2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வர்த்தக நாமத்தின் சக்தி (Power of a Brand)

ச. சந்திரசேகர்   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தக நாமம் என்பது சாதாரணமாக ஒரு நாமத்துக்கு அப்பாற்பட்டது என பொருள்படுகிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொருளுடன் நுகர்வோருக்கு பரிபூரண அனுபவத்தை வழங்கும் ஒன்றாக வர்த்தக நாமம் (Brand) அமைந்துள்ளது.  

உலகளாவிய ரீதியில் நுகர்வோர் மத்தியில் புகழ்பெற்ற, வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் வர்த்தக நாமங்களை நாம் அறிவோம். இவ்வாறு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நாமங்களில் குறிப்பிடுவதாயின் கொகா கோலா, அப்பிள் போன்றவற்றை சிறந்த உதாரணங்களாக குறிப்பிடலாம்.  

இலங்கையை எடுத்துக்கொண்டால், வியாபார உலகில் இவ்வாறு தமக்கென தனி இடத்தை பிடித்துள்ள உள்நாட்டு வர்த்தக நாமங்களில் மொபிடெல், சிபிஎல், அபான்ஸ் போன்ற நாமங்களை சில உதாரணங்களாக குறிப்பிடலாம். இவை மக்களின் மனதில் உறுதியாக இடம்பிடித்துள்ளன. அதற்கு காரணங்களும் உள்ளன.

குறிப்பாக இவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கும் வகையில் அடிக்கடி அவர்களுக்கு காட்சிப்படுத்தப்படுவதுடன், அவர்களின் அன்றாக வாழக்கையுடன் தொடர்புடைய விடயங்களுடன் கைகோர்த்து இயங்குகின்றமையையும் குறிப்பிடலாம்.   

அதுபோன்று சில வர்த்தக நாமங்கள் தமக்கென கொண்டிருக்கும் அடையாளச் சின்னங்கள் காணப்படுகின்றன. இதில் சர்வதேச ரீதியில் வியாபித்துக் காணப்படும் உணவகத் தொடரான மெக்டொனால்ட்ஸை குறிப்பிடலாம். மெக்டொனால்ட்ஸ் தனது சகல விற்பனையகங்களிலும் முன்புற வரவேற்பு பகுதியில் தனது அடையாளத்தை குறிக்கும் ரொனால்ட் எனும் உருவத்தை கொண்டுள்ளது. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் பரவசப்படுத்தும் வகையில் அமர்ந்திருக்கும். பலருக்கு மெக்னொல்ட்ஸ் என்றதும் பேர்கர் என்பதற்கு அடுத்ததாக இந்த ரொனால்ட் எனும் உருவமும் நினைவுக்கு வருகிறது.  

இந்த வர்த்தக நாமத்தின் ஆதிக்கம் வியாபாரகளில் மட்டுமின்றி அரசியலும் ஆதிக்கம் செலுத்துவதையும் எம்மால் சம கால அரசியல் சூழலை கவனத்தில் கொள்ளும் போது அவதானிக்க முடிகிறது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளை எடுத்து நோக்கும் போது இந்த விடயம் தெளிவாக புலனாகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அங்கத்துவத்தை இழக்காமல், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, தனியாக கட்சியொன்றை ஆரம்பித்து அதிலும் அங்கம் வகிக்காமல் அந்தக் கட்சியை நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 45 சதவீத வாக்குகளை பதிவு செய்ய செய்திருந்தமைக்கு மஹிந்த எனும் வர்த்தக நாமத்தின் சக்தி தெளிவாக புலனாகியிருந்தது.  

குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் அதுவும் கிராமிய மட்டத்தில் காணப்படுவோரிடையே மஹிந்த எனும் வர்த்தக நாமம் உறுதியாக காணப்படுவதை இதனூடாக அறிந்து கொள்ள முடிந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது திரைப்படத்தில் குறிப்பிடுவதை போன்று சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பதற்கமைய, மஹிந்த எனும் நாமம் ஒற்றையாக மக்கள் மனதில் ஆழ ஊடுருவியுள்ளது. இதற்கு மஹிந்த கொண்டுள்ள தனக்கென பிரத்தியேகமான அடையாளங்களையும் குறிப்பிடலாம். குறிப்பாக அவர் கழுத்தில் அணியும் சிவப்பு நிற ஆடைத்துண்டு அவரின் பிரத்தியேகமான அடையாளமாகும்.   

தேர்தல் பிரசார மேடைகளில் அவர் தோன்றும் போதும் எப்போதும் அவர் இந்த அடையாளங்கள் குறித்து கவனம் செலுத்தியிருந்தார். தனது ஆளுமையாலும், கம்பீர தோற்றத்தாலும், பதமான சொற்களாலும் ‘மஹிந்த’ எனும் நாமத்தை மக்கள் மத்தியில் ஆழமாக பதித்துள்ளார்.  

ஒரு வர்த்தக நாமம் எப்போதும் உச்சத்தில் இருந்துவிடுவதில்லை, அவை தமது இயக்கத்தில் அவப்பெயர்களை சம்பாதிப்பதும், அவற்றை சீர் செய்ய மீண்டும் பல முயற்சிகளை மேற்கொள்வதும் உலகளாவிய ரீதியில் பல முக்கியமான வர்த்தக நாமங்களுக்கு இடம்பெற்றுள்ளன. உதாரணமாக உலகின் முதல் தரமான வர்த்தக நாமமான கொகா கோலா கூட இந்த சவால்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொண்டிருந்தது. ஆனாலும் இன்னமும் மக்கள் மத்தியில் கொகா கோலா என்றால் அதன் அடையாளம் உடன் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இலங்கையில் மட்டுமின்றி, உலகளாவிய ரீதியில் அதன் நாமத்தை பேணி வருகிறது.  

மஹிந்தவும் இவ்வாறாக 2015ஆம் ஆண்டில் தனது ஜனாதிபதி பதவியை இழந்த போதிலும், தொடர்ந்தும் மக்கள் மத்தியில் தனது நாமத்தை பேணியுள்ளார் என்பது இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் உறுதி செய்துள்ளன. நாட்டில் அரசியல் சூழலையும் நிலைகுலையச் செய்யுமளவுக்கு அவரின் அந்த நாமம் வெளிப்பட்டுள்ளது.   

ஒரு உறுதியான வர்த்தக நாமத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதற்கு குறித்த வர்த்தக நாமங்கள் பெருமளவு அவதானத்துடன் இயங்குகின்றன. குறிப்பாக தனது வர்த்தக நாமத்துடன் தொடர்புடைய வர்த்தக நாமத்தூதுவர்களை தெரிவு செய்யும் போது கூட மிகவும் அவதானத்துடன் செயலாற்றுகிறது. 

அண்மையில் இவ்வாறு உள்நாட்டு வர்த்தக நாமமொன்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு சவாலை எதிர்கொண்டிருந்தது. இலங்கையின் கிரிக்கெட் வீரர் அன்ஜெலோ மெத்தியுஸ் அண்மைக் காலமாக தொடர்ந்து உபாதைகள் காரணமாக கிரிக்கெட் விளையாட்டில் சோபிக்க தவறியிருந்தார்.

தற்போதும் அவர் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை தனது வர்த்தக நாம தூதுவராக பயன்படுத்தியிருந்த சக்தியூட்டும் பானமாக சந்தையில் விற்பனையாகும் குறித்த வர்த்தக நாமம் இவ்வாறான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.   

இந்த விமர்சனங்களை சீராக்கிக் கொள்ள புதிய உத்திகளை கையாள வேண்டிய நிலை குறித்த வர்த்தக நாமத்துக்கு ஏற்பட்டது. தனது வர்த்தக நாம தூதுவரையும் புதிய அடையாளத்துடன் (அதாவது விளையாட்டுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தாமல்) தனது பிரசார செயற்பாடுகளில் பயன்படுத்தியிருந்தது.  

அவ்வாறே, மஹிந்தவும் தனது நாமத்தை தொடர்ந்து பேணும் வகையில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது, குறிப்பாக கிராமிய மக்களுக்கு மிகவும் தொடர்புடைய விடயங்கள் பற்றி சுவாரஸ்யமான முறையில் உரையாடுவதையும், எப்போதும் தனது இன்முகத்தை வெளிக்காட்டுவதையும் தனது வர்த்தக நாம சந்தைப்படுத்தல் உத்தியாக கையாண்டிருந்தார். குறிப்பாக கிராமிய மக்களுக்கு அவசியமான விடயங்களை பற்றி அவர்கள் மத்தியில் உரையாற்றியதனூடாக அவர்கள் மத்தியில் ஏற்கனவே காணப்பட்ட மஹிந்த எனும் நாமத்துக்கு மீள உயிரூட்டியிருந்தார்.  

பொதுஜன பெரமுன எனும் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றியின் பெரும்பான்மையான சொந்தக்காரர் மஹிந்த. மஹிந்தவின் அடையாளத்துக்கு கிடைத்த வெற்றி இதுவாக அமைந்துள்ளது.   

ஒரு வர்த்தக நாமம் எந்த வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டும், சவால்கள் மற்றும் பின்னடைவுகள் ஏற்படும் போது அவற்றை சமாளித்து எவ்வாறு நுகர்வோர் மத்தியில் வரவேற்பை பெற வேண்டும் என்பதற்கு அரசியல் உதாரணமாக மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிடலாம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X