Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2023 டிசெம்பர் 25 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
சமையலில் வெங்காயம் வெட்டும் போது அதனை வெட்டுபவருடன், அருகிலுள்ளவர்கள் கூட கண் கலங்குவது வழமை. ஆனால், கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக, கடையில் வெங்காயத்தின் விலையை கேட்டவுடன் கண் கலங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
ஆம், டிசம்பர் மாதம் முற்பகுதியில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 200 முதல் 250 வரை காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் 750 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் வீட்டு சமையலறை முதல் கடையில் சுடப்படும் வடை வரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம் சந்தியிலுள்ள சாப்பாட்டுக் கடையில் முன்னைய வாரம் வரை வரை 40 ரூபாய்க்கு விற்பனையான ஒரு பருப்பு வடை, கடந்த வாரம் முதல் 50 ரூபாய் ஆகிவிட்டது. “என்ன அண்ணே, வடை 10 ரூபாய் கூடிருச்சே… ஆமா தம்பி, வெங்காயம் விலை ஏறிருச்சே…” என்பதாக விலையின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் சமைக்கும் உணவுகளில் வெங்காயம் என்பது இன்றியமையாத ஒரு சேர்பொருளாக அமைந்திருப்பதுடன், பலருக்கு வெங்காயம் சேர்க்காமல் உணவு சமைக்க முடியாது என்ற ஒரு பழக்கமும் நிலவுகிறது. இந்நிலையில் வெங்காயம் வெட்டும் போது மாத்திரம் ஏற்பட்ட கண் கலக்கம், விலையைக் கேட்டவுடனே கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உண்மையில் சடுதியான இந்த விலை ஏற்றத்துக்கு காரணம், நம் அண்டை நாடான இந்தியா தான். இலங்கைக்கு மாத்திரமன்றி, ஆசிய பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளுக்கு இந்தியாவிலிருந்தே வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அது மட்டுமல்ல, உலகின் மாபெரும் வெங்காய ஏற்றுமதியாளராகவும் இந்தியா திகழ்கின்ற நிலையில், டிசம்பர் 8 ஆம் திகதி முதல் வெங்காய ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. இந்தியாவுக்கு போட்டியாக சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் வெங்காய ஏற்றுமதியை மேற்கொள்வதுடன், பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஈரான் போன்ற நாடுகளும் வெங்காய ஏற்றுமதியில் சிறிதளவில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், கேள்வி அதிகரித்துள்ளதால், இந்நாடுகளும் தமது விலைகளை சடுதியாக உயர்த்தியுள்ளன.
இந்தியாவில் வெங்காய உற்பத்தி குறைவடைந்துள்ளமையால், டெல்லி உட்பட பிரதான நகரங்களில் வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்திருந்த நிலையில், இந்த தீர்மானத்தை இந்தியா மேற்கொண்டிருந்தது. மூன்று மாத காலப்பகுதியில் இந்தியாவில் வெங்காயத்தின் விலை சுமார் இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதனால் தனது உள்நாட்டுத் தேவைக்கு முக்கியத்துமளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை இந்தியா மேற்கொண்டிருந்தது.
இலங்கை மட்டுமன்றி பங்களாதேஷ், மலேசியா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் கூட இந்த ஏற்றுமதி தடை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாடுகளிலும் வெங்காயத்தின் விலை பெருமளவில் உயர்வடைந்துள்ளது.
இந்த ஏற்றுமதி தடை அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்திய சந்தைகளில் வெங்காயத்தின் விலை முன்னரை விட சுமார் 20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவின் வெங்காய ஏற்றுமதித் தடை 2024 மார்ச் மாத இறுதி வரையேனும் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் வெங்காய ஏற்றுமதியில் ஈடுபடுவோர், சர்வதேச சந்தையில் தமது நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு, உள்நாட்டுத் தேவை சீரடைந்ததும், மீண்டும் ஏற்றுமதிக்கு இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கருத்துகளையும் முன்வைத்துள்ளனர்.
உள்நாட்டில் பெரிய வெங்காய உற்பத்தி நாட்டின் மொத்தத் தேவையின் சுமார் 35 சதவீதத்தை மாத்திரமே பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது. எஞ்சிய 65 சதவீத தேவையை நிவர்த்தி செய்வதற்கு இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அதேவேளை, சின்ன வெங்காய உற்பத்தி நாட்டின் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இருந்த போதிலும் சின்ன வெங்காயச் செய்கை பெருமளவில் வட பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை மற்றும் பயிர் செய்யப்படும் காணியின் அளவு ஆகியன வருடாந்தம் வீழ்ச்சியடைந்த வண்ணமுள்ளது.
இந்நிலையில் தற்போது நிலவும் தொடர்ச்சியான கடும் மழையுடனான காலநிலை காரணமாக வெங்காயச் செய்கை மேற்கொள்வது உகந்ததாக அமைந்திருக்கவில்லை.
சரி, உணவுப் பொருட்களில் பெருமளவில் வெங்காயத்தின் பயன்பாட்டை இன்றியமையாத ஒன்றாக பழக்கப்படுத்திக் கொண்டுள்ளவர்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கமைய, உணவுத் தயாரிப்பு மற்றும் நுகர்வு பழக்கத்திலும் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு காலமாக இது அமைந்துள்ளது. தற்போதைய சடுதியான விலை அதிகரிப்பை சமாளிப்பதற்காக வெங்காயத்துக்கு பதிலாக லீக்ஸ் மற்றும் வெங்காய இலை போன்றவற்றை உபயோகிக்கலாம். வெங்காயத்துக்கு நிகரான சுவையை வழங்காத போதிலும், வெங்காயத்தின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் கலக்கத்தை ஓரளவு இவை தணிக்க உதவும்.
வணிகத்தின் அடிப்படைக் கொள்கையான குறைந்தளவு விநியோகத்தில், அதிகளவு கேள்வி காணப்படும் சந்தர்ப்பத்தில் விலையும் உயர்வடையும் என்பதற்கமைய, தற்போதைய வெங்காய விலை அதிகரிப்பிலும் அதனை உணர முடிகின்றது. எமது பழக்கத்தில் சற்று மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக இந்த விலையை மீண்டும் ஓரளவு கட்டுப்பாட்டினுள் கொண்டு வரலாம். ஏனைய பொருட்களைப் போல வெங்காயம் என்பது மாதக் கணக்கில் பழுதடையாமல் வைத்திருக்க முடியாதல்லவா. பதுக்கி வைக்கப்பட்டுள்ளவையும் ஒரு கட்டத்தில் சந்தைக்கு வரத்தான் வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
6 hours ago
9 hours ago