2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்

Freelancer   / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று வருட காலத்தில் நாடு முழுவதும் 100,000 மரங்களை நடும் தேசிய எதிர்ப்பார்ப்பு மிக்க திட்டத்தை கொமர்ஷல் வங்கி ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாரிஸ் உடன்படிக்கையின் பிரகாரம் நாட்டின் சுய வரையறைக்குட்பட்ட தேசிய காலநிலை உறுதிமொழிகளை நிறைவேற்ற உதவும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

'மரங்கள் நிறைந்த தேசம்' என பொருத்தமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் 17 இடங்களில் 12,000 மரங்களை நாட்டி வைத்து இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி ஆரம்ப தினத்திலேயே இந்தத் திட்டத்தின் சுமார் 12% நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தத் திட்டத்தின் ஆரம்ப தின நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

சிங்கராஜ வனத்தில் கிகுருவ, ஹந்தானை மலைப்பிரதேசத்தின் கீழ் புற சரிவு, அனுராதபுரத்தின் ஜய ஸ்ரீ மகா போதி வளாகம், பெல்லன்வில அத்திடிய பறவைகள் சரணாலயம், திஸ்ஸமஹாராம குளக்கரை பகுதி, நுவர எலிய விக்டோரியா பூங்கா, பல்கலைக்கழகங்கள் பலவற்றின் மைதானங்கள் என்பனவற்றில் முதல் கட்ட மர நடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இந்தத் திட்டம் தொடர்ந்து அமுல் செய்யப்படும் என வங்கி அறிவித்துள்ளது. அரச முகவராண்மைகள், பல்கலைக்கழகங்கள், இலங்கை இராணுவம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்படும். மரங்கள் சுய வளர்ச்சி நிலையை அடையும் வரை அவற்றுக்குத் தேவையான பாதுகாப்பையும் பராமரிப்பையும் வங்கி வழங்கும்.

தேசிய மட்டத்தில் நிலைபெறுதகு தன்மையை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்துக்கான அர்ப்பணம் பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க 'நாட்டின் முதலாவது காபன் சமநிலை வங்கி என்ற நிலையை அடைந்துள்ளதன் மூலம் நிலைபெறுதகு தன்மை என்பது கொமர்ஷல் வங்கியைப் பொருத்தமட்டில் வெறுமனே பேச்சளவில் உள்ள ஒரு விடயம் அல்ல என்பதை நாம் ஏற்கனவே நிரூபித்துள்ளோம். ஆனால் அது எங்களுக்கு ஒரு ஆரம்பம் மட்டுமே. முடிவல்ல. சுற்றுச் சூழல் புத்துணர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையிலும்; காலநிலை தாக்கங்களை எதிர்த்துப் போராடும் வகையிலும், வங்கி பல திட்டங்களுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளது. 'மரங்கள் நிறைந்த தேசம்' என்ற தொனிப்பொருளில் இந்தப் பெரிய அளவிலான திட்டத்தின் மூலம் வாயு தரத்தின் முன்னேற்றம், மழை வீழ்ச்சி, உயிர் பன்முக தன்மை என்பனவற்றில் கணிசமான தாக்கங்கள் ஏற்படும் என்பது எமது நம்பிக்கையாகும். இந்த திட்டமானது நிலையாண்மை தொடர்பில் வங்கியின் சுற்றாடல் இலக்குகளை அடைந்து கொள்வதை மட்டும் நோக்காகக் கொண்டதல்ல. மாறாக இது ஒரு பொறுப்பான கூட்டாண்மை பிரஜை என்ற வகையில் வங்கி, இந்த நாடு தனது காலநிலை இலக்குகளை அடைந்து கொள்வதில் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கையாகும்' என்றார்.

கொமர்ஷல் வங்கி ஆதரவளித்துள்ள இது போன்ற சுற்றாடல் பாதுகாப்புத் திட்டங்களில் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள திம்புலாகல கந்தேகம வன பிரதேசத்தில் தரம் குறைந்துள்ள 100 ஹெக்டயர் வனவாழ்வு பிரதேசத்தில் மீள காடு வளர்ப்புத் திட்டம், கொக்கலையில் கண்டல் தாவர மீள் வளர்ச்சித் திட்டம், பாணமையில் கடல்சார் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம், களுத்துறை கரையோர பகுதியை மெருகூட்டி பராமரிக்கும் திட்டத்தில் இலங்கை பல்லுயிர் நிலையத்துடன் பங்குடைமை, பல்வேறு கரையோர சுத்திகரிப்புத் திட்டங்கள் என்பன அடங்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .