Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
S.Sekar / 2024 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
இலங்கையின் பிரதான அந்நியச் செலாவணி வருமானத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை முக்கிய பங்காற்றுகின்றது. கடந்த சில வருடங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளால் வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த ஆண்டு முதல் மீண்டும் உயர்வை பதிவு செய்ய ஆரம்பித்திருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்பிருந்ததை போலவே, நாட்டின் பிரதான சுற்றுலாப் பகுதிகளில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தை காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில், ஒன்லைன் வீசா செயன்முறைக்கு இலங்கை அரசாங்கம் தெரிவு செய்திருந்த வெளிநாட்டு நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்தது. இலத்திரனியல் பிரயாண அங்கீகார (ETA) கட்டமைப்பு கையாளலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த சில அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரணைகளுக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக வீசா வழங்கும் செயன்முறை தற்போது குடிவரவு குடியகல்வு அதிகாரத்தரப்பிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வீசா விண்ணப்பங்களை கையாளும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் சார்பாக, தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்பட்டு, கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதி முதல், உயர்ந்த கட்டணத்தில் இந்த தனியார் நிறுவனத்தினூடாக வீசா வழங்கும் செயன்முறை முன்னெடுக்கப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இவ்வாறு உயர்ந்த தொகை அறவிடுவது தொடர்பில், பல்வேறு தரப்பிடமிருந்தும் விசனம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, பிராந்தியத்தில் காணப்படும் இலங்கைக்கு போட்டிகரமான இதர சுற்றுலாத்துறைசார் நாடுகளில் இவ்வாறு உயர்ந்த கட்டணங்கள் அறவிடாமையின் காரணமாக, பெருமளவான சுற்றுலாப் பயணிகள் அந்நாடுகளுக்கு இழக்க வேண்டிய சூழ்நிலையையும் இலங்கை எதிர்நோக்கியிருந்தது.
ஜனவரி மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பை இலங்கை பதிவு செய்திருந்த போதிலும், ஏப்ரல் மாதம் முதல் இந்த எண்ணிக்கை இலங்கை சுற்றுலா சபை எதிர்பார்த்த எண்ணிக்கையை எய்தியிருக்கவில்லை. காரணம், உயர்ந்த சுற்றுலா வீசா கட்டண அறவீடு அமைந்திருந்தது. இந்த விடயம் தொடர்பில் சுற்றுலாத் துறை அமைச்சரும் தமது விசனத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், சுற்றுலாத்துறை அமைச்சரின் இந்த எதிர்ப்புக்கு மத்தியில், அமைச்சரவை தனியார் நிறுவனத்துக்கு இந்த வீசா கையாளலுக்கான அனுமதி வழங்கும் தீர்மானத்துக்கு அனுமதியளித்திருந்தது.
இந்த தீர்மானத்துக்கு எதிராக பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாட்டலி சம்பிக ரணவக, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோருடன், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், சில அமைப்புகளும் அடிப்படை உரிமை மீறல் மனுவை சமர்ப்பித்திருந்தன. இதில் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக எட்டு வழக்குகளும், வீசா முறைமையில் முறைகேடு இடம்பெறுகின்றமை தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டும் இந்த முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டமைப்பை கையாள்வதில் ஈடுபடும் தனியார் நிறுவனமான VFS குளோபல் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் கையளிக்கப்பட்ட முறை சாவலுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்களின் நம்பிக்கையை மீறும் வகையிலும், இந்த செயன்முறையினால் தரவுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும், விதிமுறை மீறல்களுடன், பெருமளவு நிதிசார் மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பிலும் முறைப்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம், பாராளுமன்ற பொது நிதிக் குழுவினால் வீசா விதிமுறை மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் மற்றும் விலைமனுக்கோரல்கள் எதனையும் மேற்கொள்ளாமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்க மேற்கொண்ட தீர்மானம் கணக்காய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்துக்கு அந்த அமைப்பின் தலைமை செயற்பாட்டாளரான ஹர்ஷ டி சில்வா சமர்ப்பித்திருந்த அறிக்கையில், “போட்டிகரமான விலைமனுக்கோரல் முறை பின்பற்றப்படாமல் இந்த செயற்பாட்டுக்கான பொறுப்பு குறித்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீசா வழங்கும் செயன்முறைக்காக முன்னர் சேவை வழங்கிய நிறுவனம் 1 அமெரிக்க டொலர் அறவிட்ட நிலையில், தற்போது வழங்கும் நிறுவனம் சுமார் 25 அமெரிக்க டொலர்களை அறவிடுகின்றது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற பொது நிதிக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் சமூகமளிக்காமை தொடர்பில் தமது கடும் அதிருப்தியையும் இந்தக் குழு வெளியிட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானம் இடைக்கால தடையுத்தரவாக அமைந்திருக்கும் நிலையில், இந்த தீர்மானத்துக்கு பொறுப்புக்கூர வேண்டிய நபர்கள் மற்றும் அதிகாரிகள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்படுமிடத்துக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக மாத்திரமே இது போன்ற பொது நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
நாட்டின் உயர் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு மேடைகளில் பிரசன்னமாகி கேள்விகளுக்கு பதிலளித்து வரும் ஜனாதிபதி அவர்கள், அண்மையில் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் நிறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனான உங்களின் எதிர்கால அரசியல் பயணம் அமையப் போகின்றது என்ற கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், தாம் அவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யவில்லை, பொது மக்களே அவர்களை தெரிவு செய்தனர், அந்தப் பொறுப்பு பொது மக்களையே சேரும். எனவே, அது தமது பொறுப்பல்ல என்றவாறான பதிலை வழங்கி, தமது பொறுப்பிலிருந்து நழுவும் வகையில் பதிலளித்திருந்தார். இதனூடாக, அவர் தமது ஆதரவாளர்களுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளமாட்டார் என்பதே புலப்படுகின்றது.
இந்த வீசா நடைமுறைக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையானது, ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்களின் பொறுப்புக்கூரல், வெளிப்படைத்தன்மை போன்றன தொடர்பில் பெருமளவு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதுடன், மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீசா நடைமுறை மோசடி என்பது, ஊழலின் தாக்கம் ஓயவில்லை என்பதை மீண்டும் நினைவூட்டுகின்றது. சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், உண்மையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்ட அமைச்சர் அவரின் பதவியிலிருந்து தாமாக விலக வேண்டும், அல்லது வெளிப்படையான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெப்பதற்காக அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதியுடன் அவருக்கு ஆதரவளித்து காணப்படுவோருக்கு குற்றச்சாட்டுகள் பல உள்ளனவே எனும் கருத்தை ஆதரிக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. நாட்டின் ஜனாதிபதி எனும் வகையில், முன்பு ஆட்சியிலிருந்த மைத்திரிபால சிறிசேன அவர்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுபோன்றே தமது பொறுப்பை மறுத்து கருத்து வெளியிடுகின்றார். தற்போதும் அதற்கு பொறுப்புக்கூர மறுக்கிறார். தற்போதைய ஜனாதிபதியும், அதுபோன்றே, தாம் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களுக்கு பொது மக்கள் மீது குற்றம் சுமத்தி, நழுவிச் செல்லப் பார்க்கின்றார். எவ்வாறாயினும், தமக்கு எதிராக காணப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை உறுதி செய்வதற்கு ஜனாதிபதிக்கு காணப்பட்ட ஒரு வாய்ப்பை தவறவிட்டுள்ளார் எனவே கருதத் தோன்றுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago