Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 31 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது இலங்கையில் நம்பிக்கை அலகுப் பொறுப்பாட்சியில் பிரதானமாக இரண்டு சுட்டி நிதியங்கள் காணப்படுகின்றன. அவையாவன,
வருமான நிதியம் (Income Funds)
உரித்துவ நிதியம் (Equity Funds)
வருமான நிதியம் (Income funds)
வருமான நிதியத்தின் பிரதான நோக்கம் அலகுடைமையாளர்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை பெற்றுக் கொடுப்பதாகும். இந்த நிதியமானது பெரும்பாலும் நிலையான வருமானம் உழைக்கக்கூடிய முதலீட்டு தேக்கங்களிலேயே தனது முதலீடுகளை மேற்கொள்ளும்.
அவையாவன, நிலையான வைப்புகள், திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள், தொகுதிக்கடன்கள், வர்த்தகப் பத்திரங்கள், மீள்விற்பனை ஒப்பந்தங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம், அத்தோடு, இம்முதலீட்டு மூலகங்களும் வெவ்வேறு வகையான நட்டஅச்சங்களைக் கொண்டிருக்கும்.
உதாரணமாக, வங்கி நிலையான வைப்புகள் கூடிய பாதுகாப்பைக் கொண்டிருக்கும் அதேவேளை, வங்கிகள் தவிர்ந்த ஏனைய நிதி நிறுவனங்களில் வைக்கப்படும் வைப்புகளுக்கு, வங்கிகள் வழங்குவதை விடக் கூடிய வட்டி விகிதம் கிடைத்தாலும் வங்கிகளை விட் சற்றுக் குறைவான பாதுகாப்பே வைப்புகளுக்குக் காணப்படுகின்றன.
அதேபோல், திறைசேரி உண்டியல்கள் நிலையான வைப்புகளை விடச் சற்று குறைவான வட்டியை வழங்கினாலும், அரசாங்கத்தினால் வழங்கப்படுவதனால் நட்ட அச்சமற்ற முதலீடாகக் காணப்படுகின்றது. அவ்வாறே திறைசேரி முறிகளும் ஆபத்தில்லாத முதலீடாகும்.
அத்துடன் அது திறைசேரி உண்டியல்களை விட அதிக வருமானத்தை ஈட்டித்தரும். திறைசேரி முறிகள் 2 தொடக்கம் 30 வருடங்கள் வரை முதிர்வுக் காலத்தை கொண்ட நீண்டகால முதலீடாகும். அதேபோல், திறைசேரி உண்டியல்கள் 3 தொடக்கம் 12 மாதங்கள் முதிர்வுக் காலத்தை கொண்டதாகும்.
அவ்வாறே, தொகுதிக்கடன் பத்திரங்கள், வர்த்தகப் பத்திரங்கள் நிறுவனங்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை குறிப்பிடத்தக்களவு முதலீட்டு ஆபத்தையும் கொண்டுள்ளது.
அதாவது, கம்பனிகள் வட்டியையும் முகப்பெறுமதியையும் குறிப்பிட்ட காலப்பகுதியில் திருப்பிச்செலுத்தும் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கி, மூலதனத்தைப் பெறுகின்றது.
ஆனால், சில வேளைகளில் துரதிஷ்டவசமாக சில நிறுவனங்கள், வட்டியையும் முகப்பெறுமதியையும் உரிய காலத்தில் செலுத்தத் தவறலாம் என்ற அச்சம், கம்பனிப் பத்திரங்களில் காணப்படுகின்றன.
அவ்வாறே, பொதுமக்களுக்கு அலகுகளை விற்பனை செய்வதன் மூலம் திரட்டிய நிதியை, எங்கு முதலீடு செய்வது என்ற முதலீட்டுத் தீர்மானத்தை எடுக்கப் பொறுப்பாக உள்ள நிதி முகாமைத்துவக் கம்பனிகள் வருமான நிதிய முதலீடுகளை (முதலீட்டு மூலாதாரம், ஆபத்து, காலம்) என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பிரித்துள்ளன.
உதாரணமாக கில்ட் எட்ஜ் நிதியம் (Guilt Edge Funds) இது திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள், மீள்கொள்வனவு ஒப்பந்தங்கள் என்பனவற்றில் மாத்திம் முதலீடு செய்யும். அத்தோடு மற்றுமொரு நிதியமான பணச்சந்தை நிதியம் (Money Market Funds) ஒரு வருடத்துக்குட்பட்ட முதிர்வு காலத்தைக் கொண்ட முதலீட்டு ஆதாரங்களில் மாத்திரம் முதலீடு செய்யும்.
ஆகவே, முதலீட்டாளர் ஒருவர் வருமான நிதியம், உரித்துவ நிதியம் ஆகிய இரண்டில் வருமான நிதியத்தை தெரிவு செய்வாராயின் அதிலும் மேற்குறிப்பிட்டுள்ளவாறு காணப்படும் உப நிதியங்களையும் தெரிவு செய்வதன் ஊடாகத் தனக்குத் தேவையான மிகச்சிறந்த முதலீடை தேர்வுசெய்து கொள்ளலாம்.
உரித்துவ நிதியம் (Equity Funds)
உரித்துவ நிதியங்களின் பிரதான நோக்கம் முதலீடுகள் மூலம் மூலதனத்தில் அதிகரிப்பை அல்லது மூலதனப் பெறுமதியை அதிகரிக்கச் செய்வதாகும்.
உதாரணமாக நிலம், கட்டடம் போன்றவற்றைக் கொள்வனவு செய்து, நீண்டகாலத்தில் அதன் விலையில் ஏற்படும் அதிகரிப்பின் மூலம், மொத்த முதலீட்டில் ஏற்படும் அதிகரிப்பு போன்றதே இவையாகும்.
இவ்வகையான நிதியங்களின் பிரதான முதலீட்டு மூலமாகக் காணப்படுவது பங்குச்சந்தை முதலீடாகும். இந்நிதியங்களின் பிரதானமான முதலீடாக பங்குச்சந்தை காணப்படுவதால் நட்ட அச்சம் அதிகமாகும். அதேவேளை அனுகூலங்களும் அதிகமாகும்.
பொருளாதார நிலைமைகள், கேள்வி நிரம்பலுக்கு ஏற்ப அன்றாடம் பங்கு விலைகளில் மாற்றம் ஏற்படுத்துவதனால் அதிக நட்ட அச்சம் கொண்ட மூதலீடாகக் காணப்படுகின்றது. நிதி முகாமைத்துவக் கம்பனிகள் முழுமையாகப் பங்குகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே, எந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்வது என்ற தீர்மானத்தை மேற்கொள்ளும்.
இலங்கையில், பங்குச் சந்தையில் 2018 ஜனவரி 30ஆம் திகதி வரை 298 நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. நிதி முகாமைத்துவ கம்பனியானது நாட்டின் தற்போதைய, எதிர்காலப் பொருளாதார நிலைமை, நிறுவனங்களில் இலாப நட்டம், பங்குகளுக்கான கேள்வி நிரம்பல் என்பனவற்றைக் கருத்தில் கொண்டு, மிகச்சிறந்த கம்பனிகளைச் தெரிவுசெய்து அவற்றில் முதலீடு செய்யும். முதலீடுசெய்த கம்பனிகளின் இலாபத்தன்மை அதிகரிக்கும் போது அவற்றின் பங்குகளின் விலையும் அதிகரிக்கும்.
அதன் மூலம் முதலீடு செய்த மூலதனத்தின் பெறுமதியும் அதிகரிக்கும். அத்தோடு நிறுவனங்கள் வழங்கும் பங்குலாபம், ஒதுக்கங்களை மூலதனமாக்கல் உரிமை வழங்கல் போன்றவையும் கிடைக்கும்.
உரித்துவ நிதியத்தின் கீழும் நான்கு உப நிதியங்கள் காணப்படுகின்றன அவை தொடர்பாக விவரமாக அடுத்த வாரம் பார்க்கலாம்.
- இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .