Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை முதலீட்டு சபையின் கீழ் இயங்கும் ஏற்றுமதி நிறுவனங்கள், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதாகவும் அவற்றின் பெறுபேறுகள் கிடைக்கும் வரையில், குறித்த ஊழியர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சஞ்ஜய மொஹோட்டல தெரிவித்தார்.
கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில், 200 தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இனங்கண்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்களே, இதில் அதிகளவில் அடங்கியுள்ளனர் என, அவர் மேலும் தெரிவித்தார்.
மினுவாங்கொட பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையிலிருந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியதாகக் கூறப்படும் இந்தத் தொற்றுப் பரவல், நாட்டின் ஏனைய தொழிற்சாலைகளுக்கும் பரவியுள்ளதைக் காண முடிகின்றது. குறிப்பாக, இந்தத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தங்குமிடப் பகுதிகளில் தற்காலிகமாக வசிக்கின்றமையால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரையில், சுமார் 17,000 க்கும் அதிகமான PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, சுகாதார வழிகாட்டல்களை நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. பதற்றமடைவதற்கு எவ்வித தேவைப்பாடும் இல்லை எனவும் மொஹோட்டல மேலும் தெரிவித்தார்.
தொற்றுக்கு உள்ளானவர்களை இனங்காணும் நடவடிக்கைகள், இலங்கையில் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மினுவங்கொட தொழிற்சாலையிலிருந்து ஆரம்பித்த இந்தத் தொற்றுப் பரவல், பெரிய கொத்தணியைக் கொண்டதாக அமைந்துள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தம்மை அடையாளப்படுத்த முன்வந்திராமை போன்ற காரணங்களால், இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சவாலான காரியமாக அமைந்திருந்தது.
எவ்வாறாயினும், பொதுச் சுகாதார அதிகாரிகள், மினுவங்கொட தொழிற்சாலைப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன், தனிமைப்படுத்தல் பகுதிகள் விஸ்தரிக்கப்பட்டிருந்தன இவ்வாறு, மறைந்திருப்பவர்களை வெளியே கொண்டுவருவதற்காகப் பொலிஸாரும், சுகாதாரத் தரப்பினரும் பெருமளவு முயற்சிகளை முன்னெடுத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
மேலும், தனிமைப்படுத்தல் பகுதிகளில் இடவசதியை ஏற்படுத்துவதற்காக, வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை மீள அழைத்துவரும் செயற்பாடும், தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில், சுமார் 50,000 ஊழியர்கள் பணியாற்றுவதுடன் 60 நிறுவனங்கள் உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதுபோன்று, பியகம வலயத்தில் 30,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
கட்டுநாயக்க பகுதியிலும் கடந்த வாரம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், நாட்டின் மாபெரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயம் அமைந்துள்ளது.
எந்தவொரு தொழிற்சாலை ஊழியரிடமிருந்தும் பொது மக்கள் மத்தியில் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளதுடன், இந்த வலயத்தில் காணப்படும் தொழிற்சாலைகளில் உள்ள ஊழியர்கள், பணிக்குச் சமூகமளிக்கும் போது, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைத் தவிர்த்து, அவர்களுக்கு, அவர்களின் நிறுவனங்களால் வழங்கப்படும் விசேட போக்குவரத்துச் சேவைகளை மாத்திரம் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தின் காரணமாகப் பணிக்குச் சமூகமளிப்போரின் எண்ணிக்கை, பெருமளவில் வீழ்ச்சியடைந்து உள்ளதாகவும், சில நிறுவனங்களில் அரைப்பங்குக்கும் அதிகமான ஊழியர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் தொழிற்றுறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களைப் பணிக்கு அழைத்துவர முடியாது. ஆனாலும், ஊரடங்கு அமுலில் இல்லாத பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள், பணிக்குச் சமூகமளிக்கலாம். ஊரடங்குச் சட்டம் காணப்படும் பகுதிகளுக்குள் பிரவேசிக்கவும் வெளியேறவும், தமது அலுவலக அடையாள அட்டையைக் காண்பிக்க முடியும் எனவும் பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago