கடற்கரையோர மணல் திட்டுக்கள் அகழ்வு
விடயத்தில், அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்டோர் உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென, தொடர்ச்சியாக வடமாகாண சபையின் தொடர்ச்சியாக உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,
உடுப்புக்குளம் பகுதியில், மணல் அகழப்படுவது தொடர்பாக, ஜனவரி 26ஆம் திகதியன்று நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அப்பகுதி மக்களின் நலன்கருதி, குறித்த மணல் அகழ்வுச் செயற்பாட்டை தடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டதென்றார்.
இதேவேளை, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் இந்த விடயத்தில் கரிசனை செலுத்தி, அங்கு மணல் அகழ்வதை நிறுத்தவேண்டுமென்று, அக்கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் வாதிட்டு, அங்கு மணல் அகழ்வுச் செயற்பாடுகள் மேற்கொள்ளக்கூடாதென்ற தீர்மானத்தை நிறைவேற்றினாரெனவும், ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், அடுத்த நாளிலிருந்து குறித்த பகுதியில், மணல் அகழ்வுச் செயற்பாடுகள் நிறுத்தப்படும் என அப்பகுதி மக்களால் எதிர்பார்க்கப்பட்ட போதும், இன்று வரை அங்கு மணல் அகழ்வுச் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை எனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற ஏற்பாடு செய்யுமாறும், ரவிகரன் கேட்டுக்கொண்டார்.