Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை
Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அனுதினன் சுதந்திரநாதன்
கொரோனா வைரஸ் பரவுகையின் தாக்கம், இலங்கையில் அசுர தாண்வம் ஆட ஆரம்பித்து இருக்கிறது. பல இடங்களில், தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.
அடுத்த நிமிடமே, நாம் வாழும் சூழல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனேயே, ஒவ்வொரு வினாடிகளையும் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. நம்மை நாம், பாதுகாத்துக் கொள்வதில் காட்டிய அலட்சியமும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து, வென்றுவிடுவோம் என்கிற மமதையில், இலங்கை அரசாங்கம் விட்ட தவறுகளுமே, இன்றைய சூழ்நிலையில், வீரியம் கொண்டிருக்கும் வைரஸ் பரவலைத் தடுக்க முடியுமா என்கிற கேள்வியை, எழுப்பி இருக்கிறது.
2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், ஒட்டுமொத்த நாடுமே, முழுமையான முடக்கத்துக்குள் உட்படுத்தப்பட்டதை ,அத்தனை இலகுவில் மறந்திருக்க முடியாது. ஆனாலும், ‘வருமுன் காக்க வேண்டும்’ என்பதற்காக, பல பொருளாதார இழப்புகளையும் தாங்கிக்கொண்டு, அந்த முழுமையான முடக்கத்தை, அரசாங்கமும் மக்களும் சரியாக நடைமுறைப்படுத்தி இருந்தார்கள்.
ஆனால், இம்முறை, அதே பொறுப்புணர்வை யாரிடத்திலும் பார்க்க முடியவில்லை. இதனால், கொரோனா வைரஸின் தாக்கத்துடன் இணைந்த பொருளாதார இழப்புகளுக்கு, முகம்கொடுக்க வேண்டிய மிக இக்கட்டான சூழ்நிலைகள், எம்மைச் சூழ்ந்து கொண்டுள்ளன என்பதே உண்மை.
திறந்த பொருளாதாரச் சூழ்நிலையில், எல்லா நாடுகளினதும் சரி, எல்லா வியாபாரங்களினது தொடர்புகளும் சரி, ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கின்றன. இதன் விளைவாக, பொருளாதாரத் தாக்கங்கள், ஒருவரை மாத்திரம் பாதிப்பதாக இருக்காது. ஒருவரோடு தொடர்புபட்டு இருக்கும், ஒவ்வொருவரையும் பாதிப்பதாகவே இருக்கப்போகிறது.
உதாரணமாக, கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக, பல நாடுகளும் முடங்கிப் போயுள்ளன. அந்த நாடுகளிலுள்ள பல்வேறு நிறுவனங்களும், தங்களது தொழில்முறை செயற்பாடுகளை நிறுத்தவேண்டிய சூழ்நிலையில் உள்ளன. எனவே, தன்னிடம் இருக்கக்கூடிய தொழிலாளர் வளங்களைக் காப்பாற்றக் கூடியவகையில், தன்னிடம் இருப்பிலுள்ள நிதியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கும்.
எனவே, தற்சமயத்தில் செயற்பாட்டில் இருக்கக்கூடிய செயற்றிட்டங்கள், புதிய திட்டங்கள் ஆகியவற்றை நிறுத்த முற்படும். இது, வெளிநாட்டில் இருக்கக்கூடிய குறித்த நிறுவனத்தில், தங்கி இருக்கக்கூடிய இலங்கை நிறுவனத்தையும் விரைவாகப் பாதிக்கச் செய்யும். குறித்த, வெளிநாட்டு நிறுவனத்தின் திட்டங்களில் வேலை செய்யும் இலங்கையின் நடுத்தர வர்க்கத்தினர், வேலையற்ற நிலையில், ஏனைய செயற்றிட்டங்களுக்கு மாற்றப்பட முடியாமல், தங்களது வேலைகளை இழக்க நேரிடலாம்.
இந்த வேலையிழப்பு, வேலையிழந்த அந்த நபரை மட்டும் பாதிக்கப்போவதில்லை. அந்த நபரையும் அவரது குடும்பத்தையும், இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமையும். காரணம், குறித்த குடும்பங்களில் வருமான மூலம் தடைப்படும்போது, அந்தக் குடும்பங்களால் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து, ஏனைய செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அது, இலங்கையில் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இன்னுமொருவரை, மறைமுகமாகப் பாதிக்கச் செய்யும். இது, நாட்டின் பணப்பாய்ச்சலைக் குறைப்பதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகளும் மிகப்பாரதூரமான அளவில் பாதிக்கப்படும்.
தற்போதைய நிலையில், அதிக நாள்களாக முடக்க நிலையிலிருக்கும் கம்பஹா மாவட்டத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களும் உருவாகி இருக்கிறார்கள். அரசாங்கம் ஆட்சியிலிருப்பதற்கு, பெரும்பான்மை வாக்குகளை வாரி வழங்கிய மாவட்டமாக கம்பஹா இருப்பதால், மிகவிரைவாகவே அவர்களுக்கான நிதி திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த விளைந்திருக்கிறது.
இதுவே, ஒட்டுமொத்த இலங்கையும் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலை உருவாகின்றபோது, ஏனைய இடங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதார நிலைக்கும், இதுபோல விரைவாக, இந்த அரசாங்கத்தால் செயற்பட முடியுமா?
கோட்டாபய, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதுமே, பொருள்கள், சேவைகளுக்கான வரிகளைக் குறைத்ததுடன், அரசாங்கத்துக்கு வருமான மூலமாக இருக்கக்கூடிய, பல்வேறு வருமான வரிகளையும் குறைத்திருந்தார். இதன் நோக்கம், மக்களின் கைகளில் மாதாந்தம் கிடைக்கின்ற பணத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமாக, கொள்வனவுச் சக்தியை அதிகரிக்க எதிர்பார்த்ததுடன், இதன் மூலமாக, இழந்த வருமான வரியின் ஒருபகுதியை ஈடுசெய்துகொள்ளவும் எதிர்பார்த்தார்.
ஆனால், தற்போதைய நிலை, இதற்கு எதிர்மாறாக அமைந்துள்ளது. தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கம், வறிய, நடுத்தர மக்களின் நாளாந்தச் செலவினங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கின்றது. ஒவ்வொரு சுய தொழிற்றுறையாளனுமே, பாதிப்பை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதிலும், மிகப்பெரும் வருமான மூலமாக இருக்கக்கூடிய சேவைத்துறை, சுற்றுலாத்துறை இரண்டுமே, மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன.
இதன்காரணமாகத்தான், இந்தப் பொருளாதாரம், ‘பிரமிட்’ கட்டுமானம்போல, ஒருவரில் மற்றொருவர் தங்கியிருப்பதாக முன்னரே கூறியிருந்தேன். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைவருக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதி ரீதியான இழப்புகளும் பொருளாதாரப் பிரச்சினைகளும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
எனவே, இந்த நிதி நெருக்கடியைத் தவிர்த்துக்கொள்ளவும் இந்தப் பொருளாதார பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளவும் என்ன மாதிரியான விடயங்களைச் செய்யவேண்டும் என்பதே, மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.
அப்பட்டமாக உண்மையைச் சொல்லவதாக இருந்தால், இந்த நிதியியல் சரிவிலிருந்தோ, பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்தோ ஒழிந்துகொள்ள முடியாது. நிச்சயமாக, பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால், புத்திசாதுர்யமாகச் செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில், இந்தப் பாதிப்புகளைக் குறைக்கக் கூடியதாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பித்துக்கொள்ள, சமூக இடைவௌி என்ற செயற்பாட்டை இறுக்கமாகப் பின்பற்றுகின்றோமோ? நிதியியல் ரீதியாக, எதிர்காலத்தில் நெருக்கமாக தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது, கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. இதன்மூலமாக, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ள வணிகங்களில், நிதிச் சுழற்சி ஆரம்பிக்கப்படும்.
இது, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், வேலைகளை இழந்தோருக்கு மீளவும் வேலைகள் கிடைக்கச் செய்கின்ற செயற்பாட்டுடன் ஆரம்பித்து, மீளவும் ஒரு சுழற்சி அடிப்படையில், இந்தச் செயற்பாடுகள் ஒரு ஸ்திரமான நிலைக்குச் செல்ல உதவியாக இருக்கும். இந்தப் பொருளாதார மீட்பு முறையை, வெறும் ஒற்றைப் பந்திக்குள் சுருக்கமாக அடக்கிவிட்டாலும், இந்தச் செயற்பாடுகள் இடம்பெற்று, பொருளாதா ஸ்திரநிலை ஏற்படுவதற்கு, வருடங்கள் பல ஆகலாம். இந்தக் காலத்தைக் குறைப்பதென்பது, தனிமனிதனால் முடியாத ஒன்றாகும். கூட்டு முயற்சியாக, அனைவருமே இணையும்போதுதான், இந்த நிலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
முதலாளித்துவ பொருளாதாரத்தில், நீங்கள் யாருமே பாதுகாப்பாகவில்லை என்பதை, இந்தக் கொரோனா வைரஸ் பரவல், இலங்கையில் நுழைந்த 2020இன் முற்பகுதியிலேயே உணர்ந்திருப்போம். இம்முறை, இந்தப் பொருளாதார நிலைவரத்துடன், நமது அலட்சிய போக்குக்கு மத்தியில், நமக்குள் ஊடுருவியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த வேண்டியதாக இருக்கும்.
மிக இக்கட்டான சூழலை, எதிர்வரும் சில வாரங்களுக்கு, முகம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. நமது பாதுகாப்பில் எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ, அதுபோல , நம் பொருளாதாரம் தொடர்பிலும் சிரத்தையோடு சிந்திப்போம்.இல்லையெனில், நாளைய வாழ்க்கையை வாழ, ஏதுமற்ற நிலையைக் கொண்டவர்களாக, நாம் மாறியிருக்கக்கூடும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago