2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

71% வாக்குறுதிகளின் நிலை இதுவரை தெரியவில்லை : வெரிட்டே ரிசர்ச்

Janu   / 2023 ஜூலை 27 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின் ரூபா 46.8 பில்லியன் ஒதுக்கீட்டில் 71 சதவீதமான அதிக மதிப்புள்ள செலவினத் திட்டங்களின் செயற்பாட்டு நிலை இதுவரை தெரியவில்லை என்பதை வெரிட்டே ரிசர்ச் வெளிப்படுத்துகிறது.

2017 ஆம் ஆண்டு  முதல் வரவுசெலவுத் திட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை வெரிட்டே ரிசர்ச் கண்காணித்து வருகின்றது. 2022 இடைக்கால வரவுசெலவுத் திட்டமானது வெளியிடப்படாத தகவல்களுடன் கூடிய முன்மொழிவுகளின் அதிகபட்ச சதவீதத்தைக் கொண்டுள்ளது. சராசரியாக, 2017 முதல் 2021 க்கு இடையில், 38 சதவீதமான செலவின முன்மொழிவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு அவசியமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

2022 இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின் பெரும்பாலான முன்மொழிவுகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் செய்யப்பட்ட கோரிக்கைகளுக்குக் கூட, அரச நிறுவனங்கள் எந்தத் தகவலையும் வழங்கவில்லை. இது 2017 முதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

2022 இடைக்கால வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு, வரவு செலவுத் திட்ட உரையில் சமர்ப்பிக்கப்பட்ட 24 செலவின முன்மொழிவுகளைக் கண்காணித்தது, இதற்கான மொத்த ஒதுக்கீடு ரூபா 50.5 பில்லியன் ஆகும். 7 முன்மொழிவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு பெறப்பட்ட தகவல்கள் போதுமானதாக இருந்ததுடன், 2022 டிசம்பர் 31ம் திகதிக்குள் ஒரு முன்மொழிவு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தொடர்புடைய மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

இவ் ஆய்வு முடிவுகள் வெரிட்டே ரிசர்ச்சின் publicfinance.lk தளத்தின் கீழ் அமைந்துள்ள வரவுசெலவுத் திட்ட வாக்குறுதிகள் எனும் டாஷ்போர்டில் வெளியிடப்பட்டுள்ளன.

முன்மொழிவுகளை செயல்படுத்துவதற்கு யார் பொறுப்பு என்பது பற்றிய குழப்பம்தான் முன்னேற்றம் மோசமாக வெளிப்படுவதற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய காரணி என்பதை பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் வெளிப்படுத்துகிறன. நிதி அமைச்சின் தேசிய வரவு செலவுத் திணைக்களம் (NBD) வரவு செலவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பாக இருக்கின்ற போதிலும், முன்மொழிவுகளை செயல்படுத்துவதற்கு பொறுப்பான முகவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. உதாரணமாக, முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கு பொறுப்பானவர்கள் என தேசிய வரவு செலவுத் திணைக்களத்தால் (NBD) அடையாளம் காணப்பட்ட முகவர்கள், கண்காணிக்கப்பட்ட 24 முன்மொழிவுகளில் 17ஐ செயல்படுத்துவதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்தனர்.

இது இரண்டு சாத்தியக்கூறுகளில் ஒன்றைக் குறிக்கிறது: 1) பொது அரச நிதி மூலங்களை மதிப்பீடு செய்வதற்கும் ஒதுக்கீடு செய்வதற்கும் பொறுப்பான தேசிய வரவு செலவுத் திணைக்களத்துக்கு (NBD), இம் முன்மொழிவுகளை செயற்படுத்தும் முகவர் யார் என்று தெரியவில்லை, 2) இம் முன்மொழிவுகளை செயல்படுத்துவதற்கு தாங்கள் தான் பொறுப்பு என்று குறித்த முகவர்கள் அறிந்திருக்கவில்லை. பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் குறித்து இவ் இரண்டு சாத்தியக்கூறுகளும் தீவிரமான கவலைகளை எழுப்புகின்றன.

2022 இடைக்கால வரவு செலவுத் திட்டம் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் எப்போதும் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்த ஒரு முக்கியமான கட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரப் பாதையை மாற்றுவதற்குத் தேவையான அடித்தளத்தை அமைப்பதாக உறுதியளித்து, நம்பிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இது முன்வைக்கப்பட்டது.

நெருக்கடிக்கு வழிவகுத்த அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணாமல், இலங்கை தனது பொருளாதாரப் பாதையில் நிலையான மாற்றத்தை யதார்த்தமாக எதிர்பார்க்க முடியுமா என்ற சந்தேகத்தை இவ்வாய்வு முடிவுகள் எழுப்புகின்றன; பொது அரச நிதியை அரசாங்கம் எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமையே இதற்குக் காரணம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கையின் உறுதிமொழிகள், ஊழலின் அபாயத்தைக் குறைப்பதற்கும் நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் நிதி வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. அரசாங்கம் பொதுப் நிதியை எவ்வாறு செலவிடுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது இவ் இலக்குகளை அடைவதில் ஒரு முக்கியமான கட்டமாகும்.

கண்காணிக்கப்படும் முன்மொழிவுகள், பொறுப்பான முகவர்கள் மற்றும் ஏனைய ஆய்வு முடிவுகள் பற்றிய தகவல்களுக்கு, https://dashboards.publicfinance.lk/budget-promises/ ஐப் பார்வையிடவும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X