Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அந்நியச் செலாவணி நெருக்கடியும் தாக்கம்
உடனடியாக தீர்வு வேண்டும் – தனியார் துறை இறக்குமதியாளர்கள் அரசிடம் வேண்டுகோள்
ச.சேகர்
அந்நியச் செலாவணி நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகம் போன்ற பல்வேறு காரணிகளால் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக தட்டுப்பாடு ஏற்படும் என தனியார் துறை எதிர்வுகூறியுள்ளது.
சீனி, பால் மா, டின் மீன், பருப்பு மற்றும் கோதுமை மா போன்றன தற்போது ஒரு மாதத்துக்கு போதுமான அளவு மாத்திரமே நாட்டில் கையிருப்பிலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து பேசப்பட்டிருந்தது. இதில் தற்போது கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் இதர உயர்நிலை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு மெய்நிகர் கட்டமைப்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அளவுக்கதிகமான தலையீடு, டொலர் பற்றாக்குறை, ரூபாய் பெறுமதி இறக்கம் மற்றும் போது போதியளவு கையிருப்பு இன்மை போன்றன சந்தையில் இந்தப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.
விலைக்கட்டுப்பாடு விதிக்கின்றமை, இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கின்றமை மற்றும் வளங்களின் ஒதுக்கீடு போன்ற அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக சந்தையில் பெரும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
அவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் என்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான சந்திப்புகளின் போது இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியிருந்த போதிலும், தமது கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதியளவு கவனம் செலுத்துவதில்லை என தெரிவித்தார்.
மே மாதம் முதல் அரசாங்கம் சீனி இறக்குமதியை இடைநிறுத்தியுள்ள நிலையில், நுகர்வுக்கு அவசியமான புதிய இறக்குமதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில், சீனி, அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
கடந்த மாதம் 2500 மெட்ரிக் டொன் சீனியை மாதாந்த அடிப்படையில் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது. இந்தியாவிலிருந்து சீனி இறக்குமதி செய்யப்படும் என்பதுடன், அவுஸ்திரேலியாவிலிருந்து பருப்பு இறக்குமதி செய்யப்படும். இதற்காக கூட்டுறவு அபிவிருத்தி நிதியத்தின் ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படும்.
ஜுன் மாதத்திலும் அரசாங்கத்தினால் 100,000 டொன் சம்பா அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்திருந்தது. கடந்த வாரத்திலும், 6000 டொன் அரிசியை பாகிஸ்தான் திறந்த வர்த்தக உடன்படிக்கையின் பிரகாரம் உடனடியாக இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை போதியளவு கையிருப்பில் வைத்திருப்பது மற்றும் உள்நாட்டு சந்தையில் விலையை உறுதியாகப் பேணுவது போன்றவற்றுக்காக இறக்குமதிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.
மாதாந்தம் 50 டொன் சீனி தேவைப்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்ததுடன், சுமார் 25 டொன் சீனி தற்போது கொழும்பு துறைமுகத்தில் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடந்த ஆறு மாத காலப்பகுதியில், நாட்டில் சுமார் 600,000 டொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இது ஒரு ஆண்டு காலப்பகுதிக்கு நுகர்வுக்கு போதுமானதாகும் எனவும் தெரிவித்தனர். இதன் பெறுபேறாக, தற்போது நாட்டில் 120,000 டொன் சீனி கையிருப்பிலுள்ளதாகவும் குறிப்பிட்டனர். இலங்கை வருடமொன்றில் சராசரியாக 350,000 – 400,000 டொன் சீனியை நுகர்கின்றது.
சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுப்பதில்லை என்பதைப் போல, இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளித்தாலும், வங்கிகள் அதற்கான ஆதரவை வழங்குவதில்லை, இதற்கு காரணம் போதியளவு டொலர்கள் கையிருப்பில் இல்லாமை என இறக்குமதியாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
பரிமாற்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு எமக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 10 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கட்டணப் பட்டியல்கள் செலுத்தப்பட வேண்டியுள்ளன. சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தி, விநியோகம் மற்றும் கேள்விக்கேற்ப விலை தீர்மானிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். துரிதமாக செயலாற்ற தவறுகின்றமையால், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே குறிப்பிடுகையில், நுகர்வோர் அதிகார அமைப்பினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை என்பது வினைத்திறன் அற்றதாக அமைந்துள்ளது. விற்பனையாளர்கள் பொருட்களை தமக்கு வேண்டியவாறு உயர்ந்தளவில் விற்பனை செய்கின்றனர். அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விலை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களை கவனத்தில் கொள்வதில்லை என்றார்.
சீனி ஒரு கிலோகிராம் 210 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது. சம்பா அரிசி 230 முதல் 240 ரூபாய் வரையும், பருப்பு 250 ரூபாயாகவும் விற்பனையாகின்றது. மரக்கறி விலைகளும் அதிகரித்துள்ளன. பொருளாதார மத்திய நிலையங்களில் விற்பனையாகும் விலையை விட சுமார் பத்து மடங்கு அதிகமாக மரக்கறிகளை விற்பனை செய்கின்றனர். அரசாங்கம் அதியுயர் சில்லறை விலையை நிர்யணித்துள்ள போதிலும், அவற்றை வினைத்திறன் வாய்ந்த வகையில் ஒழுங்குபடுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றார்.
அடுத்த சில வாரங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என விதானகே குறிப்பிட்டார். நுகர்வோர் உரிமையை பாதுகாக்க வேண்டிய பிரதான அமைப்பாக அமைந்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை, தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளது. இறக்குமதியாளர்களிடமிருந்து மொத்த வியாபாரிகளுக்கு அளவுக்கதிகமான இலாபத்துடன் பொருட்களை விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது. இவர்கள் நுகர்வோருக்கு உயர் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் கட்டுப்பாட்டு விலையை விட உயர்வான விலைக்கே நுகர்வோர்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்கின்றனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
44 minute ago
58 minute ago