2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

Star Garments குரூப் Togo க்கு விஸ்தரிப்பு

Freelancer   / 2024 ஜூலை 15 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

Star Garments குரூப், Togo இல் பாரியளவிலான ஆடை ஏற்றுமதி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவி, அதனூடாக மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கான ஆடை மற்றும் ஆடை உற்பத்தி ஆற்றலை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக உலக வங்கி குரூப்பின் அங்கத்துவ அமைப்பான சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்திடமிருந்து (IFC) 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அறித்துள்ளது.

இந்தத் திட்டத்தினூடாக, இலங்கைக்கு அப்பால் நிறுவப்படும் Star இன் முதலாவது உற்பத்தி தொழிற்சாலையாக இது அமைந்திருக்கும். Togo இல் ஆயிரக் கணக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்தத் திட்டம் எதிர்பார்ப்பதுடன், அதனூடாக பல்தேசிய விநியோகத்தராக உலக வரைபடத்தில் Star முக்கிய இடம் ஏற்படுத்தப்படும். Togo இல் காணப்படும் முதலாவது பாரியளவிலான ஆடை உற்பத்தி வசதியாக Star இன் இந்தத் தொழிற்சாலை அமைந்திருக்கும்.

Togo இன் Lomé நகரை அண்மித்து காணப்படும் Plateforme Industrielle d'Adétikopé தொழிற்பேட்டை பகுதியில் பசுமைவெளி ஆடைத் தொழிற்சாலையை Star நிறுவும். அதனூடாக 4,520 நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். குறிப்பாக பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். அதனூடாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி சார் பெறுமதி சேர்ப்பில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை பெற்றுக் கொடுக்கும். Star இன் தொழிற்சாலை, Lomé இன் உயர் பெறுமதி வாய்ந்த தொழிற்துறை தொடர்களில் அங்கம் பெறும்.

IFC இனால் வழங்கப்படவுள்ள 15 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடியாகவும், எஞ்சிய 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள், சர்வதேச அபிவிருத்தி சம்மேளன தனியார் துறை இடைவெளி இணைந்த நிதி வசதியின் ஆதரவினூடாகவும் பெற்றுக் கொடுக்கப்படும்.

இலங்கையின் ஆடைத் தொழிற்துறையில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அனுபவத்துடன் Star ஜாம்பவானாகத் திகழ்கின்றது. 9000 க்கும் அதிகமான ஊழியர்களை கொண்டு இயங்குகின்றது. நிலைபேறாண்மையில் சம்பியனாக பரந்தளவில் Star அறியப்படுவதுடன், அதன் எட்டு தொழிற்சாலைகள் LEED-சான்றிதழைப் பெற்றுள்ளதுடன், உலகின் முதலாவது passive house தொழிற்சாலையையும் கொண்டுள்ளது. Star இன் Togo வில் நிறுவப்படவுள்ள தொழிற்சாலையும் LEED நியமங்களின் பிரகாரம் அமைக்கப்படும். ஆடைத் தொழிற்துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் சகல செயன்முறைகளிலும் காபன் நடுநிலைக்கான சான்றிதழைப் பெற்ற ஒரே குழும ஆடை உற்பத்தி நிறுவனமாகவும் Star குரூப் திகழ்கின்றது.

Star Garments குரூப் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சுகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது உற்பத்தி பகுதியை தொடர்ச்சியாக பன்முகப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவதுடன், Togo இல் நிறுவப்படவுள்ள எமது புதிய தொழிற்சாலை, எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு செலவு போட்டிகரத்தன்மை வாய்ந்த மாற்றுத் தெரிவாக அமைந்திருக்கும். உலகத்தரம் வாய்ந்த ஆடை உற்பத்தியை மேற்கு ஆபிரிக்க பிராந்தியத்துக்கு கொண்டுவந்து, சர்வதேச ரீதியில் எமது வளர்ச்சிக்கு மேலும் பக்கபலமாக அமைந்திருக்கும்.” என்றார்.

மேற்கு ஆபிரிக்காவின் ஆடை மற்றும் ஆடைத் தொழிற்துறை வளர்ச்சிக்கான பெருமளவு வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியத்தில் பெருமளவு இளம் திறமைசாலிகள் காணப்படுகின்றனர். இந்தத் துறைக்கு உகந்த வகையில் அண்மைக் காலங்களில் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, துறைமுகங்கள் நிர்மாணம் மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் ஸ்தாபிப்பு போன்றவற்றை குறிப்பிடலாம். மேற்கு ஆபிரிக்காவில் ஒன்றிணைக்கப்பட்ட பிராந்திய ஆடை பெறுமதி சங்கிலியை கட்டியெழுப்புவது மற்றும் உற்பத்தி ஆற்றல்களை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தி மேற்கு ஆபிரிக்காவில் IFC இனால் முன்னெடுக்கப்பட்ட Cotton-to-textiles Value Chain Study இன் பெறுபேறாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. 2024 ஜுன் மாதமளவில், Togo இல் 131 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடுகளை IFC கொண்டுள்ளதுடன், அவை விவசாயம், போக்குவரத்து, சரக்குக் கையாளல், நிதி, வலு, டிஜிட்டல், வீடமைப்பு முற்றும் சுகாதாரம் போன்றவற்றை அணுகல் போன்றவற்றில் முதலிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X