2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பெருந்தோட்ட சிறுவர்களின் கல்வியை மேம்படுத்த ஜப்பான் ஆதரவு

Freelancer   / 2024 மார்ச் 25 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)”, திட்டத்தின் கீழ் மானிய உதவிக்கான ஒப்பந்தத்தில், அட்வென்டிஸ்ட் அபிவிருத்தி மற்றும் நிவாரண முகவர் அமைப்பின் (ADRA) இலங்கைக்கான பணிப்பாளர் மெத்தியு விட்டி உடன் கைச்சாத்திட்டிருந்தார்.

 

நுவரெலியாவில் மின்னாஹ் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பாடசாலை கட்டடங்களை மேம்படுத்துவதற்கு GGP ஊடாக ADRA க்கு 70,916 அமெரிக்க டொலர்களை மொத்தமாக ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

 

GGP திட்டத்தினூடாக மத்திய மாகாணத்தில் 19 செயற்திட்டங்களை ஜப்பானிய அரசாங்கம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. இவற்றினூடாக, தேயிலைப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பின்தங்கிய சமூகத்தாரின் நலன்புரி மற்றும் மனிதப் பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்படுகின்றது.

வைத்தியசாலைகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நீர், கழிவறை வசதிகள் போன்றவற்றை மேம்படுத்துவது மற்றும் நடமாடும் நூலகங்களை நிறுவுவது போன்றவற்றை இந்தத் திட்டங்கள் கொண்டிருந்தன.

வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படைக் கல்வியின் முக்கிய பங்கு தொடர்பில் தூதுவர் மிசுகொஷி குறிப்பிட்டதுடன், அரச முகவர் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றுடன் கைகோர்த்து, இலங்கையின் சுபிட்சம் மற்றும் உறுதித் தன்மைக்கு ஆதரவளிப்பது தொடர்பான அர்ப்பணிப்பை அவர் மீளுறுதி செய்திருந்தார்.

இந்த மானியத்தைப் பெற்றுக் கொண்டு, மெத்தியு விட்டி உரையாற்றுகையில், “1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டதுடன், தற்போது 107 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் பெருமளவானோர் பெருந்தோட்ட பணியாளர்களின் பிள்ளைகளாவர். இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது காணப்படும் பாடசாலைக் கட்டிடங்கள் மறுசீரமைக்கப்படுவதுடன், புதிய வகுப்பறைகளின் நிர்மாணம், புதிய புத்தகங்கள், தளபாடங்கள் மற்றும் நூலக முகாமைத்துவ கட்டமைப்பைக் கொண்ட நூலகம் போன்றவற்றையும் கொண்டிருக்கும்.

பாதுகாப்பான மற்றும் போதியளவு பயிலல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தப் பாடசாலையில் மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. சமூகத்தின் சகல மாணவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் வளமான பாடசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பிரதான நோக்காக அமைந்திருப்பதுடன், பாடசாலையில் அவர்களின் நலன் மற்றும் பயிலலை மேம்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .