Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
S.Sekar / 2024 நவம்பர் 04 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
அண்மைய வாரங்களில் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, பிரதான ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்ட விடயங்களில் பணம் அச்சிடப்படுவதைப் பற்றியதாகும். இதைப் பற்றி தமிழ்மிரர் வாணிபம் பகுதியில் ஏற்கனவே நாம் பத்தி ஒன்றை எழுதியிருந்த நிலையில், மேலும் ஆழமாக இந்த விடயத்தைப் பற்றிய விளக்கங்களை பெற்றுக் கொடுப்பது உகந்தது என கருதுகிறோம். புதிய அரசாங்கத்தை சவால்களுக்கு உட்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வண்ணமுள்ளன. அரசியல் ரீதியில் இந்த விடயத்தில் கவனம் செலுத்தாமல், பொருளாதார ரீதியில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும். கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டிலும் இந்த விடயம் பற்றி பேசப்பட்டிருந்தது. இந்த விடயத்துக்கு ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் மறுப்பு தெரிவித்திருந்ததுடன், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் இந்த பணம் அச்சிடுவது பற்றிய குற்றச்சாட்டை மறுத்திருந்தார். உண்மையில் இந்த பணம் அச்சிடுவது என்பது பொருளாதார மற்றும் தொழினுட்பத்துடன் தொடர்புடைய விடயமாகும். இதனை சாதாரண பொது மக்களுக்கு தெளிவாகும் வகையில் குறிப்பிட வேண்டியது முக்கியமானதாகும்.
சுமார் 100 பில்லியன் ரூபாய் பெறுமதியான பணம் மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டிருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது. இதனால் பணம் அச்சிடப்படுவது என்றால் என்ன என்பதை நாம் தெளிவுபடுத்திக் கொள்வது முக்கியமானதாகும். இலங்கை மத்திய வங்கியினால் புதிதாக கோரிக்கை விடுக்கப்பட்டு, நாணயத்தாள்களை அச்சிட்டுப் பெற்று அவற்றை புழக்கத்தில் விடுவது என்பதாக அது பொருள்படாது. உள்நாட்டு பொருளாதாரத்தில் புதிய நாணயப் பெறுமதியை அறிமுகம் செய்வது என்பதாக அதனை குறிப்பிட முடியும். ஏற்கனவே அச்சிடப்பட்டு மத்திய வங்கியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நாணயத் தாள்களை புதிதாக வெளியிடுவதாக கூட இருக்கலாம்.
அதனால், பணம் அச்சிடப்பட்டு அது மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் பேணப்படும் வரையில் அவை மக்கள் பாவனைக்காக சேர்க்கப்படமாட்டாது. அந்தப் பணத்தை பயன்படுத்தி டொலர் கொள்வனவு செய்யப்பட்டால், அச்சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்துக்கு புதிய நாணயத் தொகை சேர்க்கப்படும். வங்கிகளுக்கும் உத்தியோகபூர்வமாக நாணயத்தை வெளியிடும் அதிகாரத்தை இலங்கை மத்திய வங்கி கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி என்ன தெரிவித்திருந்தது என பார்ப்போம்.
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய குறிக்கோளானது விலை நிலையுறுதியை எய்துவதும் பேணுவதுமாகும். இதன் அர்த்தம் பண வீக்கத்தைக் குறைவாகவும் நிலையாகவும் வைத்திருப்பதாகும். வட்டி வீதங்களையும் பண நிரம்பலையும் மத்திய வங்கியொன்று முகாமைசெய்கின்ற உபாயமொன்றாக விளங்குகின்ற நாணயக் கொள்கையானது விலை நிலையுறுதியினைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மத்திய வங்கியொன்றின் நாணயக் கொள்கையின் முக்கிய சாதனமொன்றாகும். நடைமுறையில் மத்திய வங்கியானது நாணயக் கொள்கையினை செயல்திறன்வாய்ந்த வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு சந்தை அடிப்படையில் அமைந்த கொள்கைச் சாதனங்கள் மீது தங்கியிருப்பதுடன் இதனால் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் இச்செயன்முறையில் பயன்படுத்தப்படும் முதன்மைக் கருவிகளில் ஒன்றாகக் காணப்படுகின்றன.
பொருளாதாரத்தை உறுதியிழக்கச் செய்யக்கூடிய வட்டி வீதங்களின் சடுதியான மாற்றங்களைத் தடுக்கும் நோக்கத்திற்காக திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்குத் திரவத்தன்மையை வழங்குகின்றன. ஆகையினால் குறுகிய கால வட்டி வீதங்களில் விசேடமாக, வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பண வீதங்களில் நிலையுறுதியினைப் பேணுவதற்கு திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் இலங்கை மத்திய வங்கியின் மூலம் கருவியொன்றாக பயன்படுத்தப்படுகின்றன. ஓரிரவு வட்டி வீதங்களில் நிலையுறுதியினை உறுதி செய்வதற்காக திரவத்தன்மையினை முகாமைசெய்வதற்கு இலங்கை மத்திய வங்கி சந்தைத் தொழிற்பாடுகளை நடாத்துகின்றது.
திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் ஒன்றில் தங்காலிக அல்லது நிரந்தர அடிப்படையில் அரசாங்கப் பிணையங்களின் கொள்வனவை அல்லது விற்பனையை ஈடுபடுத்துகின்ற ஏலங்களூடாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆகையினால், திறந்த சந்தைத் தொழிற்பாடுகளானவை வங்கித்தொழில் முறைமையில் திரவத்தன்மை சமமின்கைகளை முகாமைசெய்வதில் உதவுகின்ற பெரும்பாலும் குறுகிய காலத் தொழிற்பாடுகளாகக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக 2024 காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் மூலமான திரவத்தன்மை உட்செலுத்தல்கள் அனேகமாக ஓரிரவு (1 நாள்) அல்லது 7 நாட்களுக்கானவையாகக் காணப்படுகின்றன. வட்டி வீதங்கள் மீது மேல்நோக்கிய அழுத்தத்தை முகாமைசெய்வதன் மூலம் நிதியியல் முறைமையினை நிலைநிறுத்துவதை நோக்காகக் கொண்ட தற்காலிக திரவத்தன்மை வழிமுறைகளாக இத்தொழிற்பாடுகள் பயன்படுத்தப்பட்டதுடன் இதன் மூலம் பொருளாதாரத்தின் சீரான தொழிற்பாடு உறுதிசெய்யப்பட்டது என்பதுடன் வெறுமனே பணம் அச்சிடல் ஆகப் பொருள்கொள்ளப்பட முடியாது.
மேலும், உலகம் முழுவதுமுள்ள மத்திய வங்கிகள் திரவத்தன்மை நிலைமைகளை முகாமைசெய்வதற்கு இதனையொத்த தொழிற்பாடுகளையே கிரமமாக நடத்துகின்றன. நாணயக் கொள்கையை நடாத்துவதன் கீழ் திரவத் தன்மையை முகாமை செய்வதில் இவை மத்திய வங்கிகளால் மேற்கொள்ளப்படுகின்ற வழமையான மற்றும் நியமமான நடவடிக்கைகளாகும்.
பொருளாதார செயற்பாடுகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு போதியளவில் 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் இலங்கையின் கையிருப்பு பணத்தொகை 147 பில்லியனினால் மாத்திரம் அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் இந்தத் தொகை அதிகரிப்பில், பிரதானமாக மத்திய வங்கியினால் அந்நியச் செலாவணியை கொள்வனவு செய்வதனூடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மத்திய வங்கியின் வசம் காணப்படும் அரச பிணைகள் அதிகரிப்பும் இக்காாலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை மத்திய வங்கியினால், பொருளாதாரத்துக்கு பணத்தை விநியோகிக்கும் செயற்பாடுகளில் பிரதானமாக, மத்திய வங்கியினால் அரச பிணைமுறிகள் அடிப்படை சந்தையினூடாக கொள்வனவு செய்திருந்ததனூடாக, பொருளாதாரத்துக்கு பணத்தை விநியோகிப்பது மேற்கொள்ளப்பட்டது. 2023 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் இல. 16 எனும் இலங்கை மத்திய வங்கியின் சட்டத்தின் பிரகாரம், அரசாங்கத்தின் வரவு செலவை ஈடு செய்வதற்காக அரச பிணைமுறிகளை கொள்வனவு செய்வதனூடாக ஏற்படும் பணம் அச்சிடும் செயற்பாடு முழுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, அரசாங்கத்துக்கு கடன் பெற்றுக் கொடுப்பதற்காக மத்திய வங்கியினால் பணம் அச்சிடுவது முற்றிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இந்த 2023 இல. 16 இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் பிரகாரம், அவசர நிலைகளில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மத்திய வங்கிக்கு புதிதாக பணம் வெளியிட்டு அரசாங்கத்துக்கு கடனை பெற்றுக்கொடுப்பதற்கு சாத்தியம் உள்ளது. ஆனாலும், அதற்காக பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் திறந்த சந்தைச் செயற்பாடுகளுக்காக பணம் அச்சிடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக வெளியிடப்பட்டுள்ளது. 100 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டு இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இது முற்றிலும் அடிப்படையற்றது என இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளது.
திறைசேரி உண்டியல்களை ஏலமிட்டு அரசாங்கத்தினால் பெருமளவு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது எனும் குற்றச்சாட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இது வாராந்தம் வழமையாக நடைபெறும் செயற்பாடாகும். முன்னர் வெளியிடப்பட்ட திறைசேரி உண்டியல்கள் முதிர்வடைந்ததும், அவற்றை மீளச் செலுத்துவது மேற்கொள்ளப்படுகின்றது. இதனால், அரசாங்கத்தினால் இவை புதிதாக பெற்றுக் கொண்ட கடனாக குறிப்பிடப்பட முடியாது. அரசாங்கத்தினால் புதிதாக தேசிய கடன் எந்தளவு பெறப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு, தேசிய கடன் தொகையின் எந்தளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago