2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

கொமர்ஷல் வங்கிக்கு புதிய தவிசாளரும் பிரதி தவிசாளரும் நியமனம்

Freelancer   / 2024 ஏப்ரல் 26 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியின் புதிய தவிசாளராக உயர்தர சர்வதேச முதலீட்டு வங்கியாளர் சர்ஹான் முஹ்ஸீன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நிதிச் சேவைகள் தொழில்சார் நிபுணரான ராஜா சேனநாயக்க பிரதித் தவிசாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் 2024 ஏப்ரல் 22 திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளன.

வங்கியின் பிரதி தவிசாளராக இருந்த முஹ்ஸீன், தவிசாளராக பதவி வகித்த பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன ஓய்வு பெற்றதை அடுத்து அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். முஹ்ஸீன் பதவி உயர்வு பெற்றதை அடுத்து இதுவரை நிறைவேற்று அதிகாரமில்லாத பணிப்பாளராக இருந்த ராஜா சேனநாயக்க அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட முதலீட்டு வங்கியாளரான சர்ஹான் முஹ்ஸீன் வர்த்தக ரீதியான ஒன்றிணைப்புக்கள் மற்றும் கையகப்படுத்தல் ஆகிய பிரிவுகளிலும், கூட்டாண்மை நிதி மற்றும் மூலதன சந்தையிலும் விரிவான அனுபவம் கொண்டவர். ஆசியப் பிராந்தியம் முழுவதும் பல நிதி நிறுவனங்களில் அவற்றின் மூலோபாய கூட்டாண்மை நிகழ்ச்சி நிரல் மற்றும் திட்டமிடல்களை வகுப்பதில், பணிப்பாளர் சபைகளுடனும், சிரேஷ்ட தலைமைத்துவங்களுடனும் உயர் நிலைப் பதவிகளில் இணைந்து பணியாற்றி உள்ளார். இதற்கு முன் அவர் பெஸ்ட் இன் கிளாஸ் குளோபல் முதலீட்டு வங்கியிலும், கிரடிட் சுயிஸ், பேங்க் ஒப் அமெரிக்கா மெரில் லின்ச் அன்ட் ஜேபி மோர்கன் நிறுவனங்களிலும் பிராந்திய ரீதியான தலைமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். டீலொயிட்டின் இணை பணிப்பாளராகவும் அவர் பதவி வகித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் முதுமாணி பட்டத்தை பெற்றுள்ள சர்ஹான் முஹ்ஸீன் வர்த்தக நிர்வாக கலைமாணி கௌரவ பட்டத்தை வெஸ்ட்டர்ன் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். நியுயோர்க்கில் ஜேபி மோர்கனில் கூட்டாண்மை நிதி பயிற்சி நெறியையும் அவர் பூர்த்தி செய்துள்ளார். சிங்கப்பூர் முகாமைத்துவ பல்கலைக் கழகத்தில் சபைகளுக்கான தலைமைத்துவ பயிற்சியையும் நிறைவு செய்துள்ளார்.

செப்டெம்பர் 2020 முதல் கொமர்ஷல் வங்கியின் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக கடமையாற்றிய ராஜா சேனநாயக்க இலங்கை CA நிறுவனத்தின் முழு நேர உறுப்பினராவார். கல்வித்தகமைக்குப் பிந்திய 39 வருட அனுபவத்தை அவர் கொண்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பி.கொம் விஷேட பட்டத்தைப் பெற்றுள்ள அவர், அதே பல்கலைக்கழகத்தின் PIM பிரிவில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். யூரோமணியில் வங்கியியல் மற்றும் நிதி பயிற்சியையும் அவர் பெற்றுள்ளார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவ பயிற்சியையும் அவர் பூர்த்தி செய்துள்ளார்.

ஏர்னஸ்ட் அன்ட் யங் நிறுவனத்தில் தனது ஆய்வுகளை நிறைவு செய்த சேனநாயக்க பட்டயக் கணக்காளராக பதவி நிலை பெற்று சிங்கர் (சிலோன்) நிறுவனத்தில் 1991ல் நிதி கணக்காளராக இணைந்தார். பிறகு 1994ல் நிதித்துறை சிரேஷ்ட முகாமையாளராக கொமர்ஷல் வங்கியில் இணைந்தார். 2004 ஜனவரியில் அவர் (நிதி மற்றும் திட்டமிடல்) பிரதி பொது முகாமையாளராகப் பதவியேற்றார். 2007 பெப்ரவரி வரை அவர் இந்தப் பதவியை வகித்தார். 2007 மார்ச்சில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியில் அதன் பிரதம நிதி அதிகாரியாக இணைந்து கொண்டார். கொமர்ஷல் வங்கிக்கு முழு அளவில் சொந்தமான கிளை நிறுவனமான வரையறுக்கப்பட்ட CBC நிதி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் அவர் பணியாற்றுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .