Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
S.Sekar / 2024 மே 27 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
இலங்கையின் பொருளாதாரம் கடன்களின் அடிப்படையில் தங்கியுள்ளது, மாறாக உற்பத்தியில் தங்கியிருக்கும் பொருளாதாரமாக மாற்றப்பட வேண்டும் என பல பொருளாதார நிபுணர்கள் தமது கருத்துகளை வெளியிட்ட வண்ணமுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் காலப்பகுதியில், இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளின் பிரகாரம், பொது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள அரசியல் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களும் இதே கருத்தை பல ஊடகங்களில் பிரச்சாரப்படுத்திய வண்ணமுள்ளனர். ஆனாலும், இந்த உற்பத்திசார் பொருளாதாரம் என்றால் என்ன விளக்கமளிக்குமாறு கோரிய போதிலும், பலர் அதற்கான சரியான பதிலை வழங்க தவறுகின்றனர்.
பொருளியலில் உற்பத்திசார் பொருளாதாரம் என்பதற்கு வரைவிலக்கணம் இல்லை என்பதே உண்மை. பொருளியலுக்கு முரணான வகையில் தேசிய மக்கள் சக்திசார் ஆதரவாளர்கள் கருத்துகளை முன்வைப்பது இது முதல் தடவையல்ல. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்து பிரச்சாரம் செய்த போதும், சமநிலையான பொருளாதாரம் என்பது தொடர்பான வாக்குறுதியை பொது மக்களுக்கு வழங்கியிருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு, கடந்த கால செயற்பாடுகளை எடுத்து நோக்குகையில், எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிபீடம் ஏறினால், விவசாயம் மற்றும் தொழிற்துறைசார் துறைகளுக்கு முக்கியத்துவமளித்து, கடந்த ஆண்டில், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 60 சதவீதம் பங்களிப்பு வழங்கிய சேவைத் துறை போன்றவற்றுக்கு முக்கியத்துமளிக்காது என எண்ணத் தோன்றுகின்றது. தொழிற்துறையிலும் உற்பத்தித் துறையில் அதிகளவு கவனம் செலுத்துவார்கள் போலும். உற்பத்திசார் பொருளாதாரக் கொள்கை பற்றி கருத்து வெளியிடுவோர், வங்கியியல், காப்புறுதி, ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல், சரக்குக் கையாளல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணனித் துறை போன்ற சேவைத் துறைகளில் அதிகளவு நாட்டம் கொண்டிருக்கவில்லை எனவே தோன்றுகின்றது.
காணி, ஊழியர் மற்றும் மூலதனம் ஆகிய காரணிகளை அடிப்படைகளாகக் கொண்டே உற்பத்திச் செயன்முறை மேற்கொள்ளப்படுகின்றது. பொருட்கள் உற்பத்திக்கு மாத்திரம் இவை பயன்படாமல், சேவைத் துறைகளுக்கும் இது இன்றியமையாததாகின்றது. எனவே, குறிப்பிட்ட காலமாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் பெருமளவு பங்களிப்பு வழங்கும் சேவைத் துறை தொடர்பில் கவனம் செலுத்தாமல் விடுவது என்பது நடைமுறைச்சாத்தியமான வகையில் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும், அசல் உற்பத்தி என்பதில் கொள்கை அடிப்படையில் தவறான கருத்தை தோற்றுவிப்பதாகவும் அமைந்துள்ளது.
உலகின் மாபெரும் பொருளாதாரம் என கருதப்படும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் 80 சதவீதத்தை சேவைத் துறை கொண்டுள்ளது. தமது பொருளாதார கட்டமைப்பில் விவசாயம் மற்றும் தொழிற்துறைகளுக்கு முக்கியத்துவமளிக்காமை என்பது தொடர்பில் அமெரிக்காவின் எவரும் பெருமளவில் அக்கறை கொள்வதில்லை. 1977 ஆம் ஆண்டில் நாட்டில் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றத் தொடங்கியதிலிருந்து சேவைத் துறையின் முக்கியத்துவம் என்பது நாட்டில் அதிகரித்துள்ளது. சுதந்திரம் பெற்ற போது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தில் 34 சதவீத பங்களிப்பை மாத்திரம் வழங்கியிருந்த நிலையில், இந்தப் பங்களிப்பு அரைப் பங்குக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக, சேவைகள் என்பது வியாபாரமாக கருதப்படலாம். அவற்றை நாடுகடந்து முன்னெடுக்கக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் சேவைகள் துறை முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. உலகின் மாபெரும் சேவைகள் ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்கின்றது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தொழிற்துறைமயமாக்கம் மட்டுமே பொருளாதார அபிவிருத்திக்கு வழிகோலும் என்பது தவறான கொள்கை என்பதற்கு சிறந்த உதாரணமாகவும் அமைந்துள்ளது.
விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளிலிருந்து பெறப்படும் விளைச்சல்களை விற்பனை செய்வதற்கு வங்கியியல், காப்புறுதி மற்றும் சரக்குக் கையாளல் போன்ற சேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கிழக்கு – மேற்கு வர்த்தக பாதையின் கேந்திரப்பகுதியில் இலங்கை அமைந்திருப்பதாலும், எதிர்காலத்தில் பொருளாதார ரீதியில் வலுப்பெற்ற ஜாம்பவானாக திகழும் இந்தியாவை அண்மைத்து காணப்படுவதாலும், பிராந்தியத்தில் சரக்குக் கையாளலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இலங்கை அமைந்துள்ளது. இதனால் சேவைகள் துறையினூடாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் பெருமளவு வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு சேவைகள் துறை தொடர்பில் கவனம் செலுத்தாமல், இன்னமும் விவசாயம் மற்றும் தொழிற்துறை தொடர்பில் பேசிக் கொண்டிருப்பவர்கள், நவீன, சர்வதேச பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் போதியளவு அறிவைக் கொண்டிருக்கவில்லை அல்லது அவை தொடர்பில் அக்கறை கொண்டிருக்கவில்லை எனவே எண்ணத் தோன்றுகின்றது.
1977 ஆம் ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகத்துடன் நாட்டின் உற்பத்திசார் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டது என தற்போதும் குரலெழுப்பும் சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு, இலங்கையில் பாதுகாப்புவாதம் என்பது பல தடவைகள் முயற்சிக்கப்பட்டது தோல்வியைத் தழுவிய முறைமையாக அமைந்திருப்பதுடன், ஒரு சில வியாபாரிகள், வர்த்தகர்களுக்கு மாத்திரம் போட்டியின்றி வருமானத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய முறையாகவும் அமைந்துள்ளது. நலிந்த மற்றும் கொள்கை ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாத முறைமைகள் நாட்டுக்கு அர்த்தமுள்ள முன்னேற்றத்தை ஏற்படுத்தமாட்டா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
47 minute ago
56 minute ago