2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

விடாமுயற்சியுடன் விரும்பியதைச் செய்யுங்கள் ‘வெற்றி நிச்சயம்’

ச. சந்திரசேகர்   / 2020 ஜூலை 21 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் குழுமக் கம்பனிகள் வரலாற்றில், முதன் முறையாகத் தமிழ் பேசும் பெண் நிறைவேற்று அதிகாரியாக, கஸ்தூரி செல்லராஜா வில்சன் நியமிக்கப்பட்டு உள்ளார். இலங்கையின் பொதுப்பட்டியலிடப்பட்ட வியாபாரக் குழுமங்களின் வரலாற்றை மாற்றி எழுதிய இந்த நியமனம், குழுமக் கம்பனியில் நிறைவேற்று அதிகாரி எனும் பொறுப்பில் இதுவரை காலமும் நிலவிய வழமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாற்றம் என்பதே மாறாதது என்பதற்கு மற்றுமொரு சான்றாக, குழுமக் கம்பனியின் நிறைவேற்று அதிகாரிப் பொறுப்பு என்பது, ஆண்களுக்குரியதாகவே இதுவரை காலமும் பார்க்கப்பட்டது. ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் இந்தப் பொறுப்பை இவர் ஏற்கவுள்ளதுடன், அதற்கு முன்னோடியாக, ஜூலை 1ஆம் திகதி முதல் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரியாகச் செயலாற்றி வருகின்றார்.

கஸ்தூரி செல்லராஜா வில்சன், தனது வாழ்க்கைப் பயணம், அனுபவம், திட்டங்கள், எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் அறிவுரை எனப் பல விடயங்களை, தமிழ்மிரர் வாணிபப் பகுதியுடன் நேர்காணலின் போது பகர்ந்துகொண்டார். அந்த நேர்காணலின் விவரம் கீழே,

கே: இலங்கையின் நிறுவனக் குழுமமொன்றின் முதல் பெண் பிரதம நிறைவேற்று அதிகாரியாக எவ்வாறு நீங்கள் உணர்கின்றீர்கள்? குறிப்பாக, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் என முக்கிய அரசியல் பிரமுகர்கள் அடங்கலாக, பலர் உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர், உங்களுக்கு இது எதை உணர்த்துகின்றது? 

உண்மையில், முதல் பெண் நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை என்பது, எவ்வித மாற்றத்தையும் என்னுள் உணர்த்தவில்லை. கடந்த 18 வருடங்களாக, நான் ஹேமாஸ் நிறுவனத்தில் பணியாற்றுகின்றேன். நாட்டின் சனத்தொகையில் 52 சதவீதமானவர்கள் பெண்கள், எனவே, அவர்களையும் நிர்வாகக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளும் ஒரு கலாசார முறை தோற்றம் பெறுவது வரவேற்கத்தக்கது. எனது நியமனத்துக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றி.

கே: உங்கள் தொழில் வாழ்க்கையின் ஆரம்பம் பற்றிக் குறிப்பிடலாமா, அதாவது தொழிலில் பிரவேசித்த முதல் நாள் அனுபவம், இன்றைய நிலைக்கு உயர்வடைவீர்கள் என்று, அன்று நீங்கள் சற்றேனும் சிந்தித்தீர்களா? 

எனது தொழில் வாழ்க்கையை நான் ஒரு கணக்கு மீளாய்வு நிறுவனத்தில் ஆரம்பித்தேன். உண்மையில் நான், நீண்டகால இலட்சியம் என்று எதனையும் கொண்டிருக்கவில்லை. நான் ஏதேனும் முயற்சியில் ஈடுபட்டால், அதில் வெற்றியீட்ட வேண்டும் என்பது எனது குறிக்கோளாக அமைந்திருக்கும். அந்த விடாமுயற்சியுடனான பயணமே, இன்றைய நிலைக்கு உயர வித்திட்டது.  

கே: ஹேமாஸ் நிறுவனத்துடன் நீங்கள் இணைந்துகொண்டது, நிறுவனத்தில் நீங்கள் பயின்ற விடயங்கள், தொடர்ந்து நீங்கள் தொழிலில் நிலைத்திருப்பதற்கு ஏதேனும் விசேட காரணிகள் உள்ளனவா? 

ஹேமாஸ் நிறுவனத்தில் நான், பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் இணைந்துகொண்டேன். இங்கு எனக்கு பல விடயங்களைப் பயில முடிந்தது. இதற்கு முன்னதாக, நான் மூன்று நிறுவனங்களில் பணியாற்றியிருந்தேன். ஆனாலும், தொழில் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக ஹேமாஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் காலப்பகுதியைக் குறிப்பிடலாம். என்னைப் பொறுத்தமட்டில், நான் விரும்பும் செயற்பாட்டை மேற்கொள்ள முடிகின்றது. விடாமுயற்சி எனது நிலைத்திருப்புக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது.

கே: தொழில் வாழ்க்கையில், இதுவரை காலத்திலும் நீங்கள் சாதித்தவை என எந்த விடயத்தை அல்லது விடயங்களைக் கருதுகின்றீர்கள்? அதற்கு உங்களுக்குப் பக்கபலமாக அமைந்திருந்த நபர்கள், விடயங்கள், காரணிகள் என எதையும் நினைவுகூர விரும்புகின்றீர்களா?

இன்றைய நிலைக்கு உயர்வடைவதில் எனது பெற்றோர்கள் எனக்குப் பெரிதும் பக்கபலமாக அமைந்திருந்தனர். அதேபோன்று, தொழிலிலும் விளையாட்டுத் துறையிலும் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக, அதில் எய்திய வெற்றிகளுக்கு நண்பர்களிடமிருந்தும் பெருமளவு பாராட்டுதல்களும் ஊக்குவிப்புகளும் குவிந்திருந்தன. எனது சுயமுயற்சியுடன், இவர்களின் பக்கபலமும் என்னை முன்நோக்கி நகர்த்தப் பெரும் உந்து சக்தியாக அமைந்திருந்தன.

கே: உங்கள் பிரத்தியேக வாழ்க்கையில், நீங்கள் சவால்கள் நிறைந்த காலப்பகுதிகளைக் கடந்து வந்துள்ளீர்கள் எனக் கேள்வியுற்றேன். தமிழ் பேசும் பெண்ணாக, ஒற்றைத் தாயாக நீங்கள் இன்றைய நிலைக்கு உயர உங்களை ஊக்குவித்த விடயங்கள் யாவை? 

எனது வாழ்க்கை முறை, தமிழ் பேசும் கலாசாரத்தைப் பின்பற்றியதாக அமைந்திருந்த போதிலும், பெற்றோர் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர். குடும்பத்தில் நான் கடைசிப்பிள்ளை. என்னைப் பெற்றோர், ஆண் பிள்ளையைப் போன்று பார்த்தனர். சிறு வயதில், என்னை அச்சமின்றி ஒடுக்கி வைக்காமல், என்னைச் சுதந்திரமாகச் செயலாற்ற அனுமதித்தனர். 

தமிழ்ப் பேசும் எம்மக்களின் கலாசாரம் என்பது, பெண்களின் முன்னேற்றத்துக்கு ஒரு தடங்கலாக இருந்த போதிலும், சமூகத்திலிருந்தும் உற்றார்களிடமிருந்தும் என்னை விட எனது பெற்றோர் அதிகளவு சங்கடகரமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். ஆனாலும், அவர்களின் ஊக்குவிப்பு, பக்கபலம் இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளது. ஒரு தமிழ்பேசும் பெண் என்பதைவிட, நான் உண்மையில் ஓர் இலங்கைப் பெண் என்பதை மனதில் கொண்டே எனது செயற்பாடுகளைத் தொடர்கின்றேன்.

கே: நாட்டில் மூன்று தசாப்த காலமாக யுத்தம் நிலவியது, அதன் வடுக்கள் மற்றும் தாக்கங்கள் இன்றும் எம்மால் தமிழ் பேசும் சமூகத்தில் உணரக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, கணவனை இழந்த பல பெண்கள், ஒற்றைத் தாயாகத் தனித்துச் சமூகத்தில் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நீங்கள் ஒரு பெண்ணாகத் தெரிவிக்கும் அறிவுரை யாது?

நாட்டில் யுத்தம் நிலவியமை என்பது, ஒரு கவலைக்குரிய விடயம். தமிழ் பேசும் சமூகங்களில் மாத்திரமன்றி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் காணமுடிகின்றது. இவர்களுக்கு எனது பங்களிப்புடன், எம் நிறுவனத்தால் தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதற்கான பல அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்கள் போன்றன வழங்கப்படுகின்றன. 

அதுபோன்று, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அங்கவீனமுற்றவர்கள் எனப் பலரும் எமது சமூகத்தில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், எமது பங்களிப்புடன் அயடி (Ayati) நம்பிக்கை நிதியத்தினூடாக நாம் உதவிகளை வழங்கி வருகின்றோம். 

பாதிக்கப்பட்டவர்கள் மீண்டெழ முயற்சிக்கின்றனர். இலங்கையர்கள் எனும் வகையில், நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும், கைகொடுத்து உதவும் பண்பைக் கொண்டவர்கள். இந்தப் பண்பு உண்மையில் உன்னதமானது. 

கே: புதிய பொறுப்பில் நீங்கள் நிறைவேற்ற அல்லது முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள விசேட திட்டங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா? உலகளாவிய ரீதியில் கொவிட்-19 எனும் தொற்றுப் பரவல் காரணமாக, மனித குலம் ஒரு சவாலான நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பித்துள்ளது. இலங்கையிலும் இதன் தாக்கத்தை உணர முடிகின்றது. உங்கள் நிறுவனத்தின் வியாபாரச் செயற்பாடுகளுக்கு இதன் பாதிப்பு எவ்வாறு அமைந்துள்ளது? அதைச் சீர்செய்ய அல்லது மீட்டெடுக்க நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளீர்கள்?

கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, எமது வியாபாரச் செயற்பாடுகள் மாத்திரமன்றி, நாட்டின் ஒட்டுமொத்த வியாபாரங்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் பின்னடைவு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தற்போதைய நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நிலை பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், எமது குழுமத்தின் மூன்று வியாபாரப் பிரிவுகள் சிறப்பாகச் செயலாற்றியிருந்தன. 

குறிப்பாக, காகிதாதிகள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனமான அட்லஸ், சுகாதாரத் துறைக்கு ரோபோ இயந்திரமொன்றை வடிவமைப்புச் செய்து பங்களிப்புச் செய்திருந்தது. ஹோட்டல் துறையைச் சேர்ந்த நீர்கொழும்பின் க்ளப் டொல்பின் ஹோட்டலை, தனிமைப்படுத்தும் நிலையமாகப் பயன்படுத்த அனுமதியளித்திருந்தது. 

அதுபோன்று, ஊரடங்குக் காலப்பகுதியில், நாட்டில் மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமலிருப்பதற்காக எமது மருந்துப்பொருள்கள் பிரிவு தொடர்ந்தும் கடுமையாக செயலாற்றியிருந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக நாட்டின் இயக்கநிலைக்கு ஹேமாஸ் குழுமம் தனது பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது.

கே: இன்று பதின்ம வயதிலிருக்கும் ஒரு பெண் பிள்ளைக்கு, பாடசாலைப் பருவத்திலிருக்கும் ஒரு பெண் பிள்ளைக்கு, அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு நீங்கள் எவ்வாறான அறிவுரைகளை வழங்குவீர்கள்? உங்களைப் போல அவர்களும் ஒரு நாள் உயர்ந்த நிலைக்குவர, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றீர்கள்?

முதலில் ஒழுக்கமான நற்பண்புகள் நிறைந்த ஒரு மனிதராக வாழப்பழகுங்கள். புத்தகக் கல்வி மட்டுமே உலகமல்ல. பல்துறைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கனவுகளைக் கொண்டிருங்கள், ஆனாலும், அந்தக் கனவுகளுக்கு உங்களை மட்டுப்படுத்திவிடாதீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள். புதிய விடயங்களை மேற்கொள்ள ஆர்வமாக இருங்கள். விடாமுயற்சியுடன் விரும்பியதைச் செய்யுங்கள்; வெற்றி நிச்சயம். எதிர்பார்ப்புகளைக் கைவிட்டுவிடாதீர்கள். உங்களால் கண்டிப்பாக முன்னேறமுடியும். 

கே: நிறுவனமொன்றின் நிர்வாகச் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நீங்கள் கருதுகின்றீர்கள்? பெண்களின் பலம் மற்றும் பலவீனம் எதுவென உங்களால் குறிப்பிட முடியுமா? தமது பலத்தை மேம்படுத்தி, பலவீனத்தை இல்லாமல் செய்யக்கூடிய ஏதேனும் வழிமுறைகள் என உங்களால் எதனையும் குறிப்பிட முடியுமா?

நாட்டில் 52 சதவீதமானவர்கள் பெண்கள். எனவே, நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாதது. காலம் மாறிய வண்ணமுள்ளது. மேலேத்தேய கலாசாரம் எம்முள் ஊடுருவியுள்ளது. குறிப்பாக, நகர்ப் பகுதிகளில் எம்மால் இதனை அவதானிக்க முடிகின்றது. இன்று பெண்கள் பலர் நிறுவனங்களில் தொழில்களில் ஈடுபடுவதைக் காண முடிகின்றது. 

விடாமுயற்சியுடன் வெற்றியை இலக்காகக் கொண்டுச் செயலாற்றினால், தமது இலக்குகளை எய்தக்கூடியதாக இருக்கும். ஏட்டுக்கல்வியால் மாத்திரம் இந்த நிலைக்கு உயர்ந்துவிட முடியாது. விளையாட்டு போன்ற பல துறைகளில் நாட்டம் காணப்பட வேண்டும். அதனூடாக, எமக்கு முன்னேற்றத்துக்கு வேண்டிய ஆளுமைகளைக் கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

கே: ஹேமாஸ் குழுமம் அல்லது வியாபாரம், கடந்த ஆண்டில் இன ரீதியாக வெறுப்பூட்டும் செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தது. குறிப்பாக, நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஒரு சில விஷமிகளால் குறித்த இனத்தைச் சேர்ந்தவர்களின் வியாபாரங்களைத் தவிர்க்கும்படி சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் பரப்பப்பட்டிருந்தன. இவ்வாறான சூழ்நிலை எதிர்காலத்திலும் எழக்கூடும், குறிப்பாக, உங்களின் நிர்வாகக் காலப்பகுதியில் இது போன்றதொரு நிலை எழுந்தால், அதற்கு முகங்கொடுத்து, உங்கள் நிறுவனத்தின் வியாபார செயற்பாடுகளை பாதுகாப்பதற்கு ஏதேனும் விசேட திட்டங்களைக் கொண்டுள்ளீர்களா?

எமது குழுமத்தில், மொத்தமாக 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், இலங்கையில் வசிக்கும் சகல இனத்தையும் சேர்ந்தவர்கள். எமது நிறுவனம், நீண்ட வரலாற்றைக் கொண்டது. வியாபாரச் செயற்பாடுகளுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளாமல், இன, மத பாகுபாடின்றி பின்தங்கிய பிரதேச மக்களின் முன்னேற்றத்துக்குத் தமது பங்களிப்புகளை வழங்கி வருகின்றது. 

குறிப்பாக, முன்பள்ளிகளை நிறுவி, அவற்றினூடாக எதிர்காலச் சந்ததியினருக்கு அவசியமான ஆரம்பக் கல்வி அறிவைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. இவை, எமது வியாபாரச் செயற்பாடுகளுக்கு அப்பால் நாம் சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையின் அடிப்படையில் அமைந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை. அதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையர் எனும் வகையில் நாம் கடந்த காலங்களில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்திருந்தோம். அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் நாம் எம்மாலான பங்களிப்புகளை வழங்கியிருந்தோம். 

ஒரு சிலர் தமது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்தாலும், நாட்டு மக்களுக்கு எம்மைப் பற்றித் தெரியும். இலங்கையருக்காக, இலங்கை நிறுவனம் எனும் வகையில் ஹேமாஸ் தனது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.

(படங்கள்; குஷான் பதிராஜ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X