2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

SVAT ரத்தாவதன் மத்தியில் பணமில்லா மாற்று முறையின் அவசியத்தை SLAEA தலைவர் வலியுறுத்து

Freelancer   / 2023 டிசெம்பர் 25 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (SLAEA) தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள இந்திக்க லியனஹேவகே, எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியை (SVAT) ரத்துச் செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவினால் சவால்கள் நிறைந்த சூழல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆடைத் தொழிலில் நிதி பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கான பாதுகாப்பான மற்றும் நவீன முறையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, பணமில்லா மாற்று முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். SLAEA இன் 41வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் லியனஹேவகே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் 2024ஆம் ஆண்டுக்கான முழு செயற்குழுவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. பணத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “புதிய பணமில்லா முறையை அமல்படுத்துவதற்கு அரசுடன் ஒத்துழைக்க ஆடைத் துறை தயாராக உள்ளது. SVATஐ அகற்றுவதை 2025 வரை ஒத்திவைக்கும் முடிவைப் பாராட்டும் அதே வேளையில், வலுவான மற்றும் வெளிப்படையான பணமில்லா வரி திரும்பப்பெறுதல் அமைப்பு அவசியம். மேலும், தொழில்துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் நெறிமுறை வணிகக் கொள்கைகளுக்கு ஊழலற்ற நிதிச் சூழல் மிகவும் முக்கியமானது.” என தெரிவித்தார்.

இதேவேளை, தொழிற்துறையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்த தலைவர், இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் 85% க்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட இலங்கையின் பிரதான சந்தைகளில் கோரல்கள் (Orders) வீழ்ச்சியடைந்துள்ளமையால் ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் மூலோபாய கூட்டாண்மைகளை நிறுவியது.

“இலங்கையில் இருந்து பெறப்படும் 35 மில்லியன் டொலர்களை கருத்தில் கொண்டு, வருடாந்தம் 26 பில்லியன் டொலர் பெறுமதியான ஆடைகளை இறக்குமதி செய்யும் ஜப்பானுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது. ஜப்பானிய சந்தையில் எங்களது இருப்பை விரிவுபடுத்த ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவுக்கான ஆடைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக, லியனஹேவகே, இந்தியாவிற்கான இலங்கையின் ஆடை ஒதுக்கீடு தற்போதுள்ள ISFTA இன் கீழ் வருடத்திற்கு 8 மில்லியன் துண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். இந்தியாவில் இருந்து ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான மூலப்பொருட்களை இலங்கை இறக்குமதி செய்தாலும், 50 மில்லியன் டொலர் பெறுமதியான ஜவுளி மற்றும் ஆடைகள் மட்டுமே இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என தொழில் துறையினர் நம்புகின்றனர்.

41வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜப்பான் தூதரகத்தின் பிரதித் தலைவர் Katsuki Kotaro, கட்டளைகள் (Orders) வீழ்ச்சியடைந்த போதிலும், பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் இலங்கையின் ஆடைத் துறையின் மீள் நிலைத்தன்மையைப் பாராட்டினார்.

ஆடை சந்தையை விரிவுபடுத்துவது குறித்து இலங்கை மேலும் ஆராய வேண்டும். GSP+ நிவாரணம் நிரந்தரமானது அல்ல என்பதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். அத்துடன், நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் சந்தை வாய்ப்புக்களை வலுப்படுத்துவது இலங்கைக்கு முக்கியமானதாகும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களே அதற்கு சிறந்த வழி என்று நான் நம்புகிறேன்." என அவர் வலியுறுத்தினார். ஜப்பானிய சந்தைக்குள் நுழைவதற்கான நல்ல வாய்ப்பை வழங்கும் RCEP உடன் இணைவதற்கான இலங்கையின் விருப்பத்தை அவர் வரவேற்றார்.

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 70% க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஆடை ஏற்றுமதியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான சங்கமாகும்.

SLAEA பல்வேறு சட்டப்பூர்வ மற்றும் சட்டப்பூர்வமற்ற சபைகளின் மற்றும் சங்கங்களின் செயலில் உறுப்பினராக உள்ளதுடன் ஆடைத் தொழிலின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் அரசாங்க கொள்கை முடிவுகளை செல்வாக்கு செலுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .