Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
அனுதினன் சுதந்திரநாதன் / 2018 ஜூலை 23 , மு.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெற்றது முதல், இலங்கைக்கான நல்லாட்சி அமையப் பெற்றது.
கடந்த ஆனி மாதத்துடன் மூன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ள இந்த நல்லாட்சி, எந்தவகையில் இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்துள்ளது என்பதை அறிந்துகொள்ளுவது அவசியமாகிறது.
நல்லாட்சி அமையப்பெற்றபோது, பல்வேறு நன்மைகளும் அதுசார் நலன்களும் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றபோதிலும், இலங்கையின் பொருளாதாரத்தில் அது பிரதிபலிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற 2015ஆம் ஆண்டில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது, 4.8%மாகவிருந்தது. இது 2016இல் 4.5%மாகவும், 2017இல் 3.1%மாகவும், இவ்வாண்டின் முதல் காலாண்டில் 3.2%மாகவுமே உள்ளன. இது தெள்ளத்தெளிவாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்து செல்வதையே காட்டுகிறது. இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியம் இவ்வாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 4%த்தை எட்டவேண்டும் என்கிற அழுத்தத்தை வழங்கியுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கி இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சியானது 5%மாகவிருக்கும் என எட்டமுடியாத எதிர்பார்க்கை பெறுபேற்றையும் வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த நான்காண்டுகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் சராசரியை எடுத்து நோக்கின் அது 4%மாகவே உள்ளது.
பொருளாதார ஏமாற்றம்
இந்த நல்லாட்சி, நாட்டின் அரசியல், பொருளாதார வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையுமென எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
கடந்த காலங்களில், பல்வேறு கொள்கைகளோடு பிளவுபடும் கட்சிகள் மற்றும் எதிர்த்தரப்பு அரசியல் கூட்டமைப்பினரின் குறைபாடுகள் ஆகியவை, பொருளாதார கொள்கைகளில் நல்ல மாற்றங்களைச் செய்வதற்கு இடமளிக்கவில்லை.
நல்லாட்சியில் இணைந்திருக்கும் ஒவ்வொரு பங்குதாரரும் மக்களின் செலவில் தன்னைப் புகழ்ந்து கொள்வதற்கு முயற்சி செய்துள்ளனரே தவிர, மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு தேவையானதை செய்யத் தவறியுள்ளனர்.
பொருளாதார குறைபாடுகள்
நல்லாட்சி அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் குறைபாடுகளையும் வெறுப்புகளையும் அடிப்படையாகக்கொண்டு, ஆட்சிக்கு வந்ததுடன், ஆட்சியமைத்த புதிதில் மக்கள் ஆதரவைப் பெற்றுக்கொள்ள, மிகப்பெரும் விலைக்குறைப்புகளையும் கவர்ச்சிகரமான திட்டங்களையும் மக்களுக்கு அறிமுகபடுத்தியிருந்தனர். இது குறுங்காலத்தில் மக்களுக்கு மிகப்பெரும் நலன்களைத் தந்திருந்தாலும், மறைமுகமாக மிகநீண்டகாலத்துக்கான பாதீட்டு செலவீனத்தையும் மெதுவாக அதிகரிக்க வழிகோலியிருந்தது. இந்தப் பாதீட்டு செலவீன அதிகரிப்பானது, சென்மதி நிலுவையிலும் வர்த்தகப் பற்றாக்குறையிலும் தாக்கத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. இது தற்போது பொருளாதாரத்தை ஸ்திரமற்றதாக்கி, பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
அப்படியாயின், இந்த நல்லாட்சி அரசாங்கம், பொருளாதார ரீதியாக இலங்கைக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லையா? என்கிற கேள்வி எழலாம். உண்மையில் வினைத்திறனான திட்டங்களை மிகச்சிறப்பாக, நடைமுறைப்படுத்த முடியாதநிலையே இந்தநிலைக்கும், இவ்வகைக் கேள்வி எழுவதற்கும் காரணமாகியுள்ளது.
உண்மையில், நல்லாட்சி அரசு இலங்கையின் பொதுபடுகடன் சுமையை, எதிர்பார்க்கைக்கும் மேலாக 2017ஆம் ஆண்டில் குறையச் செய்திருந்தது. ஆனால், அந்தநிலை எதிர்வரும் வருடங்களிலும் தொடருமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், மக்களைக் கவரவும், அவர்களுக்கு வெகுமதிகளை வழங்கி அரசாங்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் அரச செலவீனங்களை எதிர்வரும் ஆண்டுகளில் அதிகரித்துக் கொள்ளவேண்டிய தேவையிருப்பதால், 2020ஆம் ஆண்டுக்குள் பாதீட்டுச் செலவை 3.5%மாக குறைவடைய செய்து, பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணும் குறிக்கோள் கேள்விக்குறியாகியுள்ளது.
அதுபோல, நல்லாட்சிக்குள் பிளவு, மத்திய வங்கி திறைசேரி ஊழல், உள்ளூராட்சித் தேர்தல்கள், தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் ஆகியன பொருளாதார நிலையற்ற தன்மையும் மற்றும் வளர்ச்சிக்கான கொள்கைகளை பின்பற்றுவதற்கான அரசாங்கத்தின் திறனையும் பலவீனப்படுத்தியுள்ளது எனலாம்.
திறைசேரி ஊழல்
மத்திய வங்கியின் திறைசேரி ஊழலானது, நல்லாட்சி அரசாங்கத்தின் மிகச்சிறந்த செயல்பாடுகளைக் கூட, மக்களின் மனதில் பதியவிடாது தடுத்துள்ளதுடன், மிகப்பெரும் திசை திருப்பலாகவும் அமைந்துள்ளது. அத்துடன், இது பொருளாதார நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளை அமுலாக்கல் ஆகிய செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளதுடன், நல்லாட்சி அரசின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த நிலையானது, நல்லாட்சிக் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றக் காரணமாகியுள்ளதுடன், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பரசியலுக்கு அதீத வாய்ப்பையும் உருவாக்கித் தந்துள்ளது. இவை பொருளாதார மந்தநிலைக்கும் வழிகோலியுள்ளன.
எதிர்ப்பரசியல்
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுமுதல், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பரசியலானது பல்வேறு வடிவங்களில் அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்துள்ளது. அத்துடன், நல்லாட்சிகுள்ளான பிளவு, ஜனாதிபதியின் ஸ்திரமற்ற முடிவெடுக்கும் தன்மை, தேவையற்ற தலையீடுகள் என்பன எதிர்க்கட்சிகளின் எதிர்பரசியலுக்கும் அவர்களின் செயல்பாடுகளுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
நாள்தோறும் இடம்பெறும் வேலைநிறுத்தங்கள், ஆர்பாட்டங்கள், பேரணிகள், வீதி மறியல் போராட்டங்கள் என்பன மக்களை வெறுப்பின் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளதுடன், நல்லாட்சி அரசாங்கம் அதற்குத் தகுந்த பதிலை வழங்காமலிருப்பது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக, பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளதுடன், வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்களும் முதலீடு செய்யத் தயக்கம் காட்டுக்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதன் ஒட்டுமொத்த விளைவுமே, இலங்கை மக்களையும் அவர்கள் சார்ந்த பொருளாதாரத்தையுமே இறுதியில் பாதிக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் நலன்களில் பொருளாதாரத்துக்கும், அரசியலுக்கும் நலனாக அமைந்த திட்டங்கள் பலவும் உள்ளன. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் மேலைத்தேய நாடுகளுடன் கடைபிடிக்கும் இணக்கமான அணுகுமுறை, இலங்கைக்குள் பல்வேறு முதலீடுகளையும் திட்டங்களையும் பெற்றுத்தந்தே உள்ளன.
முந்தைய ஆட்சியில், தனித்து சீனாவுடனான உறவின் விளைவாக, சர்வதேச நாடுகளிடமிருந்து தனித்துவிடப்பட்ட இலங்கை, தற்போது அனைவராலும் அரவணைத்துச் செல்லப்படும் நாடாக மாறியுள்ளது.
அத்துடன், முன்னைய அரச செயல்பாடுகளின் விளைவாக, இழக்கப்பட்ட பல்வேறு திட்டங்களையும் தற்போதைய நல்லாட்சி அரசு மீளபெற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக, GSP சலுகை இலங்கையின் ஏற்றுமதித்துறையை மீளக்கட்டியமைக்கும் ஒரு திட்டமாக மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், சுற்றுலாத்துறையில் முன்னெப்பொழுதுமில்லாத முன்னேற்றமும் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குச் சாதகம் தரும் விடயங்களாக அமைந்துள்ளன.
இறுதியாக, நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த மூன்றரை ஆண்டு செயல்பாடுகளானது, மக்களிடத்தில் அவ்வரசால் மேற்கொள்ளப்பட்ட நல்ல திட்டங்களையும் நாட்டுக்குக் கொண்டுவந்த அபிவிருத்திகளுக்கும் மேலாக வெறுப்பையும் ஒருவிதமான மாற்றுக் கருத்தியல் நிலையையுமே உருவாக்கியிருக்கிறது.
இதற்கு நல்லாட்சி ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு, அரசிடம் கொள்கைரீதியான உறுதியற்ற தன்மை, முந்தைய அரசைபோல ஊழலுக்கு வழிகோலியமை, நல்ல திட்டங்களையும் மாற்றங்களையும் கூட மக்களிடத்தே கொண்டு சேர்க்காமை என்பன காரணமாக அமைந்துள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக, நல்லாட்சி அரசு, ஆட்சிக்கு வருகின்றபோது, சாதகமாகவிருந்த காலநிலை, எரிபொருள் விலை, விவசாய உற்பத்திகள் ஆகியன தற்போது பாதகமாக மாறியுள்ளன.
கடந்த சிலவருடங்களாகவுள்ள வறட்சி இலங்கையின் விவசாயத்துறையை மிகஅதிகமாகப் பாதித்துள்ளதுடன், எரிபொருள் விலையுயர்வும் அரசின் நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இவையனைத்துமே ஒன்றிணைந்து ஒட்டுமொத்த நல்லாட்சி அரசின் மூன்றரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் பொருளாதார ரீதியான நலன்கள் எதனையுமே மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்கிற விம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இன்னும் சில வருடங்களே மீதமுள்ள நிலையில், மக்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய திட்டங்களையும் செயல்பாடுகளையும் விருப்பு வெறுப்புகளை மறந்து முன்னெடுக்கவேண்டியது அவசியமாகவுள்ளது. இல்லாவிடின், மீளவும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் நிலையைத் தவிர்க்க முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago