் பருமன், உடற்திடமின்மை ஆகியவற்றுக்கு காரணம் என  நிபுணர்கள் நீண்டகாலமாக தெரிவித்து வந்துள்ளனர்.

இவ்விடயம் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் என்பவற்றுடனும் தொடர்புள்ளதாக கருதப்படுகிறது.

மேற்படி புதிய தகவல்கள் அதிகமான நேரத்தை தமது இருக்கையிலே செலவிடும் அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கு மிகுந்த கரிசனைக்குரியதாகும்.

தமது அலுவலக சகாக்களை சந்திப்பதற்கு லிப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளை  பயன்படுத்தும் சிறிய நடவடிக்கைகள்கூட இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு உதவுகின்றன என்பதற்கு ஆதாரம் உள்ளது.

ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக, தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ளும்போது எழுந்து நிற்குமாறு மருத்துவ நிபுணரான டாக்டர் டேம் சாலி டேவிஸ், கடந்த வருடம் ஊழியர்களை அறிவுறுத்தியிருந்தார்.

18-90 வயதுக்கு இடைப்பட்ட 167,000 நபர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் எத்தனை மணித்தியாலங்களை அமர்ந்திருப்பதிலும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் செலவிடுகின்றனர் என்பதும் எவ்வளவு காலம் வாழ்கின்றனர் என்பதும் ஒப்பிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

வளர்ந்தவர்கள் அதிகமான நேரம் அமர்ந்திருப்பது அமெரிக்காவில் 27 வீதமான மரணங்களுக்கு பகுதியளவில் காரணமாக உள்ளதென லூசியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேற்படி ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அதேபோன்று 19 வீதமான மரணங்களுக்கு  அளவுக்கதிமாக தொலைக்காட்சி பார்ப்பது பகுதிளவில் காரணம் என கண்டறியப்பட்டது.

அமர்ந்திருக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என பிரித்தானிய அதிகாரிகள் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளதாக பிரித்தானிய இதயநோயியல் துறை அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

'எமது இதயத்தை ஆரோக்கியமாக தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளூர் கடைகளுக்கு வாகனங்களில் செல்லாமல் நடந்து செல்லுதல், தொலைக்காட்சியை அதிகநேரம் பார்வையிடாமல் விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகள் உடலை சுறுசுறுப்புடன் இயக்குவதற்கான வழிமுறைகளாக காணப்படுகின்றன' என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும், தொடர்ந்து அமர்ந்திருப்பது ஆயுட்காலத்தை குறைக்கிறது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என வேறு நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

'கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் ஸ்பீகல்ஹால்டர் கருத்துத் தெரிக்கையில், இந்த ஆய்வு மக்கள் தொடர்பானது. சோபாவிலிருந்து எழுந்திருப்பதன் விளைவுகளை அது விளக்கவில்லை.

'எதிர்கால சந்ததியினரை பொருத்தவரை சற்று அதிகமாக நகர்ந்தால் அவர்கள் சராசரியானவர்களைவிட நீண்ட ஆயுளுடன் வாழலாம். ஆனால் இப்போது எம்மில் பெரும்பாலானோர் தினமும் 3 மணித்தியாலங்களுக்கு குறைவாகவே அமர்ந்திருக்கிறோம்'  என அவர் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .