2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வங்கிகளின் செயற்பாட்டுக்கான நிதிமூலங்கள் எவை?

Editorial   / 2019 மார்ச் 04 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது வாழ்க்கையில் அனைத்து வேளைகளிலும், வங்கிகளின் செயற்பாடானது பின்னிப்பிணைந்ததாகவே இருக்கின்றது. நமக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் பணம் மேலதிகமாகவுள்ள சந்தர்ப்ப‍ங்களில் பணத்தைச் சேமித்துக்கொள்ளவும் மிகவும் பயனுள்ள வகையில், வங்கிகள் நமக்கு உதவி புரிந்து வருகின்றன. 

நமது பணத்தை மூலதனமாகக் கொண்டு செயற்படும் வங்கிகளின் செயற்பாடுகளும் இன்னும் பிற நிதிமூலங்கள் தொடர்பிலும் நாம், எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?   

இலங்கையைப் பொறுத்தவரையில், நிதியியல் கொள்கைகளும் வங்கியியல் செயற்பாடுகளும் ஏனைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, மிகச்சிறந்த தரத்தில் உள்ளதென்பதை மறுக்கமுடியாது. இலங்கையில், அபிவிருத்தி வங்கிகளுக்கு (Development Banks) மிக நீண்டகால வரலாறு உண்டு. முதலாவது அபிவிருத்தி வங்கியானது, 1956ஆம் ஆண்டு, உலக வங்கியின் பரிந்துரையின் பெயரில் உருவாக்கப்பட்டதிலிருந்து, இந்த வரலாறு ஆரம்பிக்கிறது.   

1978ஆம் ஆண்டு வரையில், இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (Development Finance Corporation of Ceylon) மட்டுமே, ஒரேயோர் அபிவிருத்தி வங்கியாக இருந்தது. 1978ஆம் ஆண்டில், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை மேலும் ஊக்குவிக்கும்பொருட்டு, அவற்றுக்குத் தேவையான கடனுதவி உட்பட, நிதி வழங்களைச் செய்யவும், இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்துக்குப் போட்டித் தன்மையை வழங்கவும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஒத்துழைப்புடன் தேசிய அபிவிருத்தி வங்கி (National Development Bank) உருவாக்க அனுமதியளிக்கப்பட்டது. 

இந்த வங்கியின் மற்றுமொரு பிரதான இலக்காகவிருந்தது, இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு, ஏற்றுமதிசார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய, நடுத்தர வணிகங்களை ஊக்குவிப்பதாகும். மேற்கூறிய இரண்டு வங்கிகளுமே, உலக வங்கியால் பெரிதும் நிதியுதவி வழங்கப்பட்டு செயற்பாடுகளைக் கொண்டு நடத்த ஆதரவளிக்கப்பட்ட வங்கிகளாகும். 

இருந்தபோதிலும், உலக ஸ்தாபனங்களையே வெறுமனே நிதிக்காக நம்பி, வங்கிகளை நடத்துவது சாத்தியமற்ற ஒன்றாகும். பெரும்பாலும், அபிவிருத்தி வங்கிகளின் முதன்மையான நோக்கமே, சிறிய நடுத்தர வணிகங்களை ஸ்திரப்படுத்துவதற்காக, நீண்டகாலக் கடன்களை வழங்குவதாக இருக்கும். அப்படியாயின், இந்த வகை வங்கிகள், எவ்வாறு தமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்?   

மிகப்பெரிய தொகையை ஒரே தடவையில் வழங்கிவிட்டு, அதை வசூலிக்க, நிறைய வருடங்களைச் செலவிட வேண்டியிருக்கும். ஆனால், அடுத்தடுத்துக் கடன்களை வழங்க, வங்கிகளுக்கு எப்போதுமே நிதியும் இருக்க வேண்டும். இல்லையெனில், புதிதாக முளைக்கும் வணிகங்களுக்குத் தேவையான நிதியை வழங்க முடியாதநிலை ஏற்பட்டுவிடும். 

இதை அடிப்படையாகக்கொண்டு, மாற்றுத் தீர்வாக அபிவிருத்தி வங்கிகள் கண்டறிந்த வழிமுறையே மிக நீண்டகால முதலீட்டு நிதிச்சேவையாகும். இதன்மூலம், வங்கிகளுக்குத் தேவையான நிதியை, நீண்டகால உறுதிப்பாட்டுடன் மக்களிடமிருந்தே முதலீடு என்கிற பெயரில் பெற முடிந்தது.   

ஆனால், வணிக வங்கிகள் என நம்மோடு நெருக்கமாக இணைந்துள்ள வணிக வங்கிகளின் கதையோ, வேறுமாதிரியாக இருக்கிறது. வணிக வங்கிகள் பெரும்பாலும், வணிகங்களுக்கான நீண்டகாலக் கடன்களை வழங்குவதில் பின்நிற்கின்றன. இதற்கான பிரதான காரணம், வணிக வங்கிகளின் நிதியானது, சேமிப்புக் கணக்குகளில்தான் தங்கியிருக்கிறது. 

பெரும்பாலான வணிக வங்கிகளின் சேமிப்புக்காலம் என்பது, குறுகியதாக இருப்பதன் காரணமாக, மிக நீண்டகாலக் கடன்களை வழங்குவதில், நிதி ரீதியாகப் பிரச்சினைகள் எழுகின்றன. அதாவது, சேமிப்பு வைப்புகளின் முதிர்ச்சிக் (maturity) காலமானது, கடன்களது முதிர்ச்சிக் (maturity) காலத்துடன் ஒப்பிடும்போது, மிகக் குறுகியதாகும். 

இதனாலேயே, வணிக வங்கிகள் உயர் வட்டிவீதத்தை, இறுக்கமான ஆவணக் கட்டுப்பாட்டு முறைகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதன் மூலம், நீண்ட காலக் கடன்களை, மிகக் குறைந்த அளவிலேயே வழங்க முயற்சிக்கின்றன.   

இதற்கு மேலதிகமாக, வணிக வங்கிகளின் செயற்பாடுகளின் அடிப்படையில், அவர்களால் மிக நீண்டகால அடிப்படையில் வழங்கப்படும் நிதிக்கான செலவுகள் (வட்டிவீதம் உட்பட), அதிகமாக இருப்பதன் விளைவாக, சிறிய, நடுத்தர வணிகங்களுக்கு மிகப்பாரிய சுமையையே, இந்த வங்கிகளின் கடன்கள் ஏற்படுத்தும். 

வணிக வங்கிகளிடமிருந்து உயர்வட்டி வீதங்களில் கடனைப் பெற்று, வணிகத்தைக் கொண்டு நடத்தும்போது, அதை மீளச்செலுத்த, அதிக வருமானத்தை, இலாபத்தைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான், நாளாந்த செயற்பாடுகளுக்கான செலவையும் வட்டிச் செலவீனங்களையும் ஈடுசெய்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே, இது நடைமுறைக்கு, மிகமிகச் சாத்தியப்பாடு குறைந்த ஒன்றாகவே, வணிகங்களை பொறுத்தவரையிலும், வங்கிகளைப் பொறுத்தவரையிலும் உள்ளது.   

அப்படியாயின், வங்கிகள் எவ்வாறு தமக்குத் தேவையான நீண்டகால முதலீடுகளைத் திரட்டிக் கொள்கின்றன? வணிகங்களுக்கு நிதியை எவ்வாறு வழங்க முனைகின்றன ?   

இதற்கெனப் பிரத்தியேகமான வழிமுறைகளை வங்கிகள் கையாளுகின்றன. மக்களிடமிருந்து, மிகநீண்ட காலத்துக்குக் கவர்ச்சிகரமான வட்டிவீதங்களை வழங்குகிறோம் எனும் அடிப்படையில், முதலீடுகளைத் திரட்டி, அவற்றைப் பொதுப் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளுகின்றன. 

இதன்மூலம், நாளாந்த பாவனையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பண அளவானது, காணாமல் செய்யப்பட்டு, மக்கள் பார்வையில் சேமிப்பாகவும் முதலீட்டாளர் பார்வையில் முதலீடாகவும் மாற்றப்பட்டு, மீளவும் பண, முதலீட்டுச் சந்தைக்குள் கொண்டு வரப்படுகிறது. 

மேற்கூறிய வழிமுறையில் பணத்தைத் திரட்டிக்கொள்ள முடியாது விடின், நீண்டகால கடன்பத்திரங்களை வெளியிட்டு, தமக்குத் தேவையான முதலீட்டை வங்கிகள் திரட்டிக்கொள்கின்றன. இவற்றுக்கும் மேலாக, இலங்கை போன்ற நாடுகளில் அதிக நிதியை, அரச நிறுவனங்களான ஊழியர் சேமலாப நிதியம் , காப்புறுதித் துறையின் பணம் ஆகியவை, வங்கிகளில் முதலீடு செய்வதன் மூலமாக, வழங்குகின்றன. 

இத்தகைய அரச நிதிகள், மிக நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யப்படுவதால், இவற்றின் மூலம், வங்கிகள் அதீத பயனைப் பெறமுடியும். இவற்றுக்கும் மேலாக, அரச வங்கிகள் அரசாங்கத்தால் வெளியிடப்படும் திறைசேரிப் பத்திரங்கள் ஊடாகவும் நிதியைப் பெற்றுக்கொள்ளுகின்றன.   

மேற்கூறிய நிதிகளில் பெரும்பாலும், நீண்டகால முதலீடுகளாக வங்கிகளுக்கு வருகின்ற நிதியானது, இலங்கையில் வாழும் மக்களில் பெரும்பாலானோரது நேரடி, மறைமுக ஓய்வுகாலத்துக்கான தற்போதைய சேமிப்புகளே ஆகும். ஆனால், அவை வெவ்வேறு பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டு, வணிகங்களின் செயற்பாடுகளுக்காக வங்கிகளை வந்து சேர்கின்றன.   

இதுதான் பெரும்பாலும், எந்தவொரு நாட்டிலும் வங்கிகள் சார்பிலான செயன்முறையாக இருக்கும். ஆனால், இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில், வங்கிகளுடன் இந்த நிதியைப் பங்கிட்டுக் கொள்வதில், போட்டியாளர் ஒருவர் உள்ளார். 

அவர், வேறு யாருமல்ல; ‘இலங்கை அரசாங்கமே’யாகும். இதனால், வங்கிகளுக்குக் கிடைக்க வேண்டிய முழுமையான நிதி, கிடைக்காமல் பங்கிடப்படுகிறது.   

இலங்கை போன்ற பாதீட்டு குறையைக் கொண்டுள்ள நாடுகள், நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி தேவைப்படும் என்கிற அடிப்படையில், இவ்வாறு வணிகங்களுக்கு, வங்கிகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதியை, முடக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. 

பெரும்பாலும், அரசினால் வெளியிடப்படும் முறிகள்,  கடன்பத்திரங்கள் முதலீட்டு பாதுகாப்பின் அதியுச்சத்தைக் கொண்டிருப்பதால், இவற்றுக்கான முதலீட்டுச் சந்தையானது, மிக அதிகமாக இருக்கிறது. 
எனவே, அபிவிருத்தி அடைந்த நாடுகளில், வங்கிகள் அரசுடனும் போட்டிபோட்டுக் கொண்டே, தமக்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொள்ளும் பரிதாபநிலை ஏற்படுகிறது.   

அதிலும், பாதீட்டுக் குறையானது, மிக அதிகமாக உள்ளபோது, அதை நிவர்த்திக்க அரசும் அதிக வட்டி விகிதங்களில் கடன்பத்திரங்களை விநியோகிக்கும். இதுவும், வங்கிகளில் நிதி திரட்டல் செயற்பாட்டைப் பாதிக்கும் மோசமாக நிலைமையாகும்.   

அப்படியாயின், வங்கிகள் ஏன் வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்து, சுயாதீனமாக நிதியைத் திரட்டிக்கொள்ளக் கூடாது?   

அடிப்படையில், குறித்த நாட்டின் அரசாங்கமோ, வங்கிகளோ சர்வதேச நியமங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீடுகளுக்கு அமைவாக, நிதியைத் திரட்டிக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு, அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்று, மட்டத்திலோ அல்லது அதற்குக் கீழாகவோ இருக்குமெனின், அத்தகைய நாடும், வங்கிகளும் மிக அதிகளவில் சர்வதேச ஸ்தாபனங்களிடமிருந்து நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். 

ஆனால், குறித்த நாடு, அபிவிருத்தி அடைந்து வரும் அதன்நிலையில், முன்னேற்றத்தைக் காட்டத் தொடங்கும்போது, இந்த நிதி வழங்கல் குறைக்கப்படும், கடினமாக்கப்படும். இதன் விளைவாக, அரசும், வங்கிகளும் நிதியைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்படும். 

இதனால், உள்நாட்டு நிதியைப் பெற்றுக்கொள்வதில், போட்டித்தன்மை நிலை உருவாக்கப்படுகிறது. இதற்குப் பிரதான காரணம், ஒரு நாட்டின் தலா நபருக்கான வருமானம் அதிகரிக்கும்போது, மக்களின் வாழ்க்கை மட்டமும் சேர்ந்தே அதிகரிப்பதாகக் கணிக்கப்படுகிறது. இதனால், குறித்த நாடு, தனது நிதித்தேவையைத் தானே பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அடைவுமட்டத்தை நோக்கி நகர்வதாகக் கணிப்பிடப்படுவதால், இந்த நிதிக் குறைப்புச் செய்யப்படுகிறது. 

இவற்றுக்கு மாற்றாக, வெளிநாட்டுப் பணச்சந்தை , முதலீட்டுச் சந்தைகள் என்பவற்றின் ஊடாகவும் நிதியைத் திரட்டிக்கொள்ள இயலும். ஆனால், இது சலுகை நிதிகளுடன் ஒப்பிடுமிடத்து, அதிக வட்டிவிகிதங்களை எதிர்பார்க்கும் நிதியாக அமைவதால், இந்த நிதியின் பயன்பாடு, இலங்கை போன்ற நாடுகளில் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.   

இலங்கை போன்ற நாடுகளில், மிகக் குறுகியகாலத்துக்கு ஆட்சிக்குவரும் ஒவ்வோர் அரசுமே, வெவ்வேறு வகைக் கொள்கைகளைக் கொண்டு ஆட்சிக்கு வருகின்றன. அவற்றில் கடந்த காலங்களில் ஆட்சியமைத்த அரசும் சரி, தற்போதைய அரசும் சரி, தமது நீண்டகாலத் திட்டங்களுக்கு, ஊழியர் சேமலாப நிதி உட்பட, பல்வேறு அரச, தனியார் நிதி மூலங்களை, முற்றாகப் பயன்படுத்துகின்றன அல்லது பயன்படுத்தி விட்டன எனலாம். 

இதன்விளைவாக, குறிப்பாக அபிவிருத்தி வங்கிகளுக்கான நிதி கிடைப்பதில் தடங்கல் ஏற்படுகிறது. இதனால், வங்கிகள் வட்டிவீதத்தை உச்சப்படுத்தி, வணிகங்கள் நிதி பெறுகின்ற நிலையைக் கட்டுப்படுத்துகின்றன அல்லது குறைக்கின்றன. இது, வணிகங்கள் மத்தியில், வங்கிகள் தங்கள் இலாப நோக்கத்துக்காக அபிவிருத்தியைப் பற்றிச் சிந்திக்காது, இலாபநலன் கருதிச் செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. 

இந்த நிலையில், வங்கித்துறை மீது, மிக நீண்டகால முதலீடுகளுக்கு வட்டிவீதத்தைக் கட்டுப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டும் சுமத்தப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்தக் குற்றச்சாட்டு அர்த்தமற்றதாகும். இந்தநிலைக்குக் காரணமான அரசே, இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். 

ஆனால், இதனை நிவர்த்திக்கிறோம் என்கிற பெயரில், இலங்கை போன்ற அரசுகள் சிறிய, நடுத்தர வணிகங்களுக்காகப் புதிய அபிவிருத்தி வங்கிகளை உருவாக்குகின்றன. இதனால், போட்டித்தன்மையை உருவாக்கி, வட்டிவீதத்தைக் குறைப்பதாகச் சொன்னாலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட புதிய வங்கிகளும் வேறு வழியின்றி, வட்டிவீதங்களை அதிகரிக்கவே செய்கின்றன.   

உண்மையில், இத்தகைய நிலையைக் கொண்டுள்ள இலங்கை போன்ற அரசுகள், ஆக்கபூர்வமாகப் பாதீட்டுக் குறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே முயற்சிக்க வேண்டும். இதன் விளைவாக, ஊழியர் சேமலாப நிதி, காப்புறுதி நிதி உட்பட அரச, தனியார் நிதிகளில் ஒரு சேமிப்புத் தன்மையை உருவாக்க முடியும். 

இது, வங்கிகளின் வழியாக மீளவும் நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்கக்கூடிய கதவுகளைத் திறக்கும் திறவுகோலாகப் பயன்படும். இதனால், இலங்கை போன்ற நாடுகளின் முதுகெலும்பாகவுள்ள சிறிய, நடுத்தர வணிகங்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிப்பதுடன், வங்கித்துறையும் தங்குதடையின்றிச் செயலாற்ற முடியும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X