2025 ஜனவரி 31, வெள்ளிக்கிழமை

கருநாட்டுக்கேணி காணிகளில் சிங்கள குடியேற்றம்

Freelancer   / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து, சிங்கள குடியேற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, கருநாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் நிலையத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளே, இவ்வாறு அபகரிக்கப்பட்டு 180 சிங்கள குடும்பங்களை குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கீர்த்தி தென்னக்கோனின் வழிகாட்டலில், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஆகியவற்றை சேர்ந்த உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை (03) கருநாட்டுக்கேணிப் பகுதிக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் ஆகியோர் இணைந்து, தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதன்போது, துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது கூறியதாவது:

முல்லைத்தீவு மாவட்டத்தின் பூர்வீக எல்லைக் கிராமமான கருநாட்டுக்கேணியில், தமிழ் மக்களின் குடியிருப்பு காணிகளை ஆக்கிரமிப்புச் செய்து, அங்கு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளும் முயற்சிகள் தற்போது முனைப்புப் பெற்றுள்ளன.

இந்தப் பகுதிகளிலுள்ள காணிகள் அனைத்திலும், தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்ததுடன் 1973, 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உத்தரவுப் பத்திரங்கள் அவர்களுடைய கைகளில் இருக்கின்றன.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி எனப்படுகின்ற இந்த எல்லைக் கிராமங்கள் பூர்வீக பழந்தமிழ் கிராமங்களாகும். இங்கு வாழ்ந்த மக்கள், 1984ஆம் ஆண்டு, இந்தப் பகுதிகளிலிருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட பின்னர், தமிழ் மக்கள் நெற்செய்கைக்காக பயன்படுத்திய குளங்கள், அவற்றின் கீழான வயல் நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டன. அந்தவகையில், உந்திராயன் குளம், மறிச்சுக்கட்டிக்குளம், ஆமையன்குளம் ஆகிய குளங்களையும் அவற்றின் கீழான வயல் நிலங்களையும் தற்போது சிங்களவர்களே பயன்படுத்தி
வருகின்றார்கள்.

அத்தோடு கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணித் தமிழ்மக்கள் தமது மானாவாரி விவசாய நிலங்களில் பயிர்செய்கை செய்யும்போது, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களால் இடையூறுகள்
ஏற்படுத்தப்படுகின்றன. சிங்கள மக்களாலும் கூட இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள், பெரும்பான்மை இனத்தவர்களால் தாக்கப்படுவதும், தமிழர்ளுடைய கால்நடைகள் திருடப்படுகின்ற சம்பவங்கள் கூட ஒருபுறம் இடம்பெறுகின்றன.

இவ்வாறான சூழலில், தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளில் கூட சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முனைப்புப் பெற ஆரம்பித்துள்ளன.

இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது. தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களை பாதுகாப்பதற்கு நாம் எந்த எல்லைக்கும் போகத் தயாராக உள்ளோம் என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X