2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நிதிப் பெறுபேறுகள் வெளியீடு

S.Sekar   / 2022 மார்ச் 11 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டுக்கான நிதிப் பெறுபேறுகளை டோக்கியோ சீமெந்து குழுமம் (டோக்கியோ சீமெந்து) வெளியிட்டிருந்தது. இக்காலப்பகுதிக்கான நிறுவனத்தின் புரள்வுப் பெறுமதி ரூ. 13,771 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், முன்னைய ஆண்டில் இதே காலப்பகுதிக்கான இந்தப் பெறுமதி ரூ. 11,456 மில்லியனாக காணப்பட்டது. இந்தப் பெறுமதி வருடாந்த அடிப்படையிலான வளர்ச்சியாக 20% என பதிவாகியிருந்தது. புரள்வுப் பெறுமதி வளர்ச்சி காணப்பட்ட போதிலும், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் விற்பனை அளவுகள் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3% வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. விநியோகச் சங்கிலித் தொடரில் பதிவாகியிருந்த சரிவுகள் இதில் பங்களிப்புச் செலுத்தியிருந்தது.

மூன்றாம் காலாண்டில் குழுமம் ரூ. 1,986 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 1,442 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 38% வளர்ச்சியாகும். வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 1,649 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 1,303 மில்லியனாக பதிவாகியிருந்தது.

சரக்கேற்றல் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் நாணப் பெறுமதி மதிப்பிறக்கம் போன்ற காரணிகளால் சீமெந்து உற்பத்தியாளர்களுக்கு 50 கிலோகிராம் சீமெந்து பொதி ஒன்றின் சில்லறை விற்பனை விலையை நவம்பர் 7 ஆம் திகதியிலிருந்து ரூ. 1,275 ஆக உயர்த்த நேரிட்டது. 3 வருட காலப்பகுதியில் இது 16% அதிகரிப்பாக அமைந்துள்ளது. (2019 ஆம் ஆண்டில் அ.உ.சி.விலை ரூ. 1,095 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது) இக்கால கட்டத்தில் கட்டட நிர்மாண மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பில் ஏற்பட்ட குறைந்த விலை அதிகரிப்பாக இது அமைந்துள்ளது. மேலும், சரக்கேற்றல் மற்றும் மூலப்பொருட்கள் விலை அதிகரிப்புகள் என்பவற்றின் காரணமாக, ஜனவரி 1ஆம் திகதி 50 கிலோகிராம் சீமெந்துப் பை ஒன்றின் விலை தற்போதைய விலையான ரூ. 1,375 ஆக உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முன்னைய காலாண்டைப் போலன்றி, இந்தக் காலாண்டில் முடக்கல் நிலை அல்லது பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. இதனால் வியாபாரங்களுக்கு தடங்கல்களின்றி இயங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதியில் நாட்டில் அசாதாரண மழையுடனான வானிலை நிலவியது. இதனால் நிர்மாணம் சார்ந்த செயற்பாடுகள் மந்தமடைந்திருந்தன.

இந்தக் காலாண்டில், பல கட்டட நிர்மாணப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதை எம்மால் அவதானிக்க முடிந்தது. சீமெந்து முதல் கம்பிகள், டைல்கள் என சகல வகையான கட்டட நிர்மாணப் பொருட்களுக்கும் இந்த நிலை காணப்பட்டது. டொலர் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக இறக்குமதிக்கான கடன் பத்திரங்களை ஆரம்பிப்பதில் நிலவிய தாமதங்கள் இதில் பிரதான பங்களிப்பு செலுத்தியிருந்தது. இந்த தட்டுப்பாடு காரணமாக நிர்மாணத் திட்டங்கள் தாமதமடைந்ததுடன், ஊழியர்கள் பணியின்றிருக்கும் சூழலும் ஏற்பட்டது. இதனால் மேலதிகமாக நிர்மாணத்திட்ட செலவுகளும் ஏற்பட்டன.

நாட்டில் நிலவும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக சீமெந்து இறக்குமதியாளர்கள் தமது இறக்குமதியை பெருமளவு குறைத்திருந்தமை காரணமாக, சந்தையில் தட்டுப்பாடும் ஏற்பட்டது. விற்பனையாளர்கள் மத்தியில் டோக்கியோ சீமெந்து அதியுயர் சில்லறை விலையை நிர்ணயித்திருந்த நிலையில், சீமெந்து தட்டுப்பாடு காரணமாக இரண்டாம் நிலை சந்தையில் பட்டியலிடப்பட்ட விலைக்கு அப்பால் சீமெந்து விற்பனைக்கான ஒரு சூழல் ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சந்தையில் தடங்கலில்லாத விநியோகம் மற்றும் உள்நாட்டின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை காரணமாக 3ஆம் காலாண்டில் சீமெந்து இறக்குமதியை 20% இனால் நிறுவனம் அதிகரித்திருந்தது. மொத்த சீமெந்து இறக்குமதி மாத்திரமன்றி, பொதியிடப்பட்ட சீமெந்து இறக்குமதியையும் சந்தையின் கேள்வியை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொண்டிருந்தது.

சர்வதேச மட்டத்தில் சாம்பல் மற்றும் எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, போன்றவற்றுடன் சரக்கேற்றல் செலவுகள் போன்றன மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் காரணமாக மூலப்பொருட்களின் விலைகளில் மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும். ஒமிக்ரோன் தொற்றுப் பரவல் காரணமாக சர்வதேச மட்டத்தில் உற்பத்திசெயற்பாடுகளில் ஏற்படும் இழப்புகள் காரணமாக மூலப்பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் விநியோகத் தொடரில் தொடர்ந்தும் தட்டுப்பாடுகள் ஏற்படக்கூடும். இதனால் நாட்டின் நிர்மாணப் பகுதிகளில் குறைந்தளவு பொருளாதார செயற்பாடுகள் மற்றும் உற்பத்தித்திறன் வீழ்ச்சிகள் போன்றவற்றை தோற்றுவிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .